Skip to main content

11 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா: சிகிச்சைக்கு சிறப்பு ஏற்பாடுகள்!

Apr 17, 2020 1459 views Posted By : YarlSri TV
Image

11 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா: சிகிச்சைக்கு சிறப்பு ஏற்பாடுகள்! 

கொரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கு பெரும்பாலும் சிசேரியன் முறையிலேயே பிரசவம் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைக்கும் கொரோனா பரவும் என்பது நிரூபிக்கப்படவில்லை…



தமிழகத்தில் 11 கர்ப்பிணிகளுக்கு இதுவரை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டுகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



இதுதொடர்பாக, மாநில சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளதாவது, கொரோனா பாதிப்பு கொண்ட 11 கர்ப்பிணிகள், கொரோனா சிகிச்சைக்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 2 பேர் குழந்தைகளை பிரசவித்துள்ளனர்.



கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், இதற்கென்று அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில், கர்ப்பிணிகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள் மாநில சுகாதாரத்துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் பரிந்துரையின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகளின் வசதிக்காக, இந்த மருத்துவமனைகளில், தனித்தனியாக படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.



கடந்த மார்ச் மாதத்தில், மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், அடுத்த 2 மாதங்களில், 1.5 லட்சம் கர்ப்பிணிகள் குழந்தை பெற்றெடுக்க உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், இதுவரை 35 ஆயிரம் பெண்கள் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். இந்த கர்ப்பிணிகள், கிராமப்புற செவிலியர்களின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை மற்றும் எழும்பூரில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா அறிகுறி காணப்படும் கர்ப்பிணிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்க போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனிநபர் பாதுகாப்பு உபகரணம் மற்றும் என்95 வகை மாஸ்க்குகள் இங்கு போதிய அளவில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இன்புளுயான்சா போன்று இந்த கொரோனா தொற்று கர்ப்பிணிகளிடையே அதிக ஆபத்தை ஏற்படுத்தாது என்ற போதிலும், தகுந்த பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். கொரோனா தொற்று உள்ள கர்ப்பிணி பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கு பெரும்பாலும் சிசேரியன் முறையிலேயே பிரசவம் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைக்கும் கொரோனா பரவும் என்பது நிரூபிக்கப்படவில்லை என்று மூத்த மகப்பேறு மருத்துவர் தெரிவித்துள்ளார்.

கருத்தரித்து 7 மாதம் கடந்த பெண்கள் பயன்பெறும்வகையில், தாங்கள் தொலைபேசி வாயிலான மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். இது வீட்டிலிருந்தே அவர்கள் தேவையான மருத்துவ ஆலோசனைகள் பெற வழிவகை செய்வதாக கிளவுட்நைன் மருத்துவமனை மருத்துவர் கனிமொழி தெரிவித்துள்ளார்.



கொரோனா பாதிப்பு உள்ள கர்ப்பிணிகளுக்கு மயக்க ஊசி அளித்து சிசேரியன் முறையில் பிரசவம் மேற்கொள்ளப்படுகிறது. மயக்க ஊசி அளிக்கப்படுவதால், அதிக மருத்துவ பணியாளர்களின் தேவை குறைகிறது. பிரசவத்திற்கு பிறகு, காற்று மூலம் தாயிடம் இருந்து பிறந்த குழந்தைக்கும் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதால், தாய்ப்பால் வழங்குவதும் மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மேற்கொள்ளப்படுவதாக டாக்டர் கனிமொழி தெரிவித்துள்ளார்.



சீனாவில் உள்ளதைப்போன்று, கொரோனா தொற்று இல்லாதவரிடமிருந்து தாய்ப்பால் பெறப்பட்டு பிறந்த குழந்தைக்கு தர அறிவுறுத்தப்படுவதாக சூரியா மருத்துமனை மகப்பேறு இயல் மருத்துவர் தீபா ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.


Categories: தமிழகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை