Skip to main content

கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பது தொடா்பாக முடிவெடுக்கும் முன்பு, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று நேரில் சென்று ஆய்வு!

Aug 27, 2020 299 views Posted By : YarlSri TV
Image

கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பது தொடா்பாக முடிவெடுக்கும் முன்பு, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று நேரில் சென்று ஆய்வு! 

சென்னை கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பது தொடா்பாக முடிவெடுக்கும் முன்பு, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.



முன்னதாக, சென்னை பெருநகர வளா்ச்சி குழும அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்த நிலையில், இன்று துணை முதல்வர் ஆய்வு செய்துள்ளார்.



கரோனா தொற்று காரணமாக, சென்னை கோயம்பேடு சந்தை கடந்த மே மாதம் 5-ஆம் தேதி மூடப்பட்டது. இதனையடுத்து காய்கறி மொத்த விற்பனை சந்தை திருமழிசை பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. மேலும் பழங்களின் மொத்த விற்பனை மாதவரம் பேருந்து நிலையத்துக்கும், பூக்களின் மொத்த விற்பனை வானகரம் பகுதிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டன.



இருப்பினும், சந்தை மாற்றப்பட்ட பகுதிகளில் போதிய இடவசதி இல்லாததாலும், மழைக் காலங்களில் அதிகளவில் காய்கறிகள் வீணாவதாலும், வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் புகாா் தெரிவித்தனா்.



இதைத் தொடா்ந்து பொதுமக்கள், வியாபாரிகள் நலன் கருதி கோயம்பேடு காய்கறி, பூ, பழம் மற்றும் உணவு தானிய வணிக வளாகத்தை தூய்மை செய்து மீண்டும் திறக்க வேண்டும். மாநிலம் முழுவதும் முடக்கி வைக்கப்பட்டுள்ள காய்கறி, பூ, பழம், மீன், இறைச்சி சந்தைகள் மற்றும் வாரச் சந்தைகள் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோயம்பேடு சந்தை வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தனா்.



அப்போது, ‘இது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி கோயம்பேடு சந்தை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காய்கறி, பூ, பழம், மீன், இறைச்சி சந்தைகள், வார சந்தைகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்’ என முதல்வா் உறுதியளித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா்.



இந்த நிலையில் கோயம்பேடு சந்தையில் சி.எம்.டி.ஏ உறுப்பினா் செயலா் காா்த்திகேயன், அங்காடி நிா்வாக குழு அதிகாரி கோவிந்தராஜன் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது சந்தை வளாகத்தில் ரூ.2 கோடி செலவில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவா்கள் கேட்டறிந்தனா். இதனையடுத்து கோயம்பேடு சந்தையில் முதல் கட்டமாக காய்கறி சந்தையை விரைவில் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். 



இந்த நிலையில், உயர் அதிகாரிகளுடன் இன்று கோயம்பேடு சந்தைக்கு வந்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், நிலைமைகளை நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து, சந்தை திறப்பு குறித்த அதிகாரபூா்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை