Skip to main content

பிரான்சில் இருந்து 2-ம் கட்டமாக மேலும் 4 ரபேல் போர் விமானங்களை பெறுவதற்கான ஏற்பாடுகளில் இந்திய விமானப்படை தீவிரமாக ஈடுபட்டு உள்ளது!

Oct 16, 2020 188 views Posted By : YarlSri TV
Image

பிரான்சில் இருந்து 2-ம் கட்டமாக மேலும் 4 ரபேல் போர் விமானங்களை பெறுவதற்கான ஏற்பாடுகளில் இந்திய விமானப்படை தீவிரமாக ஈடுபட்டு உள்ளது! 

பிரான்சில் இருந்து 2-ம் கட்டமாக மேலும் 4 ரபேல் போர் விமானங்களை பெறுவதற்கான ஏற்பாடுகளில் இந்திய விமானப்படை தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. இதற்காக விமானப்படை அதிகாரிகள் பிரான்ஸ் சென்றுள்ளனர்.



இந்திய விமானப்படைக்கு பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் ரூ.59 ஆயிரம் கோடியில் வாங்குவதற்காக கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தப்படி பிரான்சின் டசால்ட் நிறுவனம் இந்தியாவுக்கு ரபேல் போர் விமானங்களை தயாரித்து வழங்கி வருகிறது.



இந்த விமானங்கள் அனைத்தும் 2023-ம் ஆண்டுக்குள் விமானப்படையில் சேர்க்கப்படும் என சமீபத்தில் விமானப்படை தளபதி பதாரியா கூறியிருந்தார்.



இதில் முதற்கட்டமாக 10 விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இதில் 5 விமானங்கள் இந்திய அதிகாரிகளின் பயிற்சிக்காக அங்கேயே வைக்கப்பட்டு இருக்கும் நிலையில், 5 விமானங்கள் கடந்த ஜூலை மாதம் 29-ந்தேதி இந்தியா வந்தன. அவை கடந்த மாதம் 10-ந்தேதி முறைப்படி இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டு உள்ளன.



ரஷியாவில் இருந்து சுகோய் விமானங்கள் வாங்கியதைத்தொடர்ந்து 23 ஆண்டுகளுக்குப்பின் இந்திய விமானப்படைக்கு மிகப்பெரிய அளவில் வாங்கப்படும் தாக்குதல் ரக விமானங்கள், ரபேல் போர் விமானங்கள் ஆகும். விமானப்படையில் சேர்க்கப்பட்டு உள்ள 5 ரபேல் விமானங்களும் இந்தியா-சீனா இடையே மோதல் போக்கு நீடித்து வரும் லடாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.



இந்த நிலையில் 2-ம் கட்டமாக மேலும் 4 விமானங்களை பெறுவதற்கான ஏற்பாடுகளில் இந்திய விமானப்படை தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. இந்த விமானங்களை பெறுவதில் இறுதிக்கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக விமானப்படையின் அதிகாரிகள் குழு ஒன்று பிரான்ஸ் சென்றுள்ளது.



விமானப்படை கேப்டன் மட்டத்திலான அதிகாரி ஒருவர் தலைமையிலான ரபேல் திட்ட மேலாண்மை குழு ஒன்று பாரீசில் அலுவலகம் அமைத்து ஏற்கனவே இயங்கி வருகிறது. அவர்களுடன் தற்போது சென்றுள்ள அதிகாரிகளும் இணைந்து அங்குள்ள செயின்ட் டிசைர் விமானப்படை தளத்தில் முகாமிட்டு, ரபேல் விமானங்களை பெறுவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.



விமானப்படை துணைத்தளபதி (திட்டங்கள்) தலைமையில் கடந்த வாரம் சென்றுள்ள இந்த நிபுணர் குழுவினர், தளவாட சிக்கல்கள் மேற்பார்வை, விமானிகளுக்கான பயிற்சி, தொழில்நுட்ப பிரச்சினைகள் போன்றவற்றை ஒருங்கிணைத்து வருகின்றனர். 2-ம் கட்டமாக இந்தியாவுக்கு வழங்கப்படும் 4 ரபேல் போர் விமானங்களும் அடுத்த 4 வாரங்களுக்குள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



ரபேல் போர் விமானங்களில் இந்தியாவுக்கு ஏற்ற வகையில் சிறப்பு வசதிகள் மற்றும் ஆயுதங்களை இணைக்கும் பணிகளை கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இந்திய விமானப்படை அதிகாரிகள் அடிக்கடி பிரான்ஸ் சென்று கவனித்து வருகின்றனர். இதைப்போல இந்த விமானங்களை இயக்குவதற்காக இந்திய விமானப்படை விமானிகள் அங்கு தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை