Skip to main content

டிஜிட்டல் மயமாக்கலின் பங்களிப்பை உச்ச அளவில் பெற வேண்டும் – ஜனாதிபதி

Aug 10, 2023 64 views Posted By : YarlSri TV
Image

டிஜிட்டல் மயமாக்கலின் பங்களிப்பை உச்ச அளவில் பெற வேண்டும் – ஜனாதிபதி 

காலாவதியான பொருளாதார முறைகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும், இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு 21 ஆம் நூற்றாண்டுக்கு பொருத்தமான பொருளாதார முறைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.



பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் விரைவான அபிவிருத்தியை அடைய முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக புதிய சட்டங்கள் கொண்டுவர வேண்டுமெனவும் தெரிவித்தார்.



கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலில் நேற்று (08) இடம்பெற்ற இலங்கைக்கான முக்கிய வர்த்தக வசதிகளை அறிமுகப்படுத்துவதற்கு அடித்தளமிடும் நிகழ்வில் (Launch of Key Trade Facilitation Initiatives in Sri Lanka ) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.



Trade Facilitation Initiatives in Sri Lanka இணையத்தளமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.



இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க:



இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை கற்றுக்கொண்ட விடயங்களில் ஒன்று, இந்த வங்குரோத்து நிலையிலிருந்து மீள வேண்டுமானால் நாம் போட்டிப் பொருளாதாரத்திற்கு செல்ல வேண்டும். ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் நாம் பாடுபட வேண்டும். இதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். மேலும், பொருளாதாரத்தை மறுசீரமைப்பதில், தனியார் துறைக்கும் பொருளாதாரத்தில் அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். தனியார் துறைக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசாங்கம் எப்போதும் தயாராக உள்ளது.



ஆரம்பிக்கப்பட்டுள்ள வர்த்தக வசதி திட்டத்தின் காரணமாக உலக வர்த்தகத்தில் இலங்கைக்கு நேரடியாக பங்களிப்பை வழங்க முடியும். மேலும், பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொருளாதாரத்தின் டிஜிட்டல் மாற்றம் மூலம் விரைவான பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியும். 21ஆம் நூற்றாண்டின் பொருளாதார முறைமை நாட்டுக்கு அவசியமானது. 20 ஆம் நூற்றாண்டின் பொருளாதார முறைகள் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப போதுமானதாக இல்லை. எனவே, 20 ஆம் நூற்றாண்டின் முறைகளை மாற்றுவதன் மூலம், அனைத்து நடைமுறைகளுக்கும் எடுக்கும் நேரத்தைக் குறைத்து வணிக சமூகத்திற்கு உதவும் ஒரு முறை நமக்குத் தேவை. அதற்கு டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் முக்கியமானது.



முதலீடாக இருந்தாலும் வர்த்தகமாக இருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க புதிய பொருளாதார ஆணைய சட்டத்தின் ஊடாக திட்டங்களை தயார் செய்ய வேண்டும். அதற்கேற்ப நாமும் மாற வேண்டும்.



இல்லையெனில், ஒரு நாடோ பொருளாதாரமோ முன்னேறாது. பொருளாதாரம் டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி நகரும் போது, அனைத்துமே அதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.



நாங்கள் புதிய சந்தை வாய்ப்புகளைத் தேடினோம். சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டோம் . பிராந்திய விஸ்தரிப்புப் பொருளாதார கூட்டணி (RCEP) உடன் இணைவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது பாரிய வர்த்தக வாய்ப்பாக கருதலாம். வர்த்தக வசதி மற்றும் டிஜிட்டல் மாற்றம் இல்லாமல் அந்த சந்தையில் நுழைய முடியாது. மேலும், சந்தையை விரிவுபடுத்த இந்தியாவுடன் ஆலோசித்து வருகிறோம்.



ஐரோப்பிய ஒன்றியம் அல்லது அமெரிக்க சந்தைகளை கையாளும் போது வர்த்தக வசதி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் என்பன இலங்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும்.



வர்த்தக ஒருங்கிணைப்பை நாடென்ற ரீதியில் இலங்கை ஊக்குவிப்பதோடு வர்த்தக ஒருங்கிணைப்பு, வர்த்தக வசதி மற்றும் வர்த்தகம் செய்வதற்கான வசதி பற்றிய சுட்டெண்ணில் இலங்கையை உயர்நிலைக்கு கொண்டுவர எதிர்பார்க்கிறோம்.ஆனால் இதற்கெல்லாம் உலகளாவிய வர்த்தக கட்டமைப்பு தேவை.



உலக நாடுகளின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவிய உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிமுறைகளை கடைபிடிப்பது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவுகிறது. தெற்காசியாவே இந்த பொருளாதார சட்டங்களையும் விதிமுறைகளையும் பின்பற்றுகிறது. பொருளாதார வேகத்தை சீர்குலைக்க நாங்கள் தயாரில்லை.



உலகப் பொருளாதார விதிகளை மாற்ற வேண்டும் என்றால் அதற்கு அனைவரின் சம்மதமும் பெற வேண்டும். அந்தச் சட்டங்கள் இலங்கையை பாதிக்கக் கூடியன. யானைகள் சண்டையிடும்போது புல் நசுங்குகிறது. அனைவரும் பயன்படுத்தும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும். தெற்காசியாவைப் போலவே இலங்கையும் உலக வர்த்தக அமைப்பின் விதிகளைப் பின்பற்ற விரும்புகிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.



இந்நிகழ்வில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, முதலீட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, ஜேர்மனியின் பிரதித் தூதுவர் ஒலஸ்ச் மல்க்ஸ்லோ மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை