Skip to main content

அரசுப் பணிகளை தமிழர்களுக்கு மட்டுமே வழங்க சட்டத் திருத்தம் தேவை - அன்புமணி இராமதாஸ்

Aug 19, 2020 299 views Posted By : YarlSri TV
Image

அரசுப் பணிகளை தமிழர்களுக்கு மட்டுமே வழங்க சட்டத் திருத்தம் தேவை - அன்புமணி இராமதாஸ்  

தமிழ்நாடு அரசு பணிகளாவது முழுக்க முழுக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களால்  நிரப்பப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்..!



பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... "மத்தியப் பிரதேசத்தில் அனைத்து அரசுப் பணிகளும் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்றும், அதற்கான சட்டத்திருத்தங்கள் செய்யப்படும் என்றும் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்திருக்கிறார்.



உள்ளூர் இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமையை பாதுகாக்கும் நோக்கத்துடன் மத்தியப் பிரதேச அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும்.



தமிழ்நாட்டில் அனைத்து அரசுப் பணிகளும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வரும் நிலையில், மத்தியப் பிரதேச அரசு துணிச்சலான முடிவை எடுத்துள்ளது.



ஒருவகையில் பார்த்தால் இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான செயல் போன்று தெரிந்தாலும் கூட, உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய இதைத் தவிர வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது. தமிழ்நாடு அரசும் இதை பின்பற்ற வேண்டும்.



தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக அரசு பணிகளில் பிற மாநிலத்தவர்கள் சேர்வது அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணிகளில் தான் பிற மாநிலத்தவர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்பட்டு வந்தார்கள்.



ஆனால், இப்போது தமிழக அரசு பணிகளிலேயே  மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுகின்றனர். பல்வேறு மாநிலங்களின் பணி நியமனம்  தொடர்பான சட்டங்களில் அதற்கு வாய்ப்புகள் இருப்பதால் தான், பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டு அரசு பணிகளில் ஊடுருவுகின்றனர். அதற்கான ஓட்டையை மத்தியப் பிரதேச அரசு அடைத்துள்ளது.



தமிழ்நாட்டில் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் பிரதிநிதித்துவம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.



அதற்கு காரணம், பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் நடைபெறும் திட்டமிட்ட குளறுபடிகள் தான். சில ஆண்டுகளுக்கு முன்பு கூட  அஞ்சல்துறை பணிக்கான போட்டித் தேர்வுகளில், தமிழ் மொழிக்கான தேர்வுகளில் தமிழே தெரியாத ஹரியானா மாணவர்கள் முதல் இடங்களைக் கைப்பற்றியதாக அறிவித்து, அவர்களுக்கு பணி நியமனம் வழங்கிய கொடுமை நிகழ்ந்தது.



இத்தகைய சூழலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை என்றால், அது மாநில அரசு பணிகள் மட்டும் தான் என்ற நிலை உருவாகியிருக்கிறது.



ஆகவே, தமிழ்நாடு அரசு பணிகளாவது முழுக்க முழுக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களால்  நிரப்பப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.



அதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களைச் செய்து தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமையை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.



 மேலும், தமிழகத்திலுள்ள அனைத்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களிலும் அதிகாரிகள் நிலை தவிர்த்து மீதமுள்ள பணியாளர் பணியிடங்கள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு நிரப்பவும், தமிழகத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் கடைநிலைப் பணிகள் அனைத்தையும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கவும் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை