Skip to main content

தென் ஆப்பிரிக்கா.. ஊழல்வாதிக்கு "ஆதரவாக" வன்முறை.. தனி நபர் துதியால் சீரழிந்த நாடு.. நடப்பது என்ன?

Jul 17, 2021 162 views Posted By : YarlSri TV
Image

தென் ஆப்பிரிக்கா.. ஊழல்வாதிக்கு "ஆதரவாக" வன்முறை.. தனி நபர் துதியால் சீரழிந்த நாடு.. நடப்பது என்ன? 

தென்னாபிரிக்கா வரலாறு காணாத வன்முறை வெறியாட்டங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஏழ்மை நிலையில் இருக்கக்கூடிய நாடு தென்னாப்பிரிக்கா. படிப்படியாக முன்னேற்றம் கண்டு வந்த நிலையில் ஒட்டுமொத்தமாக இத்தனை வருடம் அடைந்த முன்னேற்றம் கண்முன்னால் தவிடு பொடியாகி விட்டது



சிறுக சிறுக பணம் சேமித்து கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களை நடத்தி வந்த பலரும் மொத்தமாக தங்கள் பொருட்கள் கண்முன்னால் கொள்ளையடிக்கப்பட்டதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.



உலகத்திலேயே வளங்கள் சரி சமமாகப் பங்கிடப்படாமல் ஏற்றத்தாழ்வு மிகுந்த நாடாக இருப்பது தென்னாப்பிரிக்கா. 20% மக்களிடம் அந்த நாட்டின் 70% வளங்கள் குவிந்து கிடக்கின்றன என்கிறது புள்ளிவிவரம். இப்போது நடைபெறும் வன்முறை வெறியாட்டம் அவர்களை மேலும் மோசமான சூழ்நிலைக்குத் தள்ளி விடக் கூடும் என்பதால் அச்சத்தில் உறைந்து போயிருக்கிறார்கள் தென்னாப்பிரிக்கா மக்கள்



இதற்கெல்லாம் காரணம் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா ஆதரவாளர்கள்தான். ஜேக்கப் ஜூமாவுக்கு கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு 15 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்ததை தொடர்ந்துதான் வன்முறை வெடித்துள்ளது. ஜேக்கப் ஜூமாவை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை பயன்படுத்தி கொள்ளைகளை நிகழ்த்தி வருகிறார்கள்.



கடந்த வாரம் ஜேக்கப் ஜூமா போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில்தான், போராட்டமும், வன்முறையும் தீவிரமாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு பிராந்திய பகுதிகளில் இந்த வன்முறை போராட்டம் நடைபெற்று வருகிறது. வன்முறையை ஒடுக்க ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஜேக்கப் ஜூமாவின் "ஜூலு" இனக் குழு தென் ஆப்பிரிக்காவில் அதிகம். அவர்கள்தான் ஜேக்கப்புக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தி வருவதில் முக்கிய பங்காற்றுகிறார்கள்.



உலக புகழ் பெற்ற நகரங்களான டர்பன் மற்றும் பீட்டர்மரிட்ஸ்பர்க் உள்ளிட்ட பல நகரங்களில் வன்முறை வெறியாட்டம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது.வன்முறை மற்றும் கொள்ளையடிப்பின் அளவு மற்றும் தீவிரத்தை சாட்டிலைட் புகைப்படங்கள் காட்டுகிறது. டர்பனில் உள்ள குவாமாஷு ஷாப்பிங் சென்டரில் நடந்த கொள்ளையும் சாட்டிலைட் படங்களில் பதிவாகியுள்ளது.



டர்பனில் அயோபா குளிர் சேமிப்பு கிடங்களை ஒரு பெரும் வன்முறை கூட்டம் சூழ்ந்துள்ளது. இதையும், டர்பனில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்ட் சில்லறை விற்பனை மையத்தில் கொள்ளையடிக்கப்படுவதையும் சாட்டிலைட் படங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. பீட்டர்மரிட்ஸ்பர்க்கின் ப்ரூக்ஸைடு மால் கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்டது. பீட்டர்மரிட்ஸ்பர்க்கில் உணவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள். இது அத்தனையும் சாட்டிலைட் படங்களாக வெளியாகி உலகை உறைய வைத்துள்ளன.



மாக்சர் டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்த செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளது. டஜன் கணக்கான மளிகை மற்றும் உணவுக் கடைகளை வன்முறையாளர்கள் சூறையாடியதையும், கட்டிடங்களைச் சுற்றி சிதறிய குப்பைகளையும் படங்கள் காட்டுகின்றன. மெடிக்கல், ரத்த வங்கி போன்ற அவசரத் தேவைகளுக்காக கடைகளைக் கூட வன்முறையாளர்கள் விடவில்லை. அவற்றையும் மொத்தமாக கொள்ளையடித்து சென்று இருக்கிறார்கள். அவற்றை நடத்தியவர்கள் கூட தற்போது நடுத்தெருவுக்கு வரும் நிலை அங்கு உருவாகியுள்ளது. இதுதான் தற்போதைய தென் ஆப்பிரிக்காவின் மோசமான நிலை.



தென் ஆப்பிரிக்காவின் அதிபராக கடந்த 2009 முதல் 2018ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்த ஜேக்கப் ஜூமா, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளாகியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஜய் குப்தா, அதுல் குப்தா, ராஜேஷ் குப்தா ஆகிய 3 சகோதரர்களும் 1990களில் தென்னாப்பிரிக்காவுக்கு சென்று தொழிலதிபர்களாக உயர்ந்தனர். அவர்களோடு சேர்ந்து ஜேக்கப் ஜூமா ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது.



ஆனால், ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவராக தற்போதைய அதிபா் சிறில் ராமபோசா தோ்ந்தெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, ஜேக்கப் ஜூமாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அவா் மேற்கொண்டார். ஜேக்கப் ஜூமாவுக்கு எதிரான பல்வேறு ஊழல் வழக்குகளில், விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு அரசியல் சாசன நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டிருந்த நிலையில்தான் அவா் நேரில் ஆஜராகாததால் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக அவருக்கு கடந்த மாதம் 29ம் தேதி 15 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஊழல் வழக்கில் ஒத்துழைப்பு தராதவருக்காக அவர் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அதாவது ஊழலுக்கு ஆதரவாக மக்களே போராட்டம் நடத்தும் அவலம்தான் தென் ஆப்பிரிக்காவில் நடக்கிறது. அவர் சார்ந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் இனத் தலைவர் மீது வைத்துள்ள இனப் பற்றும் இந்த நிலைக்கு காரணம். தலைவர் மீதான பக்தி மக்களை எப்படி ஏமாளிகளாக்கும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.



 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days Minutes ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை