Skip to main content

கர்நாடகத்தில் திட்டமிட்டபடி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி அறிவித்தார்.

Jun 10, 2020 271 views Posted By : YarlSri TV
Image

கர்நாடகத்தில் திட்டமிட்டபடி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி அறிவித்தார். 

கர்நாடக பள்ளிக் கல்வி துறை மந்திரி சுரேஷ்குமார் நேற்று உடுப்பிக்கு வந்தார். அதிகாரிகளுடன் ஆலோசனை உடுப்பி மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் மந்திரி சுரேஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கொரோனா வைரஸ் பரவுவதால், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோல் கர்நாடகத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து செய்யப்படுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து மந்திரி சுரேஷ்குமார் கூறியதாவது:-தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் கர்நாடகத்தில் எக்காரணம் கொண்டும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து இல்லை. ஏற்கனவே திட்டமிட்டப்படி கர்நாடகத்தில் வருகிற 25-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடக்கும். பி.யூ.சி. மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள தேர்வு வருகிற 18-ந் தேதி நடக்கும். சி.பி.எஸ்.இ. தேர்வுக்கான தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதில் எந்த குழப்பமும் இருக்கக்கூடாது.மாணவர்களும் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். தேர்வுகள் ரத்து செய்யப்பட்டால் அவர்கள் ஏமாற்றம் அடையக்கூடும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள், தங்கள் விருப்பப்படி தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு மையத்தில் 24 மாணவர்களுக்கு பதிலாக 18 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இரண்டு மேசைகளுக்கு இடையே 3.5 அடி இடைவெளி இருக்க வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 2 முகக்கவசங்கள் வழங்கப்படும்.மாணவர்கள் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு எழுதுவதற்கு முன்பாக சானிடைசர் திரவம் மூலம் மாணவர்கள் கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்படுவார்கள். ஒவ்வொரு 200 மாணவர்களுக்கு ஒரு சுகாதாரத்துறை ஊழியர் நியமனம் செய்யப்படுவார். அவர் தேர்வு மையத்தில் மாணவர்களின் உடல் நிலையை பரிசோதனை செய்வார். மாணவர்கள் முடிந்தவரை வீடுகளில் இருந்தே குடிநீர் கொண்டு வரவேண்டும். கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன்.தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில அரசு செய்துள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு கடைசி கட்ட நினைவூட்டல் வகுப்புகள்(ரிவிசன் கிளாஸ்) வருகிற 12-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடைபெறும். இந்த தேர்வு நடத்துவது குறித்து மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 278 ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஏதாவது ஒரு தேர்வு மையத்தில் மாணவர்களில் யாருக்காவது பாதிப்பு இருப்பது தெரிய வந்தால், மாற்று தேர்வு மையத்துக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தற்போது தேர்வு எழுத முடியாத மாணவர்கள், ஜூலை மாதம் நடக்கும் துணை தேர்வுகளை எழுதலாம். அவர்களும் புதியவர்களாக(பிரஷர்ஸ்) கருதப்படுவார்கள்.கர்நாடகத்தை பொறுத்தவரை வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு தான் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. மாநிலத்தில் இருப்பவர்களுக்கு பாதிப்பு குறைவாக தான் உள்ளது. கர்நாடகத்தில் மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துகளை பெறவும், கலந்துரையாடல் நடத்தவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு தான் கர்நாடகத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். பள்ளிகளை படிப்படியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது முதலில் உயர்நிலை பள்ளி, அதன் பிறகு நடுநிலை பள்ளி, பிறகு தொடக்க பள்ளி என்று பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகளை திறப்பதற்கு முன்பு மந்திரிசபையில் விரிவாக விவாதித்து முடிவு எடுக்கப்படும்.எந்த பள்ளியும் கூடுதல் கட்டணம் செலுத்தும்படி வற்புறுத்தக்கூடாது. பள்ளி கட்டணத்தை தவிர வேறு எந்த கட்டணமும் பள்ளிகள் பெற்றோர்களிடம் இருந்து வசூலிக்கக்கூடாது. சீருடை, புத்தகங்களை வாங்குமாறும் பள்ளிகள் பெற்றோர்களை வற்புறுத்தக்கூடாது. மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தை ஆசிரியர்களின் சம்பளத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை