Skip to main content

3 வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

Aug 28, 2021 127 views Posted By : YarlSri TV
Image

3 வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்! 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று அரசின் சார்பில் தனி தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.



மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது. அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-



விவசாயிகளின் வாழ்க்கையில் மட்டுமல்ல தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான நாளாக இந்த நாள் மாறப்போகிறது. அத்தகைய தீர்மானத்தை இங்கே முன் வைக்கிறேன். இந்த மண்ணையும், மக்களையும் காக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசால் திட்டமிடப்பட்டுள்ள தீர்மானம் இன்று நிறைவேறப் போகிறது.



பொதுவாக பல்வேறு மக்கள் நல சட்டங்களை நிறைவேற்றி காட்டிய இந்த மாமன்றத்தில் மத்திய பா.ஜ.க. அரசால் கொண்டு வரப்பட்டுள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதற்கான தீர்மானத்தை நாம் நிறைவேற்றப் போகிறோம்.



இத்தகைய நெருக்கடியான சூழலை மத்திய அரசுதான் உருவாக்கி இருக்கிறது. வேளாண்மையை மேம்படுத்தவும், உழவர்களை காப்பாற்றுவதற்காகவும் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசால் சொல்லப்படும் 3 வேளாண் சட்டங்களும் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதாக இல்லை.



வேளாண்மையை அழிப்பதாக இருக்கிறது என்று வேளாண் மக்கள் சொல்லி வருகிறார்கள். அதனை உணர்த்துவதற்காக கடந்த ஆண்டு முதல் போராட்டத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.



சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு எழுச்சிமிகு போராட்டம் நடந்தது கிடையாது. இவ்வளவு நீண்ட காலம் நீடித்ததும் இல்லை என்று சொல்லத்தக்க அளவில் உழவர்கள் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.



மக்களாட்சி காலத்தில் மக்களுக்கு அளிக்கும் மரியாதை இதுதானா? என்ற கேள்வி ஒருபக்கம் எழுந்து நிற்கிறது.



இத்தகைய சூழலில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள 3 வேளாண் சட்டங்களையும் முழுமையாக எதிர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.



உழவர்கள் பொருட்களை விற்பனை செய்ய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை நம் நாட்டில் வைத்துள்ளோம். இதன் நோக்கத்தையும், செயல்பாட்டையும் சிதைக்கும் நோக்கத்தோடு இந்த சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.



மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு துறைக்கு எந்த மாநில அரசிடமும் ஆலோசனை நடத்தாமல் தன்னிச்சையாக மத்திய அரசு சட்டம் கொண்டு வந்திருப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு விரோதமானது. அதனால்தான் அந்த சட்டங்களை நிராகரிக்க வேண்டியதாகி இருக்கிறது.



இதனால் மாநில அரசின் உரிமைகள் பாதிக்கப்படுகிறது, பறிக்கப்படுகிறது. கூட்டாட்சி தத்துவம் கேள்விக்குள்ளாகிறது. ஜனநாயக அமைப்புகளின் மாண்பு சிதைகிறது. இதனால்தான் இந்த 3 சட்டங்களையும் நிராகரிக்க வேண்டியதாக இருக்கிறது.



மத்திய அரசே கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பின்வரும் 3 வேளாண் சட்டங்களையும் இயற்றி இருக்கிறது.



1. விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வாணிபம், ஊக்குவிப்பு மற்றும் உதவுதல் சட்டம்-2020



2. விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் பாதுகாத்தல். விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்த சட்டம்-2020



3. அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம்-2020



இந்த 3 சட்டங்களுமே வேளாண்மைக்கும், உழவர்களுக்கும் எதிரானவைதான். உழவர்கள் இந்த நாட்டில் இருந்து எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். நெற்றி வியர்வை சிந்தி தாம் விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பது தான் அவர்களது கோரிக்கை.



ஆனால் குறைந்தபட்ச ஆதாரவிலை என்பதை குறைந்தபட்சம் வாய் வார்த்தைக்கு கூட பேசாத சட்டங்கள்தான் இந்த 3 சட்டங்கள்.



மத்திய அரசின், விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வாணிப சட்டமானது பல ஆண்டுகளாக உழவர்களின் விளைபொருட்களை விற்பனை செய்து கொடுப்பதில் பெரும் பங்காற்றி வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் சந்தை பகுதியை உள்நோக்கத்துடன் குறைக்கிறது.



அதாவது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்துகிறார்கள். அவர்கள் சொல்லும் வர்த்தக பகுதி என்பது தெளிவான வரையறைக்குள் உள்பட்டதாக இல்லை.

ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு இது பெருமளவில் வருவாய் இழப்பை ஏற்படுத்தும். இதனால் உழவர்களுக்கான உள் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க முடியாத சூழலும் ஏற்படும்.



மத்திய அரசின் இந்த சட்டத்தினால் மாநில விவசாயிகளுக்கு எந்தவிதமான பயனும் இல்லை என்பது உறுதியாகிறது.



இரண்டாவதாக விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாத்தல் விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்த சட்டம்-2020 என்ற சட்டம் தனியார் கூட்டாண்மை நிறுவனங்களை மாநில அரசின் கண்காணிப்பில் இருந்து விடுவிப்பதற்காகத்தான் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது நன்கு உறுதியாகிறது.



இந்த சட்டத்தினால் லாபகரமான விலையை உழவர்கள் கேட்டு பெற முடியாத நிலை உருவாகும். அது மட்டுமல்ல. தங்களது நில உடைமை உரிமைகள் பறிபோகும் என்று உழவர்கள் அஞ்சுகிறார்கள்.



இந்த சட்டத்தின்படி ஒப்பந்த நிபந்தனைகள் உழவர்களை விட விளைபொருட்களை வாங்கும் தனியாருக்கே சாதகமாக இருக்கும்.

அது மட்டுமல்ல இடுபொருட்கள் விலையும் விலை புள்ளிக்கான விற்பனை விலைக்கு இணக்கமாக இருக்காது. மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடுக்கவும் இச்சட்டத்தில் வழியில்லை.



இந்த சட்டம் விளைபொருளை கொள்முதல் செய்யும் தனியார் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ளது என்பது நடுநிலையாளர்களின் கருத்து.



மூன்றாவதாக அத்தியாவசிய திருத்த சட்டம்-2020 என்று மத்திய அரசால் ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன்படி விளைபொருட்கள் சேமிப்பு கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டுள்ளது.

 



இதனால் குறைந்தபட்ச ஆதார விலை நிறுத்தப்படும். விளைபொருட்களுக்கு உரிய விலை உழவர்களுக்கு கிடைக்காது. ஆனால் சந்தையில் செயற்கையான விலையேற்றம் ஏற்படும்.



இந்த திருத்த சட்டம் மூலம் விவசாயிகள் எந்தவித பயனும் அடையப்போவது இல்லை.



எனவே இந்த 3 சட்டங்களுமே வேளாண்மைக்கு எதிரானதாகவும் உழவர்கள் மற்றும் நுகர்வோருக்கு பாதகமாகவும் அமைந்திருக்கிறது. எனவே இந்த அரசு கண்ணில் வைத்து போற்றும் நம் உழவர்களின் நலன்களை என்றென்றும் பாதுகாத்திடவும், அவர்களது வாழ்வு செழிக்கவும் வேளாண்மை என்பது பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடாமல் தடுக்கவும் அரசியலமைப்பு சட்டத்தின் கூட் டாட்சி தத்துவத்துக்கு எதிராக அமைந்துள்ள மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் எனக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி ஒருமனதாக இந்த மாமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.



கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 9-ந்தேதி தொடங்கி இன்று வரை 385 நாளாக உழவர்கள் இந்த 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து தொடர்ந்து கடுமையாக போராடி வருகிறார்கள். அவர்களது அறவழி போராட்டத்துக்கு மதிப்பளிக்கும் இந்த அரசு இந்த தீர்மானத்தை முன்மொழிகிறது. தீர்மானம் வருமாறு:-



வேளாண் தொழில் பெருகவும் விவசாயிகளின் வாழ்வு செழிக்கவும் இந்த அரசு முக்கியத்துவம் அளித்து இம்மாநிலத்தின் வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மைக்குள் தனி நிதி நிலை அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது.



வேளாண்மை துறையின் பெயரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என மாற்றி ஒரு உயர்ந்த குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு மத்திய அரசு விவசாயிகள் நலனுக்கு எதிராக கொண்டு வந்த சட்டங்கள் முறையே விவசாய உற்பத்தி, வர்த்தகம், வாணிபம், ஊக்குவிப்பு மற்றும் உதவுதல் சட்டம்-2020. விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்த சட்டம்-2020.



அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம்-2020 ஆகிய 3 சட்டங்களும் நமது நாட்டின் வேளாண்மை வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கும் உகந்ததாக இல்லை என்பதால் அவை ரத்து செய்யப்பட வேண்டும் என இந்த சட்டமன்ற பேரவை மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.



இந்த தீர்மானத்தை நிறைவேற்றித் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். இதை சட்டமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.



இவ்வாறு அவர் பேசினார்.



இதைத் தொடர்ந்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் இந்த தீர்மானத்தின் மீது பேசினார்கள். இதைத் தொடர்ந்து இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

 



முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் இன்று கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்க மறுத்து பா.ஜனதா கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி, வானதி சீனிவாசன், டாக்டர் சரஸ்வதி ஆகியோர் வெளியேறினார்கள்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

21 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

21 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

21 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

21 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

21 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

21 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை