Skip to main content

பஹ்ரைன் முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு!

Jul 20, 2021 173 views Posted By : YarlSri TV
Image

பஹ்ரைன் முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு! 

மத்திய கிழக்கு நாடுகளுடன் பொருளாதார உறவை மேம்படுத்துவதற்கான பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சின் ஆணைக்கு இணங்க, பஹ்ரைன் இராச்சியத்தின் கைத்தொழில், வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சயீத் பின் ரஷீத் அல் சயானியுடன் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தொலைபேசி வாயிலாக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.



மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இலங்கையின் பொருளாதார உறவை மேம்படுத்துவதற்காக இந்தக் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை இரு அமைச்சர்களும் ஆராய்ந்தனர்.



இந்தக் கலந்துரையாடலின் போது, தெற்காசியாவின் நுழைவாயிலாக விளங்கும் கொழும்புத் துறைமுக நகரத்தில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புக்களை எடுத்துரைத்த இராஜாங்க அமைச்சர் பாலசூரிய, இந்த விஷேட பொருளாதார வலயத்தின் ஏராளமான வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வதற்காக பஹ்ரைன் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.



பிராந்திய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு விருப்பமான இடமாக மாறியுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பஹ்ரைன் அரசாங்கம் செயற்படுத்திய நடைமுறைகள் குறித்து அமைச்சர் அல்-சயானி விரிவாக விளக்கினார்.



சுற்றுலாத்துறைகளிலான ஒத்துழைப்பு, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கும் ஆக்கபூர்வமான பொருளாதாரம் மற்றும் பல்தரப்பு அரங்கு உட்பட பரஸ்பரம் ஆர்வமுள்ள பல துறைகள் குறித்தும் அமைச்சர்கள் கலநதுரையாடினர்.



இந்தக் கலந்துரையாடலை பஹ்ரைன் இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் பிரதீபா சரம் ஒழுங்கமைத்திருந்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை