Skip to main content

காபூல் விமான நிலையத்தில் அலை மோதும் கூட்டம் நெரிசலில் 7 பேர் பரிதாப பலி!

Aug 23, 2021 155 views Posted By : YarlSri TV
Image

காபூல் விமான நிலையத்தில் அலை மோதும் கூட்டம் நெரிசலில் 7 பேர் பரிதாப பலி! 

: தலிபான்களுக்கு பயந்து உயிர் பிழைக்க காபூல் விமான நிலையத்தில் மக்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். கூட்டத்தை கலைக்க தலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பீதியில் ஓடிய மக்களில் 7 பேர், நெரிசலில் சிக்கி பரிதாபமாக பலியாகினர். ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாத அமைப்பு ஆட்சியை பிடித்து விட்டதால், அங்கு வசிக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்கள்  உயிருக்கு பயந்து, வெளிநாடுகளுக்கு தப்ப முயற்சி செய்து வருகின்றனர். சாலை மார்க்கமாக செல்லும் அனைத்து வழிகளையும் தலிபான்கள் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து உள்ளதால், மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.



காபூல் விமான நிலையம் மட்டுமே அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அங்கிருந்து விமானம் மூலம் தப்பிச் செல்வதற்காக காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிந்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க, காபூல் விமான நிலையம் நோக்கி செல்பவர்கள் மீதும் தலிபான்கள் கடந்த 19ம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நேற்றும் விமான நிலையத்திற்குள் நுழைய மக்கள் முண்டியடித்தபோது, அவர்களை கலைப்பதற்காக வானத்தை நோக்கி தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் உயிருக்கு பயந்து மக்கள் தப்பிக்க முயன்றபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியாகினர். நிம்மதியான வாழ்க்கையை தேடி வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முயலும் போதும், தலிபான்களால் ஏற்படும் பீதியில் அப்பாவி மக்கள் உயிர் பறிக்கப்படுவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 



3 சிறப்பு விமானங்களில் இந்தியா வந்த 400 பேர்

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களையும், இதர நாட்டினரையும் சேர்ந்த 400 பேரை நேற்று முன்தினம் முதல் 3 சிறப்பு விமானங்களின் மூலம் ஒன்றிய அரசு மீட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நேற்று காலை இந்தியா வந்து சேர்ந்தனர். இவற்றில் ஆப்கானை சேர்ந்த நரேந்திர சிங் கல்சா, அனார்கலி ஹனர்யார் ஆகிய எம்பி.க்களும் அடங்குவர். கல்சா கூறுகையில், ‘‘ஆப்கானில் கடந்த 20 ஆண்டுகளாக செய்யப்பட்ட எல்லா சாதனைகளும் நாசமாகி விட்டன. ஒன்றும் மிஞ்சவில்லை. எல்லாவற்றின் கதையும் முடிந்து விட்டது,’’ என்றார் சோகமாக.



* தினமும் 2 விமானம் இந்தியாவுக்கு அனுமதி

ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ள போதிலும், காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையம் இன்னும் அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. இங்கிருந்து இந்தியாவை சேர்ந்தவர்களை அழைத்து செல்வதற்காக தினமும் 2 விமானங்களை இயக்க, இந்தியாவுக்கு அமெரிக்க படை அனுமதி அளித்துள்ளது.



* அமெரிக்காதான் காரணம்

ஈரானிய அரசு தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்த தலிபான் செய்தித்  தொடர்பாளர் முகமது நயீம், ‘விமான நிலையத்தில் நடந்த மரணங்களுக்கு  அமெரிக்காதான் காரணம். எங்களுடன் வாருங்கள், உங்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்வோம்  என்று கூறியதாலே, மக்கள் காபூல் விமான நிலையத்தில் கூடுகின்றனர்,’ என்று  கூறினார்.



தலிபான்களுக்கு அங்கீகாரம் பாகிஸ்தான், சீனா நரித்தனம்

ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்திருப்பது உலக நாடுகளுக்கு கவலையை அளித்துள்ளது. இதன் மூலம், இந்த பிராந்தியத்தில் மீண்டும் அல்கொய்தா, ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளின் உயிர் பெறும் என்று அஞ்சுகின்றன. அதே நேரம், சீனாவும், பாகிஸ்தானும் தலிபான்களிடம் அமெரிக்க படைகள் தோற்று ஓடி விட்டதாக உள்ளுக்குள் பூரித்து போயுள்ளன. மேலும், தலிபான்களுக்கு எல்லா வகையிலும் நட்பு கரம் நீட்டி வரும் இந்த இருநாடுகளும், தலிபான் அரசுக்கு உலக நாடுகளின் அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சியில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.யின் தலைவர் ஹமீத் பைஸ், காந்தகாரில் தலிபான் தலைவர்களை சந்தித்து பேசிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதன்மூலம், தலிபான்களின் ஒவ்வொரு அசைவிலும் பாகிஸ்தானின் தொடர்பு இருப்பது அம்பலமாகி இருக்கிறது.



* விமானத்தில் ஒலித்த பாரத் மாதாகி ஜே...

ஆப்கானில் இருந்து 87 இந்தியர்கள், 2 நேபாள் நாட்டினருடன் புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம், தஜிகிஸ்தான் சென்று அங்கிருந்து நேற்று அதிகாலை டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமானத்துக்கு வந்தது. விமானம் தரையிறங்கும் முன்பாக, அதில் இருந்த மக்கள், ‘பாரத் மாதாகி ஜே...’ என உணர்ச்சி பொங்க கோஷ்மிட்டனர்.



* ஐஎஸ் தாக்குதல் அபாயம்

அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தாக்குதல் அபாயம் இருப்பதால், அமெரிக்க அதிகாரிகளின் உத்தரவின்றி காபூல் விமான நிலையத்துக்கு மக்கள் யாரும் வர வேண்டாம்,’ என்று எச்சரித்துள்ளது. மேலும், ஆப்கான் அகதிகளுடன் புறப்படும் விமானங்களை ஏவுகணைகள் மூலம் தீவிரவாதிகள் தாக்கும் அபாயம் இருப்பதால், அதை தடுப்பதற்கான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விமானங்கள் பறக்கின்றன.



டோனி பிளேர் வேதனை

ஆப்கானுக்கு 20 ஆண்டுகளுக்கு முன் தனது நாட்டு ராணுவத்தை அனுப்புவதற்கான உத்தரவை அப்போதைய பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர் தான் பிறப்பித்தார். தற்போது அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டது  பற்றி அவர் கூறுகையில், ‘‘ஆப்கானை விட்டு அமெரிக்கா படை வெளியேறுவது உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு தீவிரவாத குழுவையும் உற்சாகப்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் இந்த முடிவு துயரமானது, ஆபத்தானது, தேவையற்றது,’’ என்றார்.



 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை