Skip to main content

பிரதமர் மோடியுடன் ஆலோசனை நீட் தேர்வு நடத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Jul 17, 2021 162 views Posted By : YarlSri TV
Image

பிரதமர் மோடியுடன் ஆலோசனை நீட் தேர்வு நடத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்! 

தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும். நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வு கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும். எனவே நீட் தேர்வு நடத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் மோடி உடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 



கொரோனா 2ம் அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், 3வது அலை வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கும் என ஐ.சி.எம்.ஆர் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், மூன்றாம் அலையை தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.



இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய 6 மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. 



தலைமை செயலகத்தில், காணொலி காட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை முதன்மை செயலாளர் குமார் ஜயந்த் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.  ஆலோசனை கூட்டத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை: கொரோனா தடுப்பு பணிகளில் இருந்து தாங்கள் பெற்ற மேலான அனுபவங்களை பகிர்ந்துகொண்டதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.



கொரோனா பெருந்தொற்றை சமாளிக்கும் கடினமான பணியை புதிதாக பொறுப்பேற்ற ஓர் அரசு எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்த ஒரே பெரிய மாநிலம் தமிழ்நாடு தான். எனது அரசு இச்சவாலை எதிர்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. தமிழ்நாட்டுக்கான ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கியமைக்காக இந்திய அரசுக்கு முதற்கண் எனது நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்.



பிரதமர், தங்களது நேரடி தலையீட்டை கோரும் சில முக்கியமான விவகாரங்களை உங்கள் கனிவான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவதை, எமது அரசு 6 விழுக்காட்டில் இருந்து முழுமையாகக் தவிர்த்துள்ளதுடன், தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வையும் பெரிய அளவில் வெற்றிகரமாக ஏற்படுத்தியுள்ளது. இதனால், தற்போது தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது. 



எனினும், பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், எங்கள் மாநிலத்துக்கான ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நெருக்கடியை சமாளிக்க, சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி தடுப்பூசிகளை வழங்க கோரியிருக்கிறேன்.



இந்த முக்கியமான பிரச்னையில், நான் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன். 2 கோடி குடும்பங்களுக்கு, இரு தவணைகளில் 4 ஆயிரம் ரூபாயை கொரோனா நிவாரணத் தொகையாக கொடுத்துள்ளோம். மேலும், 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் இந்த குடும்பங்களுக்கு வழங்கியுள்ளோம்.



ஒன்றிய அரசு முன்னுரிமை அட்டைதாரர்களுக்கு வழங்கும் கூடுதல் அரிசியை அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் தமிழ்நாடு அரசு விரிவுபடுத்தியுள்ளது. இதேப்போல், தகுதியுடைய அனைத்து அட்டைதாரர்களுக்கும் இத்திட்டத்தை ஒன்றிய அரசு விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.



அடுத்ததாக, தற்போது நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, கொரோனா தொடர்பான அனைத்து பொருட்களுக்கும் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசை கேட்டுக்கொண்டிருந்தேன்.



அதனைக் கனிவுடன் பரிசீலிக்கவும். மூன்றாம் அலை வரும் எனக் கூறப்படுகிற நிலையில், அதனை சமாளிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இதற்கு ஏதுவாக, மாநிலங்களுக்கு மேலும் பல உதவிகளை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும்.



பள்ளி - கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் தற்போதைய சூழலில், நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்று பரவலுக்கு வழி வகுக்கும். எனவே, பிரதமர் இம்முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும். இப்பெருந்தொற்றை கையாள்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என உறுதியளிக்கிறேன். இதில் இருந்து மீள, உங்களோடும் அனைத்து மாநிலங்களோடும் நாங்கள் துணை நிற்போம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை