Skip to main content

இலங்கைக்கு வரும் இன்னொரு சீன உளவுக் கப்பல்!

Nov 17, 2023 42 views Posted By : YarlSri TV
Image

இலங்கைக்கு வரும் இன்னொரு சீன உளவுக் கப்பல்! 

இலங்கைக்கு ஷியான் யாங் வாங் -03 என்கிற இன்னொரு உளவுக்கப்பலை அனுப்ப, அந்நாட்டிடம் சீனா அனுமதி கோரியிருக்கிறது. இதற்கு இந்தியத் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.



சீனா, கடல் ஆராய்ச்சி என்கிற பெயரில் தனது நாட்டு உளவுக் கப்பல்களை அடிக்கடி இலங்கைக்கு அனுப்பி வருகிறது. குறிப்பாக கடந்த 2 வருடங்களாக சீன உளவுக் கப்பல்களின் வருகை அதிகரித்திருக்கிறது. இக்கப்பல்கள் இலங்கை கடல் பரப்பில் இருக்கும் பொருளாதார வளம் பற்றி ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படுவதாக சீனா கூறி வருகிறது.



ஆனால், உண்மையில் அக்கப்பல்கள் இந்தியாவை உளவு பார்ப்பதற்காகவே அனுப்பப்படுவதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. அதாவது, சீனக் கப்பல்கள் இலங்கை கடல் பகுதியில் நின்றபடியே, தென் மாநிலங்களில் இருக்கும் இந்தியப் படைகள் உள்ளிட்டவற்றை உளவு பார்ப்பதாக  இந்தியா தரப்பில் கூறப்படுகிறது.



இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், சீனக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. ஆகவே, சீனாவின் உளவுக் கப்பலை இலங்கை கடல் பகுதிக்குள் அனுமதிக்கக் கூடாது என்று இந்தியா தரப்பில் இலங்கை அரசிடம் பலமுறை வலியுறுத்தப்பட்டது.



ஆனாலும், இலங்கை அரசால் சீனக் கப்பல் வருகையைத் தடுக்க முடியவில்லை. காரணம், சீனாவிடமிருந்து இலங்கை அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிகளவில் கடன் பெற்றிருக்கிறது. அதோடு, ஹம்பந்தோடா துறைமுகத்தையும் 99 வருட குத்தகைக்கு இலங்கை அரசுக்கு தாரைவார்த்திருக்கிறது.



அந்த வகையில், சீனாவின் யுவான் வாங் -5 என்கிற உளவுக்கப்பல் கடந்தாண்டு அக்டோபர் மாதம் இலங்கைக்கு வந்து, ஹம்பந்தோடா துறைமுகத்தில் ஒரு வாரம் நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து, இந்த ஆண்டு ‘ஷின் யான் – 6’ என்கிற சீனாவின் மற்றொரு உளவுக்கப்பல் கடந்த மாதம் இலங்கைக்கு வந்தது.



இந்தக் கப்பல் கடந்த 2 வாரங்கள் இலங்கையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது இலங்கை கடல் பகுதிக்கு வெளியே இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இக்கப்பல் கொழும்பு செல்வதற்காக காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், எப்போது சீனா திரும்பும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.



இந்த நிலையில்தான், சீனாவில் இருந்து மேலும் ஒரு உளவுக் கப்பல் இலங்கைக்கு வருகிறது. ‘ஷியான் யாங் ஹாங் – 03’ என்கிற பெயர் கொண்ட இக்கப்பல் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டது. இக்கப்பலை இலங்கைக்கு அனுப்ப அந்நாட்டிடம் சீனா அனுமதி கோரியிருக்கிறது. இக்கப்பலும் இலங்கை கடற்பரப்பின் பொருளாதார வளத்தை ஆராய்வதற்காகவே வருகிறதாம்.



இக்கப்பல் வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகிறது. ஜனவரி 5-ம் தேதி முதல் பிப்ரவரி 20-ம் தேதி வரை 45 நாட்களுக்கு இக்கப்பல் இலங்கை கடல் பகுதியில் நிறுத்தப்பட்டு பல்வேறு ஆய்வுகளை நடத்த திட்டமிட்டிருப்பதாக சீனத் தரப்பில் கூறப்படுகிறது. இந்த உளவுக் கப்பலால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் சீனக் கப்பல் வருகைக்கு இந்தியா மீண்டும் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.



மேலும், அக்கப்பல் வருகைக்கு இலங்கை அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று இந்தியா சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை