Skip to main content

வெங்காய வரலாறுகளை வேறு பக்கமாய் போய் உரிக்கலாம் -திமுக பதிலடி

Aug 26, 2021 94 views Posted By : YarlSri TV
Image

வெங்காய வரலாறுகளை வேறு பக்கமாய் போய் உரிக்கலாம் -திமுக பதிலடி 

முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆகஸ்ட் 15 அன்று கோட்டையில் கொடியேற்றிய பின்னர் ஆற்றிய சுதந்திர தின உரையில், இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக 150ஆண்டுகளுக்கு முன்பே போராடியது தமிழ்நாடுதான் என்றும், தமிழகத்தின் இந்தப் பங்களிப்பை முழுமையாக தொகுத்து தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட வேண்டும் என்றும் அறிவித்தார்.



முதல்வரின் இந்த அறிவிப்பினை பாராட்டி‘துக்ளக்’ இதழ் எழுதி இருக்கிறது. ஆனால், இது பாராட்டு அல்ல., விஷமம் என்கிறது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி.



முரசொலியின் தலையங்கத்தில் இதுகுறித்தே எழுதப்பட்டிருக்கிறது. அதில், ‘’சிரிப்பிலேயே விஷமச் சிரிப்பு என்றுஉண்டு. அதைப் போல, பாராட்டிலேயே புகழ்வது போல பழித்தலும் உண்டு. அப்படித்தான் புகழ்வது போலப் பழித்திருக்கிறார் குருமூர்த்தி. முதல்வரின் இந்த அறிவிப்பைக் குறிப்பிட்டு விட்டு, ‘இது நம் நாடு சுதந்திரம் பெறுவதை எதிர்த்த திராவிட இயக்கங்களின் சிந்தனையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.



அது தமிழகத்துக்கும், பாரத நாட்டுக்கும் நல்லது. அதற்காக முதலில் ஸ்டாலினை நாம் பாராட்டுகிறோம்’என்று விஷமத்தைக் கக்கி இருக்கிறார் குருமூர்த்தி. அதாவது திராவிட இயக்கம் இந்தியா சுதந்திரம் பெறுவதை எதிர்த்த கட்சி என்பதைச் சொல்லவேண்டும் என்பதற்காக வலியப்போய் முதலமைச்சரைப் பாராட்டி இருக்கிறது ‘துக்ளக். எதைச் சொன்னாலும் தந்தை பெரியாரை, பேரறிஞர் அண்ணாவை, தமிழினத் தலைவர் கலைஞரை, திராவிட இயக்கத்தைக் குறைசொல்லாமல் அவர்களுக்கு கண் அடையாது. அத்தகைய அரிப்பு, ஆரியத்தன்மையாளர்களுக்கு எப்போதும் உண்டு’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.



திராவிட மக்களின் கருத்தைக் கேட்காமல் ஒருசாராரிடம் மட்டும் ஆட்சியை பிரிட்டிஷார் ஒப்படைத்ததைக் கண்டித்துத்தான் ஆகஸ்ட் 15 ஆம் நாளைத்துக்க நாள் என்றார் பெரியார். இல்லை அது சுதந்திரநாள்தான் என்றார்பேரறிஞர் அண்ணா. இந்த வரலாறு எதுவும் தெரியாமல், அல்லது தெரிந்தும் மறைக்கவே ‘துக்ளக்’ முயற்சிக்கிறது. குருமூர்த்தி தனது குருமார்களான‘மன்னிப்பு திலகங்கள்’ மண்டியிட்டுக் கிடந்த வரலாற்றை வாரம் தோறும் எழுத வேண்டியதுதானே என்று கேட்கிறது முரசொலி.



முதல்வர் மு.க.ஸ்டாலினின் முழுப் பேச்சையும் படித்திருந்தால் குருமூர்த்தி இப்படி எழுதியிருக்க மாட்டார். சீன படையெடுப்பின் போது நாட்டுக்காக அண்ணா நின்றதும், பாகிஸ்தான் போரின் போது நாடு காக்க முதல்வர் கலைஞர் நின்றதையும் முதல்வர் சுட்டிக் காட்டி இருந்தார் அந்த உரையில். நாடு காக்க போரிட்ட மானமறவர்களின் தீரத்தைப் போற்றும் வகையில் திராவிட முன்னேற்றக் கழக அரசால் 1967 முதல் இன்று வரை செயல்படுத்தப்பட்ட திட்டங்களை முதலமைச்சர் அவர்கள் பட்டியல் போட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ள முரசொலி,



பரலி சு. நெல்லையப்பராக இருந்தாலும் நாமக்கல் கவிஞராக இருந்தாலும் அவர்களைப் போற்றியது கழக அரசு. இன்றும் வ.உ.சி. புகழைப் போற்றுவது கழக அரசு. அதை எல்லாம் மறைப்பதற்காக, திராவிட இயக்கங்கள் சுதந்திரப்போராட்டத்தை எதிர்த்தது போல பொய் வரலாறு புனைவது சிலரது புறக்கடைவழக்கம். இப்படித்தான் சில நாட்களுக்கு முன்னால், ஜாலியன் வாலாபாக்படுகொலையை நீதிக்கட்சி ஆட்சி கண்டிக்கவில்லை என்று ‘தினமணி’யில் வைத்தியநாதன் எழுதினார். ‘அப்போது நீதிக்கட்சி ஆட்சிக்கே வரவில்லை’என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மறுத்தார். உடனே மன்னிப்புக் கேட்டு விட்டார் வைத்தியநாதன். இது வழக்கமானதுதான் என்கிறது.



மத்திய சட்டசபையில் மாவீரன் பகத்சிங், பதுகேஷ்வர் தத் ஆகிய இருவரும் குண்டு வீசியபோது, ‘முழுமூடச் சிகாமணிகள்’ என்று பட்டம் தந்தது அன்றைய ஆனந்தவிகடன். ‘உலக மக்களுக்கு உண்மையான சமத்துவத்தைக் காட்டியவர் பகத்சிங் என்று 1931 இல் எழுதியது பெரியாரின் குடிஅரசு. எனவே, துக்ளக் தனது வெங்காய வரலாறுகளை வேறு பக்கமாய் போய் உரிக்கலாம் என்று கடுமையாக கண்டித்திருக்கிறது முரசொலி.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை