Skip to main content

சைலேந்திர பாபுவின் மறுபக்கம்- அரசு பள்ளியில் படித்து அதிகாரத்தை பிடித்தவர்!

Jun 30, 2021 176 views Posted By : YarlSri TV
Image

சைலேந்திர பாபுவின் மறுபக்கம்- அரசு பள்ளியில் படித்து அதிகாரத்தை பிடித்தவர்! 

ஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் இன்றைய இளைஞர்களிடம்... உங்களின் ரோல் மாடல் யார்? என்று கேட்டால், சட்டென்று சொல்லிவிடுவார்கள் சைலேந்திரபாபு என்று.



அந்த அளவுக்கு இன்று காவல்துறையில் பன்முகத் தன்மையோடு தடம் பதித்து இருப்பவர் அவர். குமரி மாவட்டம் குழித்துறையில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த சைலேந்திரபாபு, அரசு பள்ளியில் படித்தவர். பின்னர் வேளாண் பட்டதாரியாகி... 1987-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றார். காவல்துறையில் 3 ஆண்டுகளை கடந்து பணியை தொடரும் சைலேந்திர பாபு தனது 25 வயதிலேயே ஐ.பி.எஸ். அதிகாரியாகி உள்ளார்.



சட்டம்- ஒழுங்கு பிரிவில் பல மாவட்டங்களில் பணியாற்றி இருக்கும் சைலேந்திரபாபு தனது பணியில் தனித்துவமான முத்திரைகளை பதித்தவர். சென்னையில் தான் பணியாற்றிய காலத்தில் ரவுடிகளின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.



கோவையில் சிறுமியை கற்பழித்துக் கொன்ற இளைஞர் ‘என்கவுண்டர்’ செய்யப்பட்ட போது கோவை போலீஸ் கமி‌ஷனராக இருந்தார்.



இப்படி காவல் பணியில் தடம் பதித்த சைலேந்திர பாபு இன்று தமிழக சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி.யாக பொறுப்பேற்றுள்ளார்.



ஐ.பி.எஸ். அதிகாரியாக இருக்கும் அனைவருக்குமே இரண்டு கனவுகள் உண்டு. ஒன்று சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஆவது. இன்னொன்று... தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி. ஆவது.



அந்த வகையில் டி.ஜி.பி.யாக பொறுப்பேற்றுள்ள போலீஸ் அதிகாரி சைலேந்திர பாபு காவல் பணியையும் தாண்டி பல ஆற்றல்களை படைத்தவர்.



போலீஸ் அதிகாரிகளில் உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கும் அதிகாரிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். இதில் முதன்மையானவராக திகழும் சைலேந்திரபாபு அதற்காகவும் தனி புத்தகத்தை எழுதி இருக்கிறார். இது தவிர நீச்சல், துப்பாக்கி சுடுதல், சைக்கிள் பயணம் என இவரது உடல்நலன் சார்ந்த வி‌ஷயங்களை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.



நீச்சலுக்கான போட்டியில் தேசிய அளவில் போலீஸ் அகாடமி மூலம் கோப்பையையும் இவர் வென்றுள்ளார். இவரது வெளிப்படையான செயல்பாடுகள் அனைத்துமே பொது நலன் சார்ந்து இருக்கும். அந்த வகையில் வெளியே எங்கு சென்றாலும் ஏதோ ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி உடல்நலன் சார்ந்த ஆரோக்கியத்துக்கு வழிகாட்டும் வீடியோக்களை வெளியிட சைலேந்திரபாபு தவறுவது இல்லை. இதன் மூலம் சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோர் இவரை பின்தொடர்கிறார்கள்.



தனது வீடியோக்கள் மூலமாக தனி ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தி வைத்து இருக்கும் சைலேந்திர பாபு இயற்கை  உணவுகள் தொடர்பாக பேசி... அதனை சாப்பிட்டுக் கொண்டே வெளியிட்டுள்ள வீடியோக்கள் ஏராளம்...



உதாரணத்துக்கு இளநீர் குடிக்க சென்றால், அதன் பயன் என்ன? என்பது பற்றி விளக்கி வீடியோ வெளியிடுவார். இதேபோன்று நுங்கு சாப்பிட்டால் அதனை பற்றி நுணுக்கமாக பேசுவார். எங்கேயாவது பழக்கடைகளை பார்த்து விட்டால் அங்கே நின்று பழங்களை சாப்பிட்டுக் கொண்டே வீடியோ வெளியிடுவார்.

 



இதுதவிர உடல் நலனை பாதுகாக்க தினமும் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளை வீடியோவாக எடுத்து வெளியிடுவதும் சைலேந்திரபாபுவின் தவிர்க்க முடியாத பழக்க வழக்கங்களில் ஒன்றாகும்.





மொட்டை மாடியில் நின்றபடி உடற்பயிற்சிகளை செய்து இவர் வெளியிட்டு இருக்கும் வீடியோக்கள் பல இன்று இணையதளங்களை ஆக்கிரமித்துள்ளன.



இந்த வீடியோக்களை பார்த்து விட்டு மற்றவர்களுக்காக அதனை ஷேர் செய்பவர்களும் ஏராளம். இதன் மூலம் இவரின் பயனுள்ள வீடியோக்கள் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நல்வழியையும் காட்டி உள்ளன.



இப்படி தனது உடல் நலனை பேணுவதில் அக்கறை காட்டும் சைலேந்திர பாபு, மற்றவர்களும் தங்கள் உடல் நலனை காப்பதில் அக்கறையோடு செயல்பட வேண்டும் என்று அறிவுரைகளையும் வழங்குவார்.



அதே நேரத்தில் படிப்பிலும் சைலேந்திர பாபு கெட்டிக்காரர். மதுரை மற்றும் கோவை வேளாண் பல்கலைக்கழகங்களில் 2 பட்டங்களை பெற்றுள்ள சைலேந்திரபாபு, அண்ணா பல்கலைக்கழகத்தில் பொதுச் சட்டத்தில் இளங்கலை பட்டத்தையும், மக்கள் தொகை கல்வியில் முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் ‘மிஸ்சிங் சில்ட்ரன்’ என்கிற ஆய்வுக்காக டாக்டர் பட்டத்தையும், மனிதவள நிர்வாக படிப்பில் முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார்.



இது தொடர்பாக சைலேந்திர பாபு கூறும்போது, ‘‘நல்ல கல்வியும், உடல் நலனும் நம்மை மேம்படுத்தும்’’ என்று நம்பிக்கை ஊட்டினார்.



கடமை உணர்வுமிக்க பணிக்காக ஜனாதிபதி விருது, உயிர் காத்த செயலுக்காக பிரதமரின் விருது, வீர தீர செயலுக்காக முதல்வரின் விருது உள்ளிட்டவையும் இவரது சிறப்பான பணியில் மகுடமாக அலங்கரித்துக் கொண்டுள்ளன.



‘தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதற்கிணங்க நம்மைப் போல பிறரும் உயர வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட இவர், ஐ.பி.எஸ். அதிகாரிகளாக துடிக்கும் இளைஞர்களுக்காக, ‘நீங்களும் இந்திய காவல் பணியாளர் ஆகலாம்’, ‘நீங்களும் ஐ.பி.எஸ். அதிகாரி ஆகலாம்’ என்கிற 2 புத்தகங்களை எழுதி உள்ளார். இது தவிர உடலினை  உறுதி செய், அமெரிக்காவில் 24 நாட்கள் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்.



காக்கி உடை அணிந்த காவல் அதிகாரிகள் என்றாலே கரடுமுரடானவர்கள் என்கிற தோற்றத்தை முற்றிலுமாக உடைத்து எறிந்தவர் சைலேந்திரபாபு. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற கருணையும், தான் பெற்ற அறிவு மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்கிற ஆர்வமும், நிச்சயம் டி.ஜி.பி. பணியில் சைலேந்திர பாபுவை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும்.  தமிழகம் சட்டம்- ஒழுங்கில் நிச்சயம் மேலோங்கும்.



 



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை