Skip to main content

உணவை ஆயுதமாக பயன்படுத்தும் ரஷ்யா; அமெரிக்கா குற்றச்சாட்டு

May 20, 2022 87 views Posted By : YarlSri TV
Image

உணவை ஆயுதமாக பயன்படுத்தும் ரஷ்யா; அமெரிக்கா குற்றச்சாட்டு 

உக்ரைனுக்கு எதிரான போரில் உணவை ஆயுதமாக ரஷ்யா பயன்படுத்துவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அண்டனி பிளிங்கன் குற்றஞ்சாட்டியுள்ளார்.



உக்ரேனிய துறைமுகங்களை முற்றுகையிட்டு அங்கிருந்து உணவு, தானியங்கள் ஏற்றுமதி செய்வதை ரஷ்யா தடுத்து வைத்துள்ளதால் உக்ரேனியர்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.



ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றிய பிளிங்கன், உக்ரேனிய துறைமுகங்களை முற்றுகையிடுவதை நிறுத்துமாறு ரஷ்யாவிடம் வேண்டுகோள் விடுத்தார்.



உக்ரேனியர்களின் போர் ஆற்றலை, அவர்களது மன உறுதியை ஆயுதங்கள் மூலம் ரஷ்யாவால் வீழ்த்த முடியவில்லை. இந்நிலையில் ஆயுதங்களால் செய்ய முடியாததை உணவை ஆயுதமாகக் பயன்படுத்தி செய்ய முடியும் என ரஷ்ய அரசாங்கம் நினைக்கிறது என அண்டனி பிளிங்கன் குறிப்பிட்டார்.



உக்ரைன் மீதான ரஷ்யாவின் வலிந்த போரால் உணவு, தானியங்கள், சமையல் எண்ணெய்கள், எரிபொருள் மற்றும் உரம் ஆகியவற்றின் விலைகள் சர்வதேச அளவில் கடுமையாக உயர்ந்துள்ளன.



உலகத்தின் கோதுமைத் தேவையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை ரஷ்யாவும் உக்ரைனும் ஈடு செய்தன. சோளம், பார்லி, சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் முக்கிய ஏற்றுமதியாளராக உக்ரைன் உள்ளது.



ஆனால் போருக்குப் பின்னர் உக்ரைன், ரஷ்யாவில் இருந்து இவற்றைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.



இதேவேளை, ரஷ்யர்கள் சரியான சூழ்நிலையில் உலகம் முழுவதும் தேவையான உணவை உற்பத்தி செய்வதில் திறமையானவர்கள் என ரஷியாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவ் தனது டெலிகிராம் சமூக வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.



ஆனால் ஒருபுறம் ரஷ்யா மீது பல நாடுகள் இணைந்து பைத்தியக்காரத்தனமான பொருளாதாரத் தடைகளை விதித்துவிட்டு, மறுபுறம் உணவை வழங்குமாறு கோருகின்றனர் எனவும் தற்போது ரஷ்ய பாதுகாப்பு பேரவை துணைத் தலைவராக உள்ள மெட்வடேவ் தெரிவித்துள்ளார்.



நீங்கள் தடை விதிப்பீர்கள். ஆனால் நாங்கள் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றால் அது நடக்காது. நாங்கள் முட்டாள்கள் அல்ல எனவும் அவா் குறிப்பிட்டுள்ளார்.



சிறப்பான உணவு அறுவடையை பெற விவசாயத்தில் திறமையானவர்கள் தேவை. அத்துடன் முறையான உபகரணங்கள் மற்றும் உரங்கள் தேவை.



உலகெங்கும் தேவையான அளவு உணவுப் பொருட்களின் இருப்பை உறுதி செய்வது எப்படி? என்று எங்களுக்குத் தெரியும். உணவு இருப்பை உறுதி செய்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் எங்களிடம் உள்ளன. அதனைச் சரியாகச் செய்ய வேண்டுமானால் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடாது. நாங்கள் வேலை செய்வதைத் தடுக்கக்கூடாது எனவும் மெட்வெடேவ் வலியுறுத்தினார்.



இதற்கிடையே சர்வதேச உணவு நெருக்கடிக்கு ரஷ்யா தான் காரணம் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என ரஷ்யாவிற்கான ஐ.நா. தூதுவர், வசிலி நெபென்சியா தெரிவித்துள்ளார்.



ஆனால் உக்ரைனுக்கு எதிரான போரில் உணவை ஆயுதமாக ரஷ்யா பயன்படுத்துகிறது. இதுதான் உண்மை என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அண்டனி பிளிங்கன் உறுதியாகக் கூறுகிறார்.



உலகெங்கும் உணவு விநியோகம் குறைந்துள்ளது. விலைகள் கடுமையாக அதிகரித்து வருகின்றன. அதேநேரம் ரஷ்யாவின் தடைகளால் பயன்படுத்தப்பட முடியாமல் உக்ரேனிய களஞ்சியங்களில் சுமார் 20 மில்லியன் தொன் தானியங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.



நிலைமை இவ்வாறிருக்கையில் ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து உணவு ஏற்றுமதியை மீண்டும் தொடங்கவும், உர உற்பத்தியை உலக சந்தைகளுக்கு கிடைக்கச் செய்யவும் அனுமதிக்கும் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் முயற்சிகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை