Skip to main content

மும்பையில் கட்டாய கொரோனா பரிசோதனை - மறுத்தால் தொற்று நோய் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

Mar 21, 2021 174 views Posted By : YarlSri TV
Image

மும்பையில் கட்டாய கொரோனா பரிசோதனை - மறுத்தால் தொற்று நோய் சட்டத்தின் கீழ் நடவடிக்கை! 

மும்பையில் பொது இடங்களில் மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று மாநகராட்சி அறிவித்து உள்ளது. மறுத்தால் தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.



மராட்டியத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்தது. நேற்று ஒரே நாளில் 27 ஆயிரத்து 126 பேர் தொற்று நோய்க்கு ஆளாகினர்.



தலைநகர் மும்பையை பொறுத்தவரை புதிதாக 2 ஆயிரத்து 982 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்து 61 ஆகி உள்ளது. இதில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 37 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.



இதேபோல மும்பையில் மேலும் 7 பேர் பலியானதால் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 572 ஆக உயர்ந்து உள்ளது.



இவ்வாறு மும்பையில் தொற்று நோயின் 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. எனவே 2-வது அலையை கட்டுப்படுத்த மும்பை மாநகராட்சி புதிய பரிசோதனை திட்டத்தை வகுத்துள்ளது. அதன்படி பொது இடங்களில் கண்ட இடங்களில் எல்லாம் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. பஸ் நிலையம், ரெயில் நிலையம், மார்க்கெட்டுகள், சுற்றுலா தலங்கள், ஓட்டல்கள், அரசு அலுவலகங்கள் போன்ற பொது இடங்களில் பொது மக்களுக்கு இலவசமாக கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படும். மால்களில் மட்டும் கட்டணம் வசூலித்து கட்டாய பரிசோதனை செய்யப்படும். இவ்வாறு நாள்தோறும் 47 ஆயிரத்து 800 பேருக்கு விரைவு பரிசோதனையான ஆன்டிஜென் முறையில் தொற்று நோய் கண்டறியப்படும்.



இந்த பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்தால் தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மும்பை எச்சரிக்கை விடுத்து உள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை