Skip to main content

11 ஊழியர்களுக்கு கார் பரிசளித்த ஐடி நிறுவனம்!

Feb 09, 2024 39 views Posted By : YarlSri TV
Image

11 ஊழியர்களுக்கு கார் பரிசளித்த ஐடி நிறுவனம்! 

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆர்.ஆர்.நகரில் அம்சவர்தன் மோகன் என்பவர் சொந்தமாக ஐடி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.



தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆர்.ஆர்.நகரில் அம்சவர்தன் மோகன் என்பவர் சொந்தமாக ஐடி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.



ஆரம்பகாலத்திலிருந்து தன் நிறுவனத்தில் பணி புரிந்து, அதன் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உதவியாக இருந்த ஊழியர்களுக்கு அங்கீகாரம் செலுத்தி உற்சாகப்படுத்தும் வகையில் 11 ஊழியர்களுக்கு சொகுசு கார்களை பரிசாக வழங்கியிருக்கிறார். இது அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறது.



இது குறித்து அம்சவர்த்தன் மோகனிடம் பேசினோம், ``ஏழ்மையான பின்னணியைக் கொண்டது என் குடும்பம். அப்பா ரொம்பவே கஷ்டப்பட்டு என்னைப் படிக்க வைத்தார். பல சிரமங்களுக்கிடையே பள்ளிப் படிப்பை முடித்த நான் உறவினர்களிடம் கல்வி உதவி பெற்று பி.டெக் வரை படித்தேன். அதன் பிறகு என்னுடைய சொந்த முயற்சியில் சென்னையில் உள்ள தனியார் ஐடி கம்பெனி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன். அதன் பின்னர் குஜராத், கேரளா எனப் பல இடங்களில் வேலை பார்த்தேன். இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் நல்ல சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்தேன்.



என் குடும்பம் பொருளாதார ரீதியாக வளர்ச்சி கண்டது. வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென என் அம்மாவுக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டது. எனக்காக பல தியாகங்கள் செய்த அம்மாவை அருகில் இருந்து பார்த்து கொள்வதற்காக கொஞ்சமும் யோசிக்காமல் அமெரிக்க வேலையை உதறிவிட்டு ஊருக்கு வந்து விட்டேன். அம்மாவுடன் அருகில் இருந்து, அவரை கண்ணுக்குக் கண்ணாகக் கவனித்துக் கொண்டேன். எவ்வளவு சம்பளம் வாங்கியிருந்தாலும் இதற்கு ஈடாகாது.



இந்த நிலையில் அம்மா உடல் நலம் தேறிய பிறகு மீண்டும் வேலை தேடத்தொடங்கினேன். அப்போதுதான் என் நண்பர் ஒருவர், `உனக்கு நல்ல திறமை இருக்கு... நீ ஏன் வேலைக்குப் போகணும்? சொந்தமாக ஒரு கம்பெனி தொடங்கு!' என்றார். `நல்ல யோசனை... ட்ரை செய்கிறேன்' எனச் சொல்லிவிட்டு 2016-ல் சிறிய முதலீட்டில் பத்துக்குப்பத்து அறையில் பிபிஎஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஐடி கம்பெனியைத் தொடங்கினேன்.



ஆரம்பத்தில் தனியொருவனாக கடுமையான உழைப்பைச் செலுத்தினேன். கம்பெனி சிறிய வளர்ச்சி பெறத் தொடங்கிய பிறகு என் நண்பர்கள் சிலரை வேலைக்குச் சேர்த்துக்கொண்டேன். நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைத்ததற்கு கைமேல் பலன் கிடைத்தது. கம்பெனி அடுத்தடுத்து வளர்ச்சியை நோக்கிச் சென்றது. வேலை பார்க்கும் ஊழியர்களும் பெருகினர். தற்போது என் நிறுவனம் 400 ஊழியர்களுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.



ஒன்பது ஆண்டுகளில் கம்பெனி பெரும் வளர்ச்சியடைந்ததற்கு ஊழியர்கள் முக்கியமான காரணம். அவர்களது உழைப்பை அங்கீகரித்துப் பாராட்ட நினைத்தேன். அப்போது சிறந்த முறையில் வேலை செய்த 11 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கார் பரிசாகக் கொடுக்கும் யோசனை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் புதிய சொகுசுக் கார்களை வாங்கினேன். ஐந்து பெண்கள் உட்பட 11 பேருக்கு அந்தக் கார்களை பரிசாகக் கொடுத்தேன். ஆரம்பத்திலிருந்து என் வெற்றிக்குத் துணை நின்ற ஊழியர்களுக்கு நான் செய்கின்ற கைமாறு தான் இது.



தற்போது தஞ்சாவூரில் மேலும் ஒரு கிளை மற்றும் கோவையில் மற்றொரு கிளை தொடங்கியிருக்கிறேன். பெண்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும். விவசாய பூமியாக அறியப்பட்ட தஞ்சாவூரை ஐடியில் அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் வேலி நகரைப்போல் மாற்ற வேண்டும் என்பது தான் என்னுடைய லட்சியம். வரும் ஆண்டுகளில் பத்தாயிரம் பேருக்கு வேலை தரவேண்டும் என்பது என் ஆசை. அதற்காக ஓடிக் கொண்டிருக்கிறேன். உழைப்புக்கான அங்கீகாரம் கிடைத்து விட்டால் எல்லோரும் வெற்றியாளர்கள் தான். அந்த வகையில் ஊழியர்கள் தான் என்னுடைய உற்சாகம், வெற்றி...எல்லாமே! அதற்குக் காரணமான அவர்களை கெளரவப்படுத்தவே இதைச் செய்தேன்!'' என்றார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை