Skip to main content

உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

Aug 24, 2023 45 views Posted By : YarlSri TV
Image

உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு! 

 எதிர்காலத்திற்கு தயாராகும் வகையில், ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பிரிக்ஸ் அமைப்பை விரிவாக்கம் செய்ய இந்தியா ஆதரவளிப்பதாக பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரமதர் மோடி பேசினார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகளை உறுப்பினராக கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடக்கிறது. கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த பிரிக்ஸ் மாநாடு இம்முறை நேரில் நடக்கிறது. இதில் பங்கேற்க 3 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றார்.



இந்த மாநாட்டிற்கு தலைமை வகிக்கும் தென் ஆப்ரிக்கா, பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினராக மேலும் சில நாடுகளை இணைத்து விரிவாக்கம் செய்ய பரிந்துரைத்துள்ளது. இது குறித்து ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடந்த மாநாட்டின் நிறைவு கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த 20 ஆண்டுகளில் பிரிக்ஸ் அமைப்பு நீண்ட அற்புதமான பயணத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. உலகின் தெற்கு பகுதியில் வளர்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பில் இந்த அமைப்பின் புதிய வளர்ச்சி வங்கி முக்கிய பங்காற்றுகிறது. பிரிக்ஸ் அமைப்பையும் நமது சமூகங்களையும் எதிர்காலத்திற்கு தயார்படுத்த வேண்டும்.



எனவே, ஒருமித்த கருத்துடன் பிரிக்ஸ் அமைப்பை விரிவாக்கம் செய்ய இந்தியா முழு ஆதரவு தருகிறது. தென் ஆப்ரிக்கா தலைமையின் கீழ் பிரிக்ஸ் அமைப்பு, உலகின் தெற்கு நாடுகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கும் நடவடிக்கையையும் இந்தியா வரவேற்கிறது. இந்தியா தலைமையின் கீழ் ஜி20 அமைப்பில் உலகின் தெற்கு நாடுகளுக்கு அதிக முன்னுரிமை தரப்பட்டு வருகிறது. ஜி20 அமைப்பில் ஆப்ரிக்க யூனியனை நிரந்தர உறுப்பினராக்கும் இந்தியாவின் பரிந்துரைக்கு பிரிக்ஸ் நாடுகள் ஆதரவளிக்கும் என நம்பிக்கையுடன் உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார். நிறைவு கூட்டத்தில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், ‘‘பனிப்போர் மனப்பான்மை இன்னும் நம் உலகை வேட்டையாடி வருகிறது.



எனவே, அமைதியை நிலைநாட்ட அரசியல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை நாம் விரிவுபடுத்த வேண்டும். பிரிக்ஸ் நாடுகள் அமைதியான வளர்ச்சியின் திசையில் பயணிக்க வேண்டும்’’ என்றார். முன்னதாக நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது. விரைவில், இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும், வரும் ஆண்டுகளில் உலகத்துக்கான வளர்ச்சி இயந்திரமாக இந்தியா மாறும் என்பதில் சந்தேகமில்லை.



இந்தியா, தொற்றுநோயை பொருளாதார சீர்திருத்தங்களைச் செய்வதற்கான வாய்ப்பாக மாற்றியதே இதற்குக் காரணம்’’ என்றார். மாநாட்டின் இடையே பிரதமர் மோடி தென் ஆப்ரிக்கா அதிபர் சிரில் ரமபோசாவை சந்தித்து இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.



தேசியக்கொடி காலில் படாமல் எடுத்த மோடி

பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு கூட்டத்தை தொடர்ந்து, அமைப்பின் 5 நாடுகளின் தலைவர்களும் கூட்டாக குழு புகைப்படம் எடுக்க மேடை அமைக்கப்பட்டிருந்தது. இதில் பிரதமர் மோடியும், தென் ஆப்ரிக்கா அதிபர் சிரில் ரமபோசாவும் முதலில் ஏறினர். அங்கு, எந்தெந்த தலைவர்கள் எங்கு நிற்க வேண்டும் என்பதை குறிப்பதற்காக கீழே அந்நாட்டு தேசிய கொடிகள் போடப்பட்டிருந்தன. மேடை ஏறியதுமே இதை கவனித்த பிரதமர் மோடி, தனது காலில் மூவர்ண கொடி படாமல் இருக்க அதை கையில் எடுத்தார்.



அதைப் பார்த்த பிறகு தான் தென் ஆப்ரிக்க அதிபர் ரமபோசா அவரது நாட்டு கொடியை மிதித்துக் கொண்டிருப்பதை கவனித்தார். உடனே கொடியை எடுத்து அங்கிருந்த அதிகாரியிடம் கொடுத்தார். அதே அதிகாரியிடம் கொடியை தருமாறு மோடியிடம் சைகை செய்தார். ஆனாலும் பிரதமர் மோடி நமது தேசிய கொடியை தனது ஓவர்கோட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.



புடின் ஆவேசம்

உக்ரைன் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவால் கைது நடவடிக்கைக்கு பயந்து ரஷ்ய அதிபர் புடின் மட்டும் இந்த கூட்டத்தில் நேரடியாக பங்கேற்கவில்லை. வீடியோ கான்பரன்சிங் மூலம் அவர் பேசுகையில், ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதார தடைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அவை சட்டவிரோதமான தடைகள் என ஆவேசமாக குறிப்பிட்டார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை