Skip to main content

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிப்பது திரையுலக வாழ்க்கைக்குக் நல்லதல்ல - சீமான் எச்சரிக்கை

Oct 15, 2020 243 views Posted By : YarlSri TV
Image

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிப்பது திரையுலக வாழ்க்கைக்குக் நல்லதல்ல - சீமான் எச்சரிக்கை 

முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்திலிருந்து விலகுகிற முடிவை விஜய் சேதுபதி உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.



இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைப்படத்தில் தம்பி விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பான செய்தியை அறிந்தேன்.



தம்பிக்கு நாம் சொல்லத் தேவை எதுவுமிருக்காது; அவரே புரிந்துகொண்டு அப்படத்திலிருந்து விலகுவார் என அமைதிக் காத்தேன். ஆனால், தற்போது அப்படத்தின் அடுத்தகட்டப்பணி தொடங்கியிருப்பதால் தம்பிக்கு அன்போடு அறிவுறுத்துகிறேன். முத்தையா முரளிதரனை வெறுமனே ஒரு விளையாட்டு வீரர் எனச் சுருக்கி மதிப்பிட முடியாது.



தனது உலகளாவியப் புகழ் வெளிச்சத்தைக் கொண்டு சிங்கள அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையையும், இன ஒதுக்கல் கொள்கைகளையும் நியாயப்படுத்திப் பேச, தமிழர் எனும் இன அடையாளத்தைப் பயன்படுத்தும் சிங்களப்பேரினவாதத்தின் கைக்கூலியே முரளிதரன். 2 இலட்சம் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டு ஈழ நிலம் முற்றாய் பிணக்காடாய் மாறி, இரத்தச்சகதியிலே எமது உறவுகளின் உடல்களும், எங்கும் தமிழர்களின் மரண ஓலங்களும் கேட்ட நொடிப்பொழுதில் எவ்விதத் தயக்கமோ, குற்றவுணர்வோ இன்றி, ‘இனமழிப்பு செய்யப்பட்ட அந்நாளை எனது வாழ்வின் மகிழ்ச்சிகரமான நாளாகக் கருதுகிறேன்’ என அறிவித்தவர் முத்தையா முரளிதரன்.



இனப்படுகொலையாளன் மகிந்தா ராஜபக்சே நல்லாட்சி தருவதாகக் கூறிய முரளிதரன், அவரை கறுப்பினப்போராளி நெல்சன் மண்டேலாவோடு ஒப்பிட்டவர்.



அங்கு நடந்தத் தேர்தல்களின்போது தீவிர தமிழர் எதிர்ப்பு மனநிலை கொண்ட சிங்கள இனவாதிகளுக்கு ஆதரவாகவும், காணாமல் போன தங்கள் பிள்ளைகளை மீட்டுத்தர வேண்டி தமிழ்த்தாய்மார்கள் நடத்திய போராட்டத்தை துச்சமென நினைத்து அதனைக் கொச்சைப்படுத்தியும் பேசியது துரோகத்தின் உச்சம்” என்று குறிப்பிட்டுள்ளார்.



தொடர்ந்து அவரது அறிக்கையில், |”இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் முரளிதரன் உட்பட எவரும் தமிழகத்தில் விளையாடுவதற்கு முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் தடைவிதித்ததை தம்பி விஜய் சேதுபதி அறியாததா? அதுவெல்லாம் தெரிந்திருந்தும் முரளிதரன் வாழ்க்கைப்படத்தில் நடிக்க முனைவதை எப்படி நம்மால் ஏற்க முடியும்? திரையரங்குகளில் வெளியிடாது இணையம் வாயிலாகத் திரைப்படத்தை வெளியிடலாம் என தம்பி விஜய் சேதுபதி நினைத்து செயல்படத் தொடங்கினால் அது வருங்காலங்களில் அவரது மற்றப்படங்கள் வெளியிடுவதில் சிக்கலை ஏற்படுத்தும்.



விஜய் சேதுபதி உலக அரசியலும், நாட்டின் சூழலும் தெரியாதவரல்ல. அவர் ஆளும் மத அடிப்படைவாதிகளுக்கு எதிராகக் கருத்து வெளியிட்ட நேரத்திலெல்லாம் அவருக்கு ஆதரவாகவே நாம் நின்றிருக்கிறோம். இது வெறும் படமல்ல என்பதை உணர்ந்து, இதிலிருக்கும் அரசியலின் ஆபத்தை உணர்ந்தே இப்படம் வெளியாவதற்கு முன்பே எதிர்க்கிறோம். அதனை விஜய் சேதுபதி உணர்ந்துகொள்ள படத்திலிருந்து விலகுவதற்கான காலநேரத்தை அவருக்கு அளித்தோம்.



ஆனால், அதனையெல்லாம் துளியும் பொருட்படுத்தாது படத்தை உருவாக்கம் செய்ய முனைந்திடுவது கடும் கண்டனத்திற்குரியது. மேலும், அது உலகமெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளத்து உணர்வுகளை உரசிப் பார்ப்பதாகவே இருக்கிறது. ஈழத்தில் நடந்த இனப்படுகொலையையும், முத்தையா முரளிதரன் அதனை நியாயப்படுத்திப் பேசுவதையும் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இது அறியாமையால் நிகழ்ந்தவையாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.



தமிழர்களின் உணர்வுகளுக்கு அணுவளவும் மதிப்பளிக்காது அப்படத்தில் நடித்திட முனைப்புகாட்டுவது விஜய் சேதுபதியின் திரையுலக வாழ்க்கைக்கு நல்லதல்ல. ராஜபக்சேவின் மகன் இப்படத்தைக் கொண்டாடும்போதே அடுத்த நொடியே அப்படத்திலிருந்து விலகியிருக்க வேண்டும்.



அதற்குப் பிறகும், எந்த நம்பிக்கையில் படத்தின் முன்னோட்டக்காணொளி வெளியீட்டை செய்தீர்கள்? இனத்துரோகி முரளிதரன் வாழ்க்கைப்படத்தை தமிழகத்திலேயே திரையிட்டுவிடலாம் எனும் அளவுக்கு எண்ணம் எங்கிருந்து வந்தது? முரளிதரன் எனும் சிங்களக் கைக்கூலியைக் கொண்டாடினால் தமிழர்களின் மனங்களிலிருந்து தூக்கி எறியப்படுவோம் என்பதை உணர வேண்டாமா? முரளிதரனின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்தி கொழும்பு வீதிகளில் வேண்டுமானால் திரையிடலாம்.



தமிழகத்தின் வீதிகளில் ஒருநாளும் அது நடக்கப்போவதில்லை. ஆகவே, உலகெங்கும் வாழும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக இப்படத்திலிருந்து முற்றிலுமாக விலகும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என தம்பி விஜய் சேதுபதிக்கு அன்போடு அறிவுறுத்துகிறேன் ” இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



முன்னதாக முரளிதரன் பயோபிக்கில் நடிப்பதை கைவிடக்கோரி பாரதிராஜா, ராமதாஸ், ஜி.கே. வாசன், கவிஞர் தாமரை உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்துள்ளது குறிபிடத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை