Skip to main content

தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம்களில் திரண்ட மக்கள் - 40 லட்சம் பேருக்கு செலுத்த ஏற்பாடு!

Oct 10, 2021 124 views Posted By : YarlSri TV
Image

தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம்களில் திரண்ட மக்கள் - 40 லட்சம் பேருக்கு செலுத்த ஏற்பாடு! 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

 



இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 12-ந் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடர்ச்சியாக தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.



அந்த வகையில் இன்று 5-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசியை போட்டனர்.



இன்று நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமில் 40 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை உள்பட 38 மாவட்டங்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 



சென்னையில் சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதே போன்று அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட கலெக்டர்கள் பார்வையிட்டு முடுக்கி விட்டனர்.



முதல் தவணை தடுப்பூசியை போட்டுவிட்டு 2-வது தவணை தடுப்பூசிக்காக காத்திருப்பவர்களை கண்டறிந்தும் இன்று நடைபெற்ற முகாமில் தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற்றது.



முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களை அவர்களது செல்போன் எண்களில் பேசி சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போடுவதற்கு அழைத்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், தடுப்பூசிக்காக காத்திருந்தவர்கள் தவறாமல் முகாம்களுக்கு சென்று தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர்.



கொரோனா தடுப்பூசி முகாம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளில் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் ஆகியவற்றிலும் நடைபெற்றது.



பல்வேறு முக்கிய சந்திப்புகளிலும் சுகாதார பணியாளர்கள் சிறிய மேஜையை போட்டுக் கொண்டு தடுப்பூசி போடுவதற்காக அமர்ந்து இருந்ததை காண முடிந்தது.



சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பூசி முகாமில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு அவர்களது மொழியிலேயே பேசி சுகாதார பணியாளர்கள் தடுப்பூசிகளை போட்டனர்.



சென்னைக்கு வந்திருந்த வெளிமாவட்ட பயணிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.



தடுப்பூசி போடும் பணிக்காக நகர பகுதிகளில் இருந்து, கிராம பகுதிகள் வரை அனைத்து இடங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.



தடுப்பூசி போடும் இடங்களில் சாமியானா பந்தல்களை அமைத்து, விழிப்புணர்வு பிரசாரங்களையும் சுகாதாரத்துறையினர் மேற்கொண்டனர்.



தடுப்பூசி தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் இன்னும் நீடிக்கும் அச்சத்தை போக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் அமைந்திருந்தது.



சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிக்காக 46 லட்சத்து 79 ஆயிரத்து 855 தடுப்பூசிகள் இன்று தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. இதற்காக 30 ஆயிரம் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தது. இங்கு தடுப்பூசி போட மக்கள் பெரும் அளவில் திரண்டனர். இதில்தான் 40 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயித்து சுகாதார பணியாளர்கள் பம்பரமாக சுழன்று பணிபுரிந்து வருகிறார்கள்.

 



இன்று மாலையில் எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது பற்றிய விவரங்களை சுகாதாரத் துறையினர் வெளியிட உள்ளனர்.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை