Skip to main content

ஆஸி அணிக்கெதிரான முதல் டெஸ்டில் இந்தியா அணி படுதோல்வி!

Dec 19, 2020 219 views Posted By : YarlSri TV
Image

ஆஸி அணிக்கெதிரான முதல் டெஸ்டில் இந்தியா அணி படுதோல்வி! 

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோவ்வியை சந்தித்துள்ளது.



மறுபுறம் இந்த வெற்றியின் மூலம் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.



அடிலெய்ட்- ஓவல் மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.



இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, 244 ஓட்டங்களுக்குள் சுருண்டது.



இதன்போது இந்தியா அணி சார்பில், அதிகப்பட்ச ஓட்டங்களாக விராட் கோஹ்லி 74 ஓட்டங்களையும், அஜிங்கியா ரஹானோ 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், மிட்செல் ஸ்டாக் 4 விக்கெட்டுகளையும் பெட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஜோஸ் ஹசில்வுட் மற்றும் நாதன் லியோன் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.



இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலியா அணி, 191 ஓட்டங்களுக்கு சுருண்டது.



இதில் அவுஸ்ரேலியா அணி சார்பில், அதிகப்பட்ச ஓட்டங்களாக டிம் பெய்ன் ஆட்டமிழக்காது 73 ஓட்டங்களையும் மார்னஸ் லபுஸ்சேகன் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



இந்திய அணியின் பந்துவீச்சில், அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.



இதனையடுத்து 53 ஓட்டங்கள் முன்னிலையில் 9 விக்கெட்டுகள் வசமிருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸிற்காக போட்டியின் மூன்றாவது நாளை இன்று (சனிக்கிழமை) தொடர்ந்த இந்தியா அணி, 21.1 ஓவர்களில் 27 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. இதன்படி இந்தியா அணி, 36 ஓட்டங்களுக்குள் சுருண்டது.



இதுவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் மிகக் குறைந்த டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கையாகும். முன்னதாக 1974ஆம் ஆண்டு லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில், 42 ஓட்டங்கள் எடுத்ததே மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது.



அத்துடன், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே ஏழாவது மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூஸிலாந்து அணி 26 ஓட்டங்களுக்கு சுருண்டதே மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக உள்ளது.



இன்னிங்ஸில் ஒரு வீரர் இரட்டை இலக்க ஓட்டங்களை பெறாத மூன்றாவது போட்டியாகவும் இப்போட்டி பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதன்போது இந்தியா அணி சார்பில் அதிகப்பட்ச ஓட்டமாக, மாயங் அகர்வால் 9 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.



அவுஸ்ரேலியா அணியின் பந்துவீச்சில், ஜோஸ் ஹசில்வுட், 3 மெய்டன் அடங்களாக 5 ஓவர்கள் வீசி 8 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிட்செல் ஸ்டாக், 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.



இதனைத்தொடர்ந்து 90 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய அவுஸ்ரேலிய அணி, 2 விக்கெட்டுகள் இழப்புக்கு இலக்கை கடந்து வெற்றியை பதிவுசெய்தது.



இதன்போது மத்தியு வேட் 33 ஓட்டங்களுடனும் மார்னஸ் லபுஸ்சேகன் 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.



ஜோ பர்ன்ஸ் 51 ஓட்டங்களுடனும் ஸ்டீவ் ஸ்மித் 1 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது இறுதிவரை களத்தில் இருந்தனர்.



இந்திய அணியின் பந்துவீச்சில், அஸ்வின் 1 விக்கெட்டினை வீழ்த்தினார்.



இப்போட்டியின் ஆட்டநாயகனாக, முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது 73 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அவுஸ்ரேலிய அணித்தலைவர் டிம் பெய்ன் தெரிவுசெய்யப்பட்டார்.



இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 25ஆம் திகதியன்று மெல்பேர்னில் ஆரம்பமாகவுள்ளது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை