Skip to main content

சுற்றுலா மையம் அமைப்பதனை நிறுத்துமாறு கோரி போராட்டம்!

Mar 26, 2021 249 views Posted By : YarlSri TV
Image

சுற்றுலா மையம் அமைப்பதனை நிறுத்துமாறு கோரி போராட்டம்! 

வவுனியாக்குளம் சுற்றுலா மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரும் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.



வவுனியா குளத்திற்கான மக்கள் செயலணியால் குறித்த சத்தியாக்கிரகப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள்.



வவுனியா மாவட்டத்தின் குடிநீர்த்தேவைக்கான நிலத்தடி நீருக்கும், விவசாய நீர்ப்பாசனத்திற்கும் கால்நடை வளர்ப்பிற்கும் குளங்களே ஆதாரமாக உள்ளன. இந்த நிலையில் வவுனியாவிலுள்ள பல குளங்களும் விவசாய நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு எங்கள் கண்முன்னேயே இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன.



தற்போது சிறியஅளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றுலா மையம் வியாபார நோக்கில் தொடர்ந்து விஸ்தரிக்கப்படுமாயின் குளத்தின் நீரேந்து பகுதி மென்மேலும் குறைவடைந்து செல்லும் அபாயமுள்ளதையும், சுற்றுலாமையத்தின் குத்தகைதாரர் நகரசபையுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகளை மீறிக் கட்டடங்களை அமைத்துள்ளதையும் நாங்கள் சுட்டிக்காட்டியே வந்திருந்தோம்.



இதனால் குளத்தில் போடப்பட்ட மண் முற்றாக அகற்றப்பட்டு குளத்தின் நீரேந்து பகுதி பழையநிலைக்கு கொண்டுவரப்பட வேண்டுமென்பதையும் நீர்ப்பரப்பிற்கு பாதிப்பின்றிய முறையில் மிதக்கக்கூடிய பொறிமுறைகளால் பூங்காவை அமைக்கலாம் என்றும் எமது கோரிக்கைகளில் வெளிப்படுத்தியிருக்கிறோம். எனவே வவுனியாக்குளம் மீதான ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிடில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம் என்றனர்.



போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குளங்களை சாக்கடை ஆக்குவதா அபிவிருத்தி, அடுத்த தலைமுறைகளை குடிநீருக்கு கையேந்தவிடாதே, குளம்காப்போம், குலம்காப்போம், வலிந்துகாணாமல் ஆக்கப்படும் வவுனியாக்குளம், குளமா?குதூகலமா? போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.



போராட்டத்தில் மாவட்டத்தினை சேர்ந்த பொது அமைப்பினர், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல்தரப்புகள், குளத்திற்கான மக்கள் செயலணியினர், பெண்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.



குறித்த போராட்டம் இன்று மாலை 4 மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை