சென்னையில் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித் தருவதாக மோசடி!


ராக்கியின் அறிவுறுத்தலின் பேரில் பணத்தைச் செலுத்திய பிறகு, குடும்பத்தினர் அவர்களைத் தொடர்பு கொண்டபோதெல்லாம், அவர்கள் எப்போதும் தெளிவற்ற பதில்களைக் கொடுத்ததாகப் போலீசார் தெரிவித்தனர்.
சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் தனது மகளுக்கு எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தருவதாகக் கூறி, சுங்கத்துறைக் கண்காணிப்பாளர் ஒருவரை ரூ.33.53 லட்சம் மோசடி செய்ததாக 2 பேர் மீது எம்.ஐ.டி.சி (MIDC) போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கப்பல் நிறுவனத்தில் இருந்து ஓய்வுபெற்ற, கண்காணிப்பாளரின் 56 வயது கணவர் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்தார். மும்பை போலீசார் கூறுகையில், கண்காணிப்பாளரின் மகள் ஜூலை 2022-ல் நீட் (NEET) தேர்வு எழுதியுள்ளார், ஆனால் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மகாராஷ்டிராவில் எந்த மருத்துவக் கல்லூரியிலும் சீட் கிடைக்கவில்லை.

புகார் அளித்தவர், சென்னையில் வசிக்கும் தனது உறவினர் மூலம் ராக்கி சாவியோ என்பவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறினார். பாதிக்கப்பட்டவர் சாவியோவுடன் தொலைபேசியில் பேசியபோது, அவர் தனது வணிகப் பங்குதாரரான ஸ்டீபன் டெக்ஸ்டர் பீட்டர் என்பவரின் கைபேசி எண்ணைக் கொடுத்துள்ளார். ஸ்டீபன் ஒரு உலகளாவிய தொழில் ஆலோசகர் என்றும், அவர் தங்கள் மகளுக்குச் சென்னையில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற உதவுவார் என்றும் ராக்கி கூறியுள்ளார். ஸ்டீபனும் ராக்கியும் இதற்கு முன் பல ஏழை மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பிற துறைகளில் சேர்க்கை பெற உதவியுள்ளதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குத் தெரிவிக்கப்பட்டது

பாதிக்கப்பட்ட குடும்பம் தங்கள் மகளின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டதால், செப்டம்பர் 18, 2022-ல் ராக்கியைக் குறிப்பிட்டு ஸ்டீபனைத் தொடர்பு கொண்டு, தங்கள் மகளின் எம்.பி.பி.எஸ் சேர்க்கைக்கு உதவுமாறு கோரினர். அவர்கள் அந்த கல்வியாண்டுக்கான தேவையான ஆவணங்கள், ஆதார் அட்டை நகல்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்களை வாட்ஸ்அப் மூலம் ஸ்டீபனுக்கு அனுப்பியதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலீசாரின் கூற்றுப்படி, ஸ்டீபன் தங்கள் மகளுக்கு எம்.பி.பி.எஸ். சேர்க்கை பெற்றுத் தருவதாக உறுதியளித்து, மொத்த செலவு ரூ.33.53 இலட்சம் ஆகும் என்று கூறினார் – இதில், மகளின் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்காக ரூ.30 லட்சம், சட்டப்பூர்வ சேர்க்கைக் கட்டணம் ரூ.28,600, விடுதி கட்டணம் ரூ.1.75 இலட்சம் மற்றும் தனது சேவை கட்டணமாக ரூ.1.50 லட்சம் அடங்கும். புகார்தாரர் செப்டம்பர் மற்றும் டிசம்பர் 2022 க்கு இடையில், ஜான் பீட்டர் என்ற பெயரைக் கொண்ட வங்கிக் கணக்கில் முழுத் தொகையையும் குற்றவாளிகளுக்கு மாற்றியுள்ளார்.

போலீசார் கூறுகையில், ராக்கியின் அறிவுறுத்தலின் பேரில் பணத்தைச் செலுத்திய பிறகு, குடும்பத்தினர் அவர்களைத் தொடர்பு கொண்டபோதெல்லாம், அவர்கள் எப்போதும் தெளிவற்ற பதில்களைக் கொடுத்தனர். டிசம்பர் 2022-ல் மகளுடன் சென்னைக்குச் சென்ற குடும்பத்தினர் ஸ்டீபனைச் சந்தித்தனர். அவர் அவர்களை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்று, வெளியில் சில மணிநேரம் காத்திருக்க வைத்துள்ளார். ஸ்டீபன் கல்லூரிக்குள் சென்று திரும்பி வந்து, சேர்க்கை உறுதிப்படுத்தல் ஜனவரி 2023-ல் மின்னஞ்சல் மூலம் வரும் என்று அவர்களிடம் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர் மும்பை திரும்பிய பிறகு, ஒரு மாதம் கழித்து அவர்கள் மீண்டும் சந்தேக நபர்களை அழைக்கத் தொடங்கியபோது, ​​அடுத்த கல்வியாண்டான ஜூன் 2023 முதல் தங்கள் மகளுக்குச் சேர்க்கை கிடைக்கும் என்று ஸ்டீபன் கூறினார்.

“பின்னர், குற்றம்சாட்டப்பட்டவர்கள் பணத்தைத் திருப்பித் தருவதாக உறுதியளித்தனர். ஆனால் அவர்கள் தொலைபேசி அழைப்புகளை எடுப்பதையும், செய்திகளுக்குப் பதிலளிப்பதையும் நிறுத்தியபோது, ​​குடும்பத்தினர் சில மாதங்களுக்கு முன்பு போலீஸை அணுகி எம்.ஐ.டி.சி காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தனர்” என்று எம்.ஐ.டி.சி காவல் நிலையத்தின் மூத்த ஆய்வாளர் ரவீந்திர வாணி தெரிவித்தார். இந்த புகார் குறித்து விசாரித்த பிறகு இரண்டு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது

Reviews

0 %

User Score

0 ratings
Rate This

Sharing

Leave your comment

Your email address will not be published. Required fields are marked *