Skip to main content

கவுன்சிலர்களுக்கு ரூ.35 லட்சம் நிதி- சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு!

Apr 09, 2022 89 views Posted By : YarlSri TV
Image

கவுன்சிலர்களுக்கு ரூ.35 லட்சம் நிதி- சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு! 

சென்னையில் 2016-ம் ஆண்டுக்கு பிறகு மேயர் தேர்தல் நடைபெறாமல் இருந்ததால் கடந்த 6 ஆண்டுகளாக ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் மாநகராட்சி பட்ஜெட்டை மறைமுகமாகவே வெளியிட்டு வந்தனர்.



இந்த நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.பிரியா மேயராக சமீபத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். இதனால் இந்த ஆண்டு (2022-2023) வரவு-செலவு திட்ட கணக்கை மேயர் முன்னிலையில் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் சர்பஜெயாதாஸ் நரேந்திரன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-



புராதன கட்டிடமான ரிப்பன் மாளிகையை நிறம் மாறும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்க ரூ.1.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணி 2022-23-ம் நிதியாண்டில் முடிக்கப்படும்.



பெருநகர சென்னை மாநகராட்சி 10 மண்டலங்களான 1, 2, 3, 4, 6, 7, 11, 12, 14 மற்றும் 15-ல் தெரு விளக்கு பராமரிப்பு பணிகள் ஒப்பந்த அடிப்படையில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.



பொதுமக்கள் எளிமையான முறையில் சொத்து வரியினை செலுத்துவதற்கு பெருநகர சென்னை மாநகராட்சியால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இந்த நிதியாண்டில் கியூ.ஆர். குறியீட்டினை செயல்படுத்தி பொதுமக்கள் சொத்து வரியினை செலுத்துவதற்கு வழிவகை செய்யப்படும்.



ரிப்பன் கட்டிடம் மற்றும் அனைத்து வட்டார அலுவலகங்களிலும் தானியங்கி கருவி மூலம் சொத்து வரியினை செலுத்துவதற்கு வழிவகை செய்யப்படும். இதன் வாயிலாக பொதுமக்கள் தங்கள் சொத்து வரிக்கான காசோலைகளை மாநகராட்சி அலுவலர் உதவியின்றி தாங்களாகவே செலுத்தி கணினி ரசீதினை பெற்றுக் கொள்ளலாம்.



பெருநகர சென்னை மாநகராட்சியின் வணிக வாட்ஸ்அப் கணக்கு வாயிலாக ஏற்கனவே, பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்தல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல், சொத்து வரி நிலை அறிந்து பணம் செலுத்துதல், தொழில் வரி செலுத்துதல் மற்றும் கட்டிட திட்டம் சமர்ப்பிப்பதற்கான சேவைகள் நடைமுறையில் உள்ளது. மேலும் பொதுமக்களின் நலனுக்காக, தற்போதுள்ள சேவைகளுடன் கூடுதலாக பின்வரும் சேவைகள் வழங்கப்படும்.

 



பெருநகர சென்னை மாநகராட்சியில் தற்போது பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் டிஜிட்டல் லாக்கர் வாயிலாக தரவிறக்கம் செய்யும் வசதி உள்ளது. அதன் தொடர்ச்சியாக வர்த்தகர்கள் டிஜி லாக்கர் அமைப்பில் இருந்து வர்த்தக உரிமங்களை பதிவிறக்கம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும்.



அரசு செயல்பாட்டில் செயல்திறன், நிலைத்தன்மை மேம்படுத்தவும் மற்றும் கோப்புகள் கையாள்வதற்கான நேரத்தை குறைக்கும் வகையிலும் பெருநகர சென்னை மாநகராட்சியில் மின் அலுவல் அமைப்பு (இ-ஆபீஸ்) அறிமுகப்படுத்தப்படும். இதன் வாயிலாக வரும் காலங்களில் பொதுமக்களுக்கான சேவைகள் காலதாமதமின்றி விரைவாக செய்து முடிக்க இயலும்.



அனைத்து பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்களும் மக்களின் குறைகளை உரிய நேரத்தில் நிவர்த்தி செய்யவும், அலுவலர்களின் தினசரி வருகையை குறிக்கவும், பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க அதிகாரிகளுக்கு தெரிவு பலகை ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் வாயிலாக ஒரு புதிய பணியாளர் செயலி உருவாக்கப்பட்டு வெளியிடப்படும். இச்செயலி வாயிலாக அதிகாரிகள் பொதுமக்களுக்கான சேவைகள் குறித்த காலத்தில் முடிக்கப்படுகின்றனவா? என்பதை திறமையான முறையில் கண்காணிக்க இயலும்.



கடந்த 7 ஆண்டுகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்றம் செயல்படாத காரணத்தினால் மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கான நிதியில் இருந்து எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.



இத்திட்டம் தொடர்ந்து நடைபெற ஏதுவாக 2022-2023 நிதியாண்டில் ரூ.2 கோடி மேயர் சிறப்பு மேம்பாட்டு திட்டத்திற்காகவும் மற்றும் ஒவ்வொரு மாமன்ற உறுப்பினருக்கு ரூ.35 லட்சம் வீதம் 200 வார்டுகளுக்கும் மொத்தம் ரூ.70 கோடி மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு திட்டத்திற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாமன்ற உறுப்பினர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் நடைமுறைப் பணிகள் மற்றும் நிர்வாக விவரங்கள் குறித்து உரிய துறையின் அலுவலர்களால் பயிற்சி அளிக்கப்படும்.

 



இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை