Skip to main content

ஒரே நாளில் 78 ஆயிரம் பேருக்கு கொரோனா; குணம் அடைந்தோர் எண்ணிக்கை 29 லட்சத்தை தாண்டியது!

Sep 03, 2020 220 views Posted By : YarlSri TV
Image

ஒரே நாளில் 78 ஆயிரம் பேருக்கு கொரோனா; குணம் அடைந்தோர் எண்ணிக்கை 29 லட்சத்தை தாண்டியது! 

இந்தியாவில் ஒரே நாளில் 78 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குணம் அடைந்தோர் எண்ணிக்கை 29 லட்சத்தை தாண்டியது . மொத்தம் பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 4.43 கோடியாக அதிகரித்துள்ளது.



கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியின் ஆவேச தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று மதியம் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் வெளியிட்ட புள்ளி விவரப்படி, உலகமெங்கும் 2 கோடியே 59 லட்சத்து 83 ஆயிரம் பேரை தொற்று பாதித்துள்ளது. 8.62 லட்சம் பேர் தொற்றால் மரணம் அடைந்துள்ளனர். பாதிப்பில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் 62.60 லட்சம் பேருக்கு தொற்று பாதித்த நிலையில், 1.88 லட்சம் பேர் இறந்துள்ளனர். 2-ம் இடத்தில் இருக்கிற பிரேசில் நாட்டில் 39.52 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதில், 1.22 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். 3-வது மோசமான நாடாக இந்தியா தொடர்கிறது.



இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் 78 ஆயிரத்து 357 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. நேற்று முன்தினம் 10 லட்சத்து 12 ஆயிரத்து 367 மாதிரிகளுக்கு கொரோனா சோதனை நடைபெற்ற நிலையில், இந்தளவு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மொத்த பாதிப்பு என்பது 37 லட்சத்து 69 ஆயிரத்து 523 ஆக உயர்ந்துள்ளது.



நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,045 பேர் பலியாகி உள்ளனர். மராட்டியத்தில் அதிகபட்சமாக 320 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்து கர்நாடகத்தில் 135 பேர் இறந்து இருக்கிறார்கள். மூன்றாவது அதிகபட்ச உயிரிழப்பை தமிழகம் சந்தித்துள்ளது.



மற்ற மாநிலங்களை பொறுத்தவரையில் ஆந்திராவில் 84, பஞ்சாப்பில் 59. உத்தரபிரதேசத்தில் 56, மேற்கு வங்காளத்தில் 55, பீகாரில் 39, மத்திய பிரதேசத்தில் 32, டெல்லியில் 18, அரியானாவில் 17, குஜராத்திலும், ஜம்மு காஷ்மீரிலும் தலா 14, ராஜஸ்தானில் 13, புதுச்சேரியில் 12, ஜார்கண்ட், ஒடிசா, உத்தரகாண்டில் தலா 11, சத்தீஷ்காரிலும், தெலுங்கானாவிலும் தலா 10 பேர் உயிரிழந்துள்ளனர். எஞ்சிய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் 10-க்கும் குறைவான எண்ணிக்கையில் உயிரிழப்பை சந்தித்துள்ளன.



இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை என்பது 66 ஆயிரத்து 333 ஆக உயர்ந்து இருக்கிறது. முதல் இடத்தில் உள்ள மராட்டியத்தில் 24 ஆயிரத்து 903 பேர் இறந்துள்ளனர். அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. மூன்றாம் இடத்தில் உள்ள கர்நாடகத்தில் 5,837 பேர் பலியாகி இருக்கிறார்கள்.



டெல்லியில் 4,462, ஆந்திராவில் 4,053, உத்தரபிரதேசத்தில் 3,542, மேற்கு வங்காளத்தில் 3,283, குஜராத்தில் 3,034, பஞ்சாப்பில் 1,512, மத்திய பிரதேசத்தில் 1,426, ராஜஸ்தானில் 1,069 பேர் மரணம் அடைந்துள்ளனர். 1000-க்கும் கீழான எண்ணிக்கையில் இறப்பை சந்தித்துள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பட்டியலில் தெலுங்கானா (846), ஜம்மு காஷ்மீர் (717), அரியானா (706), பீகார் (621), ஒடிசா (503), ஜார்கண்ட் (428), அசாம் (315), கேரளா (298), சத்தீஷ்கார் (287), உத்தரகாண்ட் (280), புதுச்சேரி (240), கோவா (194), திரிபுரா (118) ஆகியவை உள்ளன.



மேலும், சண்டிகார், அந்தமான் நிகோபார், இமாசலபிரதேசம், லடாக், மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து, அருணாசலபிரதேசம், சிக்கிம், தத்ராநகர் ஹவேலி டாமன் தியு ஆகியவை 100-க்கும் கீழாக இறப்புகளை சந்தித்து உள்ளன.



இறப்புவிகிதம், 1.76 சதவீதமாக உள்ளது. உலகின் மிக குறைந்த இறப்பு விகிதங்களில் இதுவும் ஒன்று.



கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து நேற்று ஒரே நாளில் 62 ஆயிரத்து 26 பேர் வீடு திரும்பி உள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேலானோர் குணம் அடைந்து வீடு திரும்பிய மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் (10 ஆயிரத்து 978), ஆந்திரா (9,350), தமிழகம், கர்நாடகம் (5,159) ஆகியவை உள்ளன.



இந்தியாவில் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை, 29 லட்சத்து 1,908 ஆக உயர்ந்துள்ளது. குணம் அடைந்தோர் விகிதம் 76.98 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. தற்போது நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை என்பது 8 லட்சத்து 1,282 ஆக இருக்கிறது. இது மொத்த பாதிப்பில் 21.26 சதவீதம் ஆகும்.



இதே போன்று இதுவரை இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 4 கோடியே 43 லட்சத்து 37 ஆயிரத்து 201 ஆக அதிகரித்துள்ளது.



* இந்தியாவில் கொரோனா பாதித்தோரில் 54 சதவீதத்தினர் 18-44 வயதினர் ஆவர். 26 சதவீதத்தினர் 45-60 வயதினர், 8 சதவீதத்தினர் 17 வயதுக்குட்பட்டோர், 12 சதவீதத்தினர் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்.



* கொரோனாவால் இறந்தோரில் 51 சதவீதத்தினர் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் ஆவார்கள். 36 சதவீதத்தினர் 45-60 வயதினர், 11 சதவீதத்தினர் 26-44 வயதினர், 1 சதவீதத்தினர் 18-25 வயதினர், 17 வயதுக்கு உட்பட்டோர் 1 சதவீதத்தினர் ஆவர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை