Skip to main content

ஏ.டி.எம். இயந்திரங்கள் அமைக்க நிதி உதவி வழங்க வேண்டும்!

Aug 12, 2020 334 views Posted By : YarlSri TV
Image

ஏ.டி.எம். இயந்திரங்கள் அமைக்க நிதி உதவி வழங்க வேண்டும்! 

கூட்டுறவு சங்கங்கள் கணினிமயமாக்கம், ஏ.டி.எம். யந்திரங்கள் அமைப்பது, விவசாய கடன் அட்டை வழஞ்குதல் போன்றவற்றுக்கு நபார்டு வங்கி நிதி உதவி வழங்க வேண்டும் என்று தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வலியுறுத்தியுள்ளார்.



விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதற்கு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களின் வாழ்திறனை அதிகரிக்கும் வகையில், பல்வகை சேவை மையங்களாக மாற்றுவதற்கு இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் நபார்டு வங்கி மற்றும் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி ஆகியவற்றிற்கிடையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.



தமிழ்நாட்டில் நபார்டு வங்கி கூட்டுறவுத் துறைக்கு வழங்கும் நிதியுதவி மற்றும் அவற்றின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், மேலும் பல்வேறு திட்டங்களுக்கு தேவைப்படும் நபார்டு வங்கியின் நிதியுதவி குறித்தும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் அமைப்புகளை பன்முகப் படுத்தி மேம்படுத்துவது குறித்தும் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் இல.சுப்பிரமணியன், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.இளங்கோவன், நபார்டு வங்கியின் முதன்மைப் பொது மேலாளர் எஸ்.செல்வராஜ் மற்றும் நபார்டு வங்கி– கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.



இக்கூட்டத்திற்குப்பின் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-



இக்கூட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு மண்டல நபார்டு வங்கியின் முதன்மைப் பொது மேலாளராக பொறுப்பேற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த எஸ். செல்வராஜூக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.



ரூ.11 ஆயிரம் கோடி பயிர்கடன்



மத்திய அரசு இந்தியாவில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் வாழ்திறனை பெருக்கும் வகையில் பல்வகை சேவை மையங்களாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் கடன் கூட்டுறவுகளின் வளர்ச்சியில் நபார்டு வங்கியின் பணி மிகவும் மகத்தானதாகும். விவசாய உற்பத்தி திறனை மேம்படுத்தவும், கூட்டுறவுகளில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், குறுகிய கால விவசாய கடன், வட்டி மானியம், வட்டி ஊக்கத்தொகை ஆகியவற்றை மத்திய அரசிடமிருந்து காலத்தே பெற்று வழங்குவதில் நபார்டு வங்கி மிக முக்கிய பங்காற்றி வருகிறது.



நடப்பாண்டில் பயிர்க்கடன் வழங்குவதற்கு அரசு நிர்ணயித்துள்ள இலக்கான ரூ.11,000 கோடியில் நபார்டு வங்கி, தனது மறுநிதி கடன் வரம்பினை அறிவிக்கவில்லை. ஆனால், கூடுதல் கடன் வரம்பாக ரூ.2700 கோடியினை 5.3 சதவிகித வட்டியில் வழங்குவதாக அறிவித்துள்ளது. இக்கடன் வரம்பிற்கு பதிலாக ரூ.5000 கோடியினை வழக்கமாக வழங்கப்படும் 4.5 சதவிகித வட்டியில் வழங்கிடவும், முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள 201 சங்கங்களை பல்வகை சேவை வழங்கும் மையங்களாக மாற்றிட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



கூட்டுறவு வங்கிகளில் ஏடிஎம் யந்திரங்கள்



மேலும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களை கணினி மயமாக்குதல் தொடர்பான அனைத்து செலவினங்களையும் நபார்டு வங்கி ஏற்றிடவும், தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மற்றும் மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் மைக்ரோ ஏடிஎம் யந்திரங்களை நிறுவவும், கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள சுமார் 13 லட்சம் விவசாயிகளுக்கு, ரூபே மற்றும் இன்ஸ்டா கார்டு வழங்க தேவையான தொகை முழுவதுமாக வழங்கிடவும் நபார்டு வங்கியின் உயர் அலுவலர்களிடம் கோரப்பட்டது.



2020–21ம் ஆண்டிற்கு நீண்டகால மறுநிதி கடன் வரம்பாக அனுமதித்துள்ள ரூ.600 கோடியை ரூ. 1000 கோடியாக உயர்த்தி வழங்கிடவும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூட்டுறவுத்துறையின் மூலம் கடன் வழங்க ஏதுவாக, கூட்டுறவு நிறுவனங்களை, காப்பீடு நிறுவனத்தில் உறுப்பினராக்கவும், தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் வணிக வங்கிகளின் தொழில் போட்டியினை எதிர்கொள்ளும் வகையில், கூட்டுறவு வங்கிகளும் அனைத்து தொழில்நுட்ப சேவைகளையும் வழங்க ஏதுவாக நபார்டு வங்கி நிதியுதவி வழங்க வேண்டும்.



இதில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களை முழுமையாக கணினி மயமாக்குதல், நவீனமயமாக்குதல், சிறு தானியங்கி பணம் எடுக்கும் யந்திரம் அமைத்தல், தானியங்கி பணம் எடுக்கும் யந்திரம் அமைத்தல், விவசாயக் கடன் அட்டை வழங்குதல், அனைத்து மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளையும் தொடர்பு கொள்ள ஏதுவாக காணொலிக் காட்சி கூடம் அமைத்தல் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த தேவையான நிதியுதவிகளை வழங்கிட நபார்டு வங்கியிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது என்றார்.



இக்கூட்டத்தில், சிறப்பு பணி அலுவலர் க.இராஜேந்திரன், கூடுதல் பதிவாளர்கள் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ், ம.அந்தோணிசாமி ஜான்பீட்டர், கு.ரவிக்குமார், ஆர்.ஜி.சக்திசரவணன், ஆர்.பிருந்தா, ம.முருகன், நபார்டு வங்கியின் அலுவலர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை