Skip to main content

அரசியல் நாடகமே முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கைது முயற்சி - இம்ரான் மஹ்ரூப்

Oct 14, 2020 264 views Posted By : YarlSri TV
Image

அரசியல் நாடகமே முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கைது முயற்சி - இம்ரான் மஹ்ரூப் 

அரசின் மீது அதிருப்தி அடைந்துள்ள கடும்போக்குவாதிகளைத் திருப்திப்படுத்தும் அரசியல் நாடகமே முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கைது முயற்சி என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.



கொழும்பில் இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணி தொடர்பான கலந்துரையாடலின் பின் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.



அவர் மேலும் தெரிவித்ததாவது:-



“நாட்டைச் சர்வதிகாரத்துக்கு இட்டுச் செல்லும் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு பௌத்த பீடங்களே எதிர்ப்புத் தெரிவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. கத்தோலிக்க ஆயர் பேரவையும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.



அத்துடன் ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டமை, அரசை ஆதரித்த கடும்போக்குவாதிகள் மத்தியில் அரசின் மீது பாரிய சந்தேகத்தை உண்டு பண்ணியுள்ளது.



எனவே, அரசுக்கு எழுந்துள்ள இவ்வாறான எதிர்ப்புக்களைத் திசை திருப்பி கடும்போக்குவாதிகளைத் திருப்திப்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனைக் கைதுசெய்யும் நாடகம் ஒன்றை அரங்கேற்ற அரசு முயற்சிக்கின்றது.



இந்த அரசியல் பழிவாங்கல்களில் இருந்து அவரைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி என்ற வகையில் நாம் அவருக்குத் துணையாக நிற்போம்.



தற்போது பொருட்களின் விலைவாசி அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. பிழையான பொருளாதாரக் கொள்கையால் இதைச் சமாளிக்க முடியாமல் அரசு அவதியுறுகின்றது.



எமது அரசு அதிகரித்த பத்தாயிரம் ரூபா சம்பளத்தைக் கொண்டே அரச ஊழியர்கள் இந்தப் பொருளாதார நெருக்கடிக்குள்ளும் தமது வாழ்வைக் கொண்டு செல்கின்றனர். ஆனால், கூலித் தொழில் செய்யும் மக்களின் நிலையே கவலைக்கிடமாக உள்ளது. எமது அரசு பெற்றோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைத்தமையாலேயே அவர்களுக்கும் ஒரு வேளையாவது உண்ண உணவு கிடைக்கின்றது.



ஐம்பது கொரோனா நோயாளிகள் அடையாளம் கானப்பட்டபோதே நாட்டை முடக்கினார்கள். ஆனால், இன்று ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோர் அடையாளம் காணப்பட்டும் இதுவரை தொற்றில் இருந்து ஏனையவர்களைப் பாதுகாக்கத் தேவையான பொருத்தமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை” – எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை