Skip to main content

தமிழர்களின் துயர நிலையறிந்து ஐ.நா. கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும் - சுரேஷ்

Sep 15, 2021 168 views Posted By : YarlSri TV
Image

தமிழர்களின் துயர நிலையறிந்து ஐ.நா. கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும் - சுரேஷ்  

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது தொடர் கடந்த திங்கட்கிழமை 13.09.2021 அன்று ஜெனிவாவில் ஆரம்பமாகியது. இதில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் தனது வாய்மூல அறிக்கையினை கையளித்திருந்தார். அதனை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வரவேற்றுள்ள அதேவேளையில் பல்வழிகளிலும் பாதிக்கப்பட்டுள தமிழ் மக்கள் ஐ.நா.வை மட்டுமே நம்பியுள்ள நிலையில், ஐ.நா. இலங்கை தமிழர்கள் தொடர்பில் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்துள்ளது. இது தொடர்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 



அவரது அறிக்கையின் முழு விபரம் வருமாறு:

ஐக்கிய நாடுகள் சபை என்பது இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின்னர், உலகில் ஒரு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் நாடுகளுக்கிடையில் தேசங்களுக்கிடையில் தேசிய இனங்களுக்கிடையில் முரண்பாடுகளையும் பிளவுகளையும் சீர்செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இதற்காக ஐ.நா சபையானது தனது ஆளுமையின் கீழ் பல்வேறுபட்ட நிறுவனங்களை ஸ்தாபித்துள்ளது.



சுகாதாரம், உணவு, வறுமை ஒழிப்பு, கலாசாரம், கல்வி போன்ற பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி வறுமையின் பிடியிலிருந்தும் தொற்றுநோய்களிலிருந்தும் மக்களைக் காப்பாற்றுவது மாத்திரமல்லாமல், மக்களது அடிப்படை உரிமைகள், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை, மக்களுக்கு மீதான இறையாண்மை போன்றவற்றைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாகத்தான் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் தோற்றுவிக்கப்பட்டது.



இலங்கையில் யுத்தம் முடிவிற்கு வந்தவுடன், யுத்தக் குற்றங்கள் தொடர்பாக ஒரு பொறுப்புக்கூறல் நடவடிக்கையை தாங்கள் மேற்கொள்வதாக அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் அன்றைய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூனுடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்திருந்தார். அதன் பிரகாரம் ஐ.நா. பொதுச்செயலாளரினால் ஒரு நிபுணர்குழு அமைக்கப்பட்டு அந்த நிபுணர் குழு ஒரு அறிக்கையை தயார் செய்தது. அந்த அறிக்கையில், இலங்கை அரசாங்கம் யுத்தக் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் அது மேலும் விசாரிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அந்த அறிக்கையானது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டது.



இதன் பிரகாரம் 2012ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் மேற்கண்ட குற்றங்கள் தொடர்பாக பல்வேறுபட்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த தீர்மானங்கள் இலங்கை அரசைக் கட்டுப்படுத்தாது என்றும் தாங்கள் இதிலிருந்து வெளியேறுவதாகக் கூறி இலங்கை அரசாங்கம் இந்தத் தீர்மானங்களிலிருந்து வெளியேறிக் கொண்டது.



ஆனாலும்கூட 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து 46/1 தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபொழுது, இலங்கை அரசாங்கம் இந்தத் தீர்மானங்களிலிருந்து வெளியேறியதை மையமாகக் கொண்டும் அவர்கள் எத்தகைய விசாரணைப் பொறிமுறைகளையோ, நீதிப்பொறிமுறைகளையோ உருவாக்குவதற்கு எதிர்வினையாற்றியதை மையமாகக் கொண்டும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் இலங்கை அரசாங்கம் பாரதூரமான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டதுடன், இலங்கை அரசாங்கத்தின்மீது சர்வதேச அழுத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்றும் ஆணையாளர் வலியுறுத்தியிருந்தார்.



இலங்கையின் தொடர் மனித உரிமை மீறல்களை ஆணையாளர் சுட்டிக்காட்டியாட்டியிருப்பதை வரவேற்கும் அதேநேரம், இலங்கை தொடர்பான ஜெனிவா தீர்மானங்கள் எக்காரணங்களுக்காக உருவாக்கப்பட்டதோ அது இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கின்ற வேளையில் அவை தொடர்பான குறிப்புகள் இல்லாமல் இலங்கையில் நடைபெற்றுவருகின்ற தற்போதைய பரந்துபட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பிலேயே இந்த அறிக்கை அதிக கவனம் செலுத்தியிருக்கிறது என்பதை பாதிக்கப்பட்ட தரப்பினர் என்ற வகையில் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 



நிலைமை அவ்வாறு இருந்தபொழுதும்கூட, தமிழ் மக்கள் தொடர்ச்சியாக சிறிலங்கா அரசாங்கத்தினால் நெருக்கடிக்குள்ளும் அடக்குமுறைக்குள்ளும் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். தமிழ் மக்களின் காணிகள் பறிமுதல் செய்யப்படுகின்றன, மரணித்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த முடியாத நிலை தொடர்கின்றது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்படுகின்றனர், தமிழ் மக்களின் புராதானச் சின்னங்கள் அகற்றப்பட்டு அதனைச் சுற்றியுள்ள பலநூறு ஏக்கர் கணக்கான காணிகளும் அபகரிக்கப்படுகின்றது. ஒரு தேசிய இனத்திற்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்ற இந்த அரசாங்கமானது மறுபுறத்தில் சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மாற்றியமைப்பதற்காகவும முன்னர் உருவாக்கிய ஆணைக்குழுக்களின் அறிக்கைகளைப் பரீசிலிப்பதற்கும் (எல்.எல்.ஆர். சி மற்றும் பரணகம ஆணைக்குழு அறிக்கைகள்) மற்றுமொரு ஆணைக்குழுவை நியமித்துள்ளது.



அதுமாத்திரமல்லாமல், காணாமல் ஆக்கப்ட்டோர்களுக்கான அலுவலகங்களைத் திறந்து வருவதாகவும் அவர்களுக்கு நட்டஈடு கொடுப்பதற்கு கடந்த நிதி ஆண்டில் நிதி ஒதுக்கியிருப்பதாகவும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதன் அடிப்படையில் ஐ.நா. சபையுடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் இலங்கை அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஒரு அறிக்கையை சமர்ப்பித்திருக்கின்றது. இது வெறுமனே ஒரு கண்துடைப்பு மாத்திரமல்லாமல், காலத்தைக் கடத்தி, தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கைகளை நீர்த்துப் போகச் செய்வதற்கான ஒரு யுக்தியாகும். ஆனால், இவ்வாறான அறிக்கையொன்றை மனித உரிமைகள் ஆணையகமானது பரிவுடன் கவனத்தில் கொண்டுள்ளது மாத்திரமல்லாமல், இலங்கை அரசாங்கம் அந்த விடயங்களைச் செய்யும் என்ற எதிர்பார்ப்பினையும் வெளியிட்டிருக்கின்றது.



ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளரின் மார்ச் 2021ஆம் ஆண்டின் அறிக்கையானது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் தாங்கள் நிம்மதியாக வாழ்வோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. இலங்கை அரசாங்கத்தின் மேல் முழுவதும் நம்பிக்கையிழந்து, கொல்லப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக உங்களை மட்டுமே நம்பி காத்திருக்கும் மக்களுக்கு மனித உரிமைகள் ஆணையகத்தின் செப்ரெம்பர் 2021 அறிக்கை என்பது, மனச்சஞ்சலத்தையும் அமைதியின்மையையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கின்றது.



ஒருசில வாரங்களுக்கு முன்புதான் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக எந்த தேடுதலையோ வேறெந்த நடவடிக்கைகளையோ நடாத்த வேண்டாம் என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கும் சூழ்நிலையில் இலங்கை அரசாங்கத்தின் மேல் நம்பிக்கைகொண்டு, அவர்கள் அனைத்தையும் செய்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்திருப்பது தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், அதனைக் கையாள்வதில் யுத்தத்திலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றுவதில் ஐ.நா. தவறிழைத்துவிட்டதோ என்பதைக் கண்டறிவதற்காக ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டதை அனைவரும் அறிவர். ஏற்கனவே இந்த விடயத்தில் ஐ.நா. தன்னை சுயவிமர்சனம் செய்துள்ளது. அதேபோல் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் தவறிழைக்காமல் செயற்பட வேண்டுமென்பதே தமிழ் மக்களின் ஆதங்கமாக இருக்கின்றது.



கடந்த மார்ச் மாத அறிக்கையிடுதலின்போது இலங்கை அரசாங்கத்திற்கு மேல் பொருளாதார, பிராயண தடைகள் கொண்டுவரப்படுமாக இருந்தால், அது ஒட்டுமொத்தமான இலங்கை மக்களையும் பாதிக்கும் என்ற அடிப்படையில், அவ்வாறான தடைகளுக்குப் பதிலாக சர்வதேச சட்டங்களைப் பின்பற்றுகின்ற அரசுகள் தத்தமது நாடுகளில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் இந்த இடைப்பட்ட ஆறு மாதங்களில் தமிழ் மக்களின்மீது மோசமான அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டதே தவிர, அச்சத்தின் மத்தியில் வாழ்கின்ற தமிழ் மக்களை அரவணைத்து அவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான எத்தகைய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.



காலம் கடந்து போவதற்கு முன்பாக இலங்கை அரசாங்கம் தனது நாட்டின் ஒருபகுதி குடிமக்களுக்கு எதிராகச் செயற்பட்டது என்பதையும் இதனால் அவர்களில் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள் என்பதையும் ஐ.நா. சிங்கள மக்களுக்கு தெரியப்படுத்துவதன் மூலமாகவே இத்தகைய நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நடக்காதவாறு தடுப்பதற்கும் தமிழ் மக்களுக்கு உரித்தான நீதி கிடைப்பதற்கும் வழிவகுக்கும் என்று நம்புகிறோம்.

ஐ.நாவின் மீதும் அதன் உறுப்பு அமைப்புகள் மீதும் தமிழ் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஐ.நாவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகமும் காப்பாற்றும் என்று எதிர்பார்க்கின்றோம். -என்றுள்ளது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை