Skip to main content

லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா கிளப் 4-0 என்ற கோல் கணக்கில் மலோர்காவை பந்தாடியது

Jun 15, 2020 280 views Posted By : YarlSri TV
Image

லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா கிளப் 4-0 என்ற கோல் கணக்கில் மலோர்காவை பந்தாடியது 

மலோர்கா நகரில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை அரங்கேறிய லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான பார்சிலோனா அணி, உள்ளூர் அணியான மலோர்காவை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 64-வது வினாடியிலேயே பார்சிலோனா முதல் கோல் அடித்தது. அந்த அணியின் அர்துரோ விடால் தலையால் முட்டி பந்தை வலைக்குள் திருப்பினார்.ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பார்சிலோனா வசமே பந்து பெரும்பாலும் (65 சதவீதம்) சுற்றிக் கொண்டிருந்தது. 37-வது நிமிடத்தில் மார்ட்டின் பிராத்வெய்ட்டும், 79-வது நிமிடத்தில் ஜோர்டி அல்பாவும் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சியுடன் உதவியோடு கோல் அடித்து அசத்தினர்.வலது கால்முட்டியில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்திருந்த பார்சிலோனா வீரர் லூயிஸ் சுவாரஸ் 6 மாதங்களுக்கு பிறகு களம் இறங்கினார். 57-வது நிமிடத்தில் மாற்று வீரராக அடியெடுத்து வைத்த சுவாரஸ் இறுதி கட்டத்தில் நெருங்கி வந்து கோல் வாய்ப்பை தவற விட்டார். இதற்கிடையே அவர் தட்டிக்கொடுத்த பந்தை கடைசி நிமிடத்தில் மெஸ்சி வலைக்குள் திணித்து அட்டகாசப்படுத்தினார்.இந்த சீசனில் மெஸ்சியின் 20-வது கோல் இதுவாகும். இதன் மூலம் லா லிகா கால்பந்து போட்டியில் தொடர்ச்சியாக 12-வது சீசனில் 20 மற்றும் அதற்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.முடிவில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் மலோர்காவை வீழ்த்தியது. இதுவரை 28 ஆட்டங்களில் ஆடியுள்ள பார்சிலோனா 19 வெற்றி, 4 டிரா, 5 தோல்வி என்று 61 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ரியல் மாட்ரிட் கிளப் 56 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் இருக்கிறது. புள்ளி பட்டியலில் 18-வது இடத்திற்கு தள்ளப்பட்ட மலோர்கா அணி சந்தித்த 17-வது தோல்வி இதுவாகும்.முன்னதாக ஆட்டத்தின் 2-வது பாதியின் போது திடீரென ஒரு இளைஞர் மைதானத்திற்குள் நுழைந்து விட்டார். அர்ஜென்டினா கால்பந்து அணிக்குரிய சீருடையை அணிந்திருந்த அவர் மெஸ்சியுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்ற ஆசையில் அவரை நோக்கி ஓடி வந்தார். பின்னர் பாதுகாப்பு ஊழியர்கள் அவரை மடக்கி பிடித்து வெளியேற்றினர். ரசிகர்கள் யாருக்கும் அனுமதி இல்லாத நிலையில் இவர் எப்படி உள்ளே வந்தார் என்பது தெரியவில்லை. முககவசமோ, கையுறையோ அணியவில்லை. பாதுகாப்பு நடைமுறைகளை மீறிய அவர் மீது போலீசில் கிரிமினல் வழக்கு தொடுக்கப்படும் என்று லா லிகா கால்பந்து நிர்வாகம் அறிவித்துள்ளது.இதைத் தொடர்ந்து நடந்த அட்லெடிகோ மாட்ரிட்-அத்லெட்டிக் பில்பாவ் அணிகள் இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

 


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை