Skip to main content

தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என். ஶ்ரீகாந்தா விடுக்கும் ஊடக அறிக்கை!

Sep 01, 2020 294 views Posted By : YarlSri TV
Image

தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என். ஶ்ரீகாந்தா விடுக்கும் ஊடக அறிக்கை! 

 தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினருமான சி. வி விக்கினேஸ்வரன்  நிகழ்த்திய பாராளுமன்ற உரைகள் கடந்த சில நாட்களாக ஓர் பாரிய சர்ச்சையின் மையப்பொருளாக சிங்கள தீவிரவாத பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரால் உருமாற்றப்பட்டுள்ளன.



விக்னேஸ்வரனுக்கு எதிராக பாராளுமன்றத்திற்குள்ளே, ஆளும் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சி என்ற நிலையான வேறுபாடுகளைக் கடந்து, உக்கிரத்தோடு தொடுக்கப்பட்டிருக்கும் கண்டனக் கணைகள்  அனைத்தும், பாராளுமன்ற ஜனநாயகத்தில்  காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கும் அடிப்படைப் மரபுகளை அப்பட்டமாக மீறுவதாகவும்,முரட்டுத் திமிர்த்தனத்தோடு கூடிய இனவெறிச் சிந்தனையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் அமைந்திருக்கின்றன.



இத்தனைக்கும் விக்னேஸ்வரன் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு உறுப்பினர் மாத்திரமின்றி,அவர் தெரிவித்த கருத்துக்கள் எதிலும் இனத்துவேஷம்  என்பது ஒரு துளியளவு கூட இருந்திருக்கவில்லை. 



மாறாக, தன்னைத் தெரிவு செய்த மக்கள் சார்ந்த இனத்தின் வரலாற்றுத் தொன்மையையும்,அதன் தாய் மொழியின் பெருமையையும் நாகரீகத்தோடு கூடிய வார்த்தைகளில் அவர் நாசூக்காக வெளிப்படுத்தியிருந்தார். அது அவரது உரிமை.கடமையும் கூட.



இருந்தும்,ஆளும் கட்சி,எதிர்கட்சி, என்ற வேறுபாடு இன்றி,மிரட்டலும் சண்டித்தனமும் நிறைந்த தொனியில்,



இந்த இரண்டு தரப்பிலிருந்தும் ஆத்திரத்தை வெளிப்படுத்தும் ஆக்ரோஷப் பேச்சுகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்றால்,



இவை அனைத்தும் தமிழ் மக்களுக்கும்,அவர்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பிரதிநிதிகளுக்கும் ஒரு அரசியல் செய்தியை திட்டவட்டமாக சொல்லிவைக்க முயன்றிருக்கின்றன என்பதில் சந்தேகம் இருக்கமுடியாது.



இந்த நாட்டின்' பெரும்பான்மை மக்கள் சிங்களவர்கள்-எமது சிங்கள மக்களிடம் தான் ஆட்சி அதிகாரம் இருக்கின்றது-எனவே, தமிழ்ப் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் அடக்கி வாசிக்க வேண்டும். கடந்த சில வருடங்களாக பாராளுமன்றம் சந்தித்த மென்மையானதும் குழைவானதுமான சமரசப் பேச்சுக்களுக்கு மாறாக, தமிழர் தரப்பிலிருந்து தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் எவராவது, வரலாற்றைச் சுட்டிக்காட்டி சுய நிர்ணய உரிமை பற்றியெல்லாம் பேச முயன்றால், அவற்றை சகித்துக் கொள்ள இயலாது,அப்படிப்பட்டவர்கள் பாராளுமன்றத்தில் இருக்கமுடியாது; அவர்களின் நடவடிக்கைகளுக்கு அவர்களைத் தெரிவு செய்த மக்களும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்'என்ற தோரணையில் ஒர் அரசியல் அராஜகமே  அரங்கேற்றப்பட்டிருக்கின்றது.



அத்துடன், தனி ஒரு உறுப்பினராக இருந்தாலும் கட்சி ஒன்றின் தலைவர் என்ற முறையில், பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு இசைவாக,  விக்னேஸ்வரனுக்கு ஒதுக்கப்பட்டுள்ள முன்வரிசை ஆசனத்தைக் கூட பறித்தெடுத்து,அவரை இரண்டாம் வரிசைக்குத் தள்ளி விடுவதற்கான முஸ்தீபுகளும் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.



இந்த பாராளுமன்றக்  களேபரத்தில் முன்னணியில் நிற்கும் நான்கு ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ,முன்னாள் கடற்படை அட்மிரல் சரத் வீரசேகரவின் நடத்தை ஆச்சரியத்திற்கு உரியதல்ல.அவரைப் போன்ற சிங்கள  தேசபக்தரிடமிருந்து  வேறு எதனையும் எதிர்பார்க்க முடியாது. 



அதே நேரத்தில் 2010 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்ற முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தான் யார் என்பதை தமிழ் மக்களுக்கு தெட்டத் தெளிவாக ஞாபகப்படுத்தியுள்ளார்.



இந்த விவகாரத்தில், வாய் திறந்து பேசாமலே செயற்பட்டுக் கொண்டிருக்கும் மிக முக்கியமான சூத்திரதாரி எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா.அவரும் சரத் பொன்சேகாவைப் போலவே, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் பேராதரவை பெற்றிருந்தவர்.



அதற்கு நன்றிக்கடனாக,அவரின் தலைமைத்துவத்தின் கீழ்,அவரின் கட்சி எம் பிக்கள் இருவர் விக்னேஸ்வரனின் பேச்சை கையில் எடுத்திருக்கின்றார்கள்.



சரத் பொன்சேகா அதற்கு உத்வேகம் கொடுத்து உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றார் 



2010 லும் 2019இலும் முறையே இந்த இரண்டு சிங்கள அரசியல் வாதிகளுக்கும்,அவரவர் போட்டியிட்ட ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் மக்கள் கொடுத்த பேராதரவு  வெறும் செல்லாக் காசு என இப்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது 



2010ல் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நிராகரித்தும், 2019ல் இன்றைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை எதிர்த்தும்,தமிழ் மக்கள் அளித்த எதிர்மறையான வாக்குகள் தான்,சரத்பொன்சேகாவுக்கும் சஜித் பிரேமதாசாவுக்கும் கிடைத்த தோல்விகளில் கூட, ஒர் மரியாதையை இணைத்திருந்தன என்பதை நினைத்துப் பார்க்கக் கூட இந்த இருவரும் இப்பொழுது தயாராக இல்லை.



கிடைக்கும் அடுத்த சந்தர்ப்பத்தில் ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதற்கான இவர்களின் நெடுந்தூரக் கனவில்,தமிழர் வாக்குகள் எந்த நிலையிலும் தமக்குத் தான் என்கிற அறிவீனத்தோடு கூடிய மமதை மிளிர்ந்து நிற்கின்றது. 



எமது தமிழ் மக்கள் இனியாவது ஒரு விடயத்தை தெட்டத் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும் 



தவிர்க்கப்பட முடியாத அரசியல் நிர்ப்பந்தம் ஏற்பட்டாலொழிய, சிங்கள பௌத்த அரசியல் சக்திகளுக்கிடையிலான அதிகாரப் போட்டியில் சம்பந்தப்படுவதால், தமிழ் மக்களுக்கு எந்த  நன்மையும், நன்றி உட்பட,கிட்டப்போவதில்லை என்பது தான் அந்த உண்மை.



தனது பெரிய மற்றும் சிறிய தளபதிகளை வைத்து,சிங்கள  இனவெறிக் கூச்சலை உக்கிரத்தோடு ஒலிக்க வைத்திருக்கும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தரப்பிலிருந்து,அவரது ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள தமிழ்த் தோழர்களை சமாளிப்பதற்காக சால்ஜாப்பு அறிக்கை ஒன்று  நாளையே வெளிவரலாம்.ஆனால் உண்மை உறங்கி விடாது.



அரசாங்கத் தரப்பை  பொறுத்தமட்டில்,பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அனுமதியின்றி அமைச்சர் சரத் வீரசேகர சீறி எழுந்திருக்க முடியாது.இங்கேயும் தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டிய உண்மை ஒன்று உறுத்தி நிற்கின்றது.



எதிரும் புதிருமான இந்த இரண்டு தரப்புமே, இந்த நாட்டின் குடிமக்களான தமிழ் மக்களின் சார்பில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் எழுப்பிய உரிமைக் குரலை அடக்கி ஒடுக்குவதில் கரங்கோர்த்து நிற்கின்றன 



இது ஒர் புதிய வரலாற்றுக்கான அறிகுறி என்று கூடச் சொல்லமுடியும். 



கடந்த காலங்களில்,1957ல் பண்டா செல்வா ஒப்பந்தத்தில் ஆரம்பித்து 2000ம் ஆண்டு சந்திரிகாவின் தீர்வுத் திட்டம் வரையில்,தமிழர் தொடர்பில் ஆளும் கட்சி பிரேரரித்தால் பிரதான எதிர்க்கட்சி எதிர்ப்பது தான் வரலாறாக  மீண்டும் மீண்டும் நிகழ்ந்து வந்திருக்கின்றது.



அதற்குப் பிறகும் கூட, 2002ல் கையெழுத்தான ரணில்- பிரபாகரன் உடன்படிக்கையின் சில முக்கிய அம்சங்களுக்கு, அன்றைய ஜனாதிபதி சந்திரிகாவின் எதிர்ப்பு இருக்கத்தான் செய்தது.



ஆனால்,இப்பொழுது காண்பது ஓர் புதுமையான மாற்றம். புதிய பாராளுமன்றத்தில் அது ஆர்ப்பாட்டமாக அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. 



அபூர்வமான ஒற்றுமையுடன்  சிங்கள இனவாதிகள் கர்ஜித்த நேரத்தில் தமிழர் தரப்பு என்ன செய்து கொண்டிருந்தது என்ற கேள்வியையும் சோகத்துடன் எழுப்ப வேண்டிய துர்ப்பாக்கியமான நிலைமைதான் இப்போதுள்ளது.ஒரே ஒரு செல்வம் அடைக்கலநாதனைத் தவிர,வேறு எந்தத் தமிழன் அந்த அரங்கில் அன்று துணிந்து பேசினான்?



தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் என்பார்கள். ஆனால், எத்தனை தமிழர்களின் தசைகள் அன்று அங்கே ஆடின?



கௌரவர் சபையில்,பஞ்சபாண்டவர் முன்னிலையில், பாஞ்சாலியின் துகில் உரியப்பட்ட கொடிய சம்பவம் தான் ஏனோ நினைவுக்கு வருகின்றது!



 சரத் பொன்சேகாவின் திமிர்ப் பேச்சின் ஒரு கட்டத்தில் விடுக்கப்பட்ட, அந்த மிரட்டல் கலந்த எச்சரிக்கை சொல்ல முயன்ற செய்திதான் என்ன? தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் சிந்தித்துப்பார்க்க  வேண்டிய விடயம் இது!



 



இந் நிலையில்,சுயமரியாதை கொண்ட தமிழர் அனைவரும் ஒரு விடயத்தை என்றும் மனதில் கொள்ள வேண்டும்.



இந்த நாட்டில் நாம் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கலாம்.ஆயினும், நாங்கள் அரசியல் அனாதைகள் அல்ல.



மொழியால், மதத்தால்,இனத்தால், பண்பாட்டால் பலகோடி உறவுகள் இந்தப் பரந்த உலகில் எங்களுக்கு உண்டு. அதற்கு மேலாக, சுதந்திரம் எமது பிறப்புரிமை என்ற உடைத்தெறியப்பட முடியாத மன உறுதியும் உண்டு.



எனவே தான்,தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர்  விக்னேஸ்வரனோ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரோ தம்மைத் தேர்ந்தெடுத்த மக்களின் சார்பில் தமக்கு சரியெனப்பட்டதை பாராளுமன்றத்திற்கு வெளியே மட்டுமல்ல,அதற்கு உள்ளேயும் கூட துணிந்து பேச ஒருபோதும் தயங்க வேண்டியதில்லை. 



அக்னியின் பரீட்சை தான் உன்னதமான உருக்கினை உருவாக்குகின்றது என்ற பொன்மொழி அரசியலுக்கும் பொருந்தும்.



இன்று தமிழினத்திற்குத் தேவைப்படுவது நிமிர்ந்து நின்று எமது மக்களுக்காக நீதி கோரி குரல் எழுப்பக்கூடிய துணிவு கொண்ட நேர்மையான அரசியற் தலைமை.



எமது அரசியல் வானம் இருண்டு கிடந்தாலும் ஒரு சிறிய ஒளிக்கீற்று எங்கோ தூரத்தில் தெரிகின்றது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை