Skip to main content

உணவுப் பழக்கத்தை ஆயுர்வேதத்துடன் இணைத்த முன்னோர்கள்: பிரதமர் மோடி

Nov 03, 2023 29 views Posted By : YarlSri TV
Image

உணவுப் பழக்கத்தை ஆயுர்வேதத்துடன் இணைத்த முன்னோர்கள்: பிரதமர் மோடி 

இந்தியாவின் நிலையான உணவுக் கலாச்சாரம் பல்லாயிரம் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. நமது முன்னோர்கள் உணவுப் பழக்கத்தை ஆயுர்வேதத்துடன் இணைத்துள்ளனர் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.



தலைநகர் டெல்லியில் ‘உலக உணவு இந்தியா 2023’ என்கிற மெகா உணவுக் கண்காட்சியை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. இது இந்தியாவின் விவசாயிகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கும். கடந்த 9 ஆண்டுகளில், உணவு பதப்படுத்தும் துறைக்கு 50,000 கோடி அன்னிய நேரடி முதலீடு (எப்.டி.ஐ.) கிடைத்துள்ளது.



உணவு பதப்படுத்தும் ஒவ்வொரு துறையிலும் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. நாட்டின் உணவுப் பன்முகத்தன்மை உலக முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகையாகும். இந்தியாவின் நிலையான உணவுக் கலாச்சாரம் பல்லாயிரம் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. நமது முன்னோர்கள் உணவுப் பழக்கத்தை ஆயுர்வேதத்துடன் இணைத்துள்ளனர். உணவு பதப்படுத்தும் தொழிலை வழிநடத்தும் இயற்கையான திறனுக்காக இந்தியாவில் உள்ள பெண்களை பாராட்டுகிறேன்.



2023-ம் ஆண்டு சர்வதேசத் தினை ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது. தினை நமது ‘சூப்பர்ஃபுட் வரிசையில்’ முக்கிய அங்கமாகும். உணவு வீணாவதைத் தடுக்கும் முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். இது நிலையான வாழ்க்கை முறையின் நோக்கத்தை அடைவதில் குறிப்பிடத்தக்க முயற்சியாகும். இந்தியாவின் முதலீட்டாளர் நட்புக் கொள்கைகள் நாட்டின் உணவுத் துறையை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்கின்றன” என்றார்.



நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பசுபதி குமார் பராஸ், பிரஹலாத் சிங் படேல் மற்றும் பர்ஷோத்தம் ரூபாலா ஆகியோர் கலந்து கொண்டனர். ‘உலக உணவு இந்தியா 2023’ நிகழ்வு, இந்தியாவை உலகின் உணவுச் சந்தையாகக் காட்டுவதையும், 2023-ம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாகக் கொண்டாடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.



இது அரசாங்க அமைப்புகள், தொழில் வல்லுநர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு விவாதங்களில் ஈடுபடுவதற்கும், கூட்டாண்மைகளை ஏற்படுத்துவதற்கும், விவசாய உணவுத் துறையில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்கும், நெட்வொர்க்கிங் மற்றும் வணிக தளத்தை வழங்கும்.



இந்த நிகழ்ச்சியில் இந்திய உணவு பதப்படுத்தும் துறையின் புதுமை மற்றும் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், உணவு பதப்படுத்தும் தொழில்துறையின் பல்வேறு அம்சங்களை மையமாகக் கொண்டு 48 அமர்வுகள் நடத்தப்படுகிறது. இது தவிர, நிதி வலுவூட்டல், தர உத்தரவாதம் மற்றும் இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் புதுமைகளையும் வலியுறுத்துகிறது.



இந்நிகழ்ச்சியில் முக்கிய உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் உட்பட 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 1,200-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வெளிநாட்டு வாங்குபவர்களுடன், விற்பனையாளர் சந்திப்பும் இடம்பெறுகிறது. இந்நிகழ்வில், நெதர்லாந்து கூட்டாளி நாடாக செயல்படும் நிலையில், ஜப்பான் நிகழ்வின் முக்கிய நாடாக இருக்கிறது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை