Skip to main content

கோப்புகளை கேட்கும் பழக்கத்தை நிறுத்துங்கள் - கவர்னர் கிரண்பெடிக்கு நாராயணசாமி கடிதம்!

Sep 06, 2020 246 views Posted By : YarlSri TV
Image

கோப்புகளை கேட்கும் பழக்கத்தை நிறுத்துங்கள் - கவர்னர் கிரண்பெடிக்கு நாராயணசாமி கடிதம்! 

அமைச்சர்களுக்கு தெரியாமல் கோப்புகளை கேட்கும் பழக்கத்தை நிறுத்திக்கொள்ளுமாறு கவர்னர் கிரண்பெடிக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.



புதுவை பட்ஜெட் அதிகாரி ரவிசங்கர் அமைச்சர் கந்தசாமி தன்னிடம் போன்மூலம் பேசும்போது, ஆதிதிராவிட அமைப்புகள் மூலம் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்ததாகவும், தன்னை பட்ஜெட் பிரிவில் இருந்து வேறுபிரிவுக்கு மாற்ற நிதித்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த கடிதத்தை தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி, அமைச்சர் கந்தசாமிக்கு எழுதிய கடிதத்தில், இளநிலை அதிகாரிகளுடன் விவாதித்து பாதுகாப்பு பயத்தை உருவாக்கவேண்டாம் என்றும் நிதி தொடர்பாக தலைமை செயலாளர் மற்றும் நிதித்துறை செயலாளருடன் விவாதியுங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தின் நகலை முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும் அனுப்பி இருந்தார்.



இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி கவர்னர் கிரண்பெடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-



இருபுறமும் நடந்த சம்பவங்களை கேட்காமல் கவர்னர் தாமே ஒரு முடிவுக்கு வந்து அமைச்சருக்கு, ஜூனியர் அதிகாரிகளுடன் நேரடியாக உரையாட வேண்டாம் தலைமை செயலாளர் மற்றும் செயலாளர்கள் மட்டத்தில் மட்டும் கேள்விகளை கேட்டு உரிய விளக்கங்களை பெற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி உள்ளார்.



அரசியல் நிர்வாகிகள் ஜனநாயக வழிமுறைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் புதுச்சேரி மக்களுக்கு நேரடியாக பொறுப்பாளிகள். கவர்னரால் வழங்கப்படும் இத்தகைய ஆலோசனைகள் அமைச்சர் திறம்பட செயல்பட்டு அவரது ஜனநாயக கடமையை நிறைவேற்ற தேவையான அதிகாரங்களை கட்டுப்படுத்துகிறது.



கவர்னர் வாட்ஸ்அப் குழு மற்றும் தொலைபேசி உரையாடல்கள் மூலம் ஜூனியர் அதிகாரிகளை நேரடியாக தொடர்புகொண்டு முதல்-அமைச்சர், அமைச்சர்கள், தலைமை செயலாளர், அரசு செயலாளர்கள் கவனத்துக்கு வராத வகையில் இளநிலை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்கள், உத்தரவுகளை வழங்குகிறார். இதுபோன்ற நிலையில் கவர்னர் தாம் இங்கே சொல்லியிருப்பதை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவார் என்று நம்புகிறேன். அரசு அதிகாரிக்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறு டி.ஜி.பி.க்கு தாங்கள் கடிதம் அனுப்பிய செயலை கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். இது அமைச்சரின் நிலையை தாழ்வுப்படுத்துகிறது. மேலும் அந்த அதிகாரி புதுச்சேரியின் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதையும் அவருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.



எனது அமைச்சரவை சகாக்களான அமைச்சர்கள் மீது முழு நம்பிக்கையுடன் உறுதியளிக்கிறேன். அவர்கள் எப்போதும் ஜனநாயக கொள்கைகளை நிலைநிறுத்துகிறார்கள். ஒருபோதும் அதனை இழிவுபடுத்தும் எந்தவொரு செயலிலும் ஈடுபடுவதில்லை. புதுச்சேரியின் அனைத்து அரசு அதிகாரிகளும் உங்கள் உற்றார், உறவினர்கள்போல மற்றும் அவர்களை ஊக்கப்படுத்தலும் அவர்களுக்கு மன உறுதி அளித்தலும் எங்கள் பொறுப்பு. இதை சொல்லும் வேளையில் நிர்வாக அமைச்சர் மற்றும் முதல்-அமைச்சருக்கு தெரியாமல் நிழல் கோப்பு கேட்கும் மற்றும் உத்தரவு பிறப்பிக்கும் பழக்கத்தை விரைந்து நிறுத்துமாறு உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.



இந்த செயல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை இருட்டடிப்பு செய்வதாகும். அது ஜனநாயகத்தை கேலி செய்கிறது. அரசியலமைப்பின்படி அமைந்த ஒரு அலுவலகம் இத்தகைய முறையற்ற வகையில் செயல்படுவதையும் அதன் மூலம் அவர்கள் பதவி வகிக்கும் அலுவலகத்தை இழிவுபடுத்துவதையும் ஊக்குவிக்க இயலாது. தலைமை செயலாளர் மற்றும் இதர அரசு செயலாளர்களுக்கு இவ்வாறு பணிக்கு ஒவ்வாதவகையில் செயல்பட வேண்டாம் என்றும் 1963-ம் ஆண்டின் புதுச்சேரி அரசு அலுவல் விதிகளின்படி செயல்பட வேண்டும் என்று அறிவுரை கூற தங்கள் அலுவலகத்தை கேட்டுக்கொள்கிறேன்.



கருத்து மற்றும் உருவாக்கத்தில் ஏற்படும் வேறுபாடுகள் ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாகும். நாம் நமது கடைசி குடிமகனின் குரலைக்கூட உரக்கக்கேட்கும் வகையில் வசதிகள் அளிக்கவேண்டும். ஆனால் சமீபத்திய நாட்களில் அதிகாரத்துவத்தின் செயல்பாட்டிற்கு மாறாக மக்கள் பிரதிநிதிகளை இருளில் மூழ்கடித்து அவர்களின் குரல்களை ஒடுக்க முயற்சிப்பதாக தெரிகிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை