Skip to main content

ராஜினாமா செய்யும்படி கட்சி மேலிடம் அழுத்தம் கொடுக்கவில்லை: எடியூரப்பா

Jul 27, 2021 171 views Posted By : YarlSri TV
Image

ராஜினாமா செய்யும்படி கட்சி மேலிடம் அழுத்தம் கொடுக்கவில்லை: எடியூரப்பா 

கர்நாடக முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து எடியூரப்பா கவர்னர் கெலாட்டிடம் கடிதம் வழங்கினார். அதன் பிறகு எடியூரப்பா ராஜ்பவன் முன்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது



பா.ஜனதாவில் 75 வயதுக்கு மேற்பட்ட தலைவர்களுக்கு பதவிகள் வழங்கப்படுவது இல்லை. ஆனால் பிரதமர் மோடி உள்பட கட்சி மேலிட தலைவர்கள் 75 வயதை தாண்டிய பிறகும் என் மீது நம்பிக்கை வைத்து மேலும் 2 ஆண்டுகளுக்கு முதல்-மந்திரி பதவி வழங்கினர். இதற்காக பிரதமர் மோடி உள்பட மேலிட தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.



கடந்த 2 மாதங்கள் முன்பே ராஜினாமா செய்ய முடிவு செய்தேன். ஆனால் பதவி ஏற்று 2 ஆண்டுகள் முடிவடையும்போது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டேன். கவர்னரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு வந்துள்ளேன். எனது ராஜினாமாவை கவர்னர் ஏற்றுக் கொண்டார். அவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.



அதே போல் கர்நாடக மக்கள் என்னை 4 முறை முதல்-மந்திரியாக சேவையாற்ற ஆதரவு வழங்கினர். குறிப்பாக சிகாரிபுரா தொகுதி மக்கள் என்னை 7 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற வைத்தனர். அவர்களின் ஆதரவை எனது வாழ்நாளில் மறக்க முடியாது. அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஆதரவாக பணியாற்றிய கட்சியினருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன்.



டெல்லி மேலிடத்திடம் இருந்து எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. 2 ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து நானே முன்வந்து பதவியை ராஜினாமா செய்துள்ளேன். ராஜினாமா செய்யும்படி என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. ஊடகத்தினர் எனக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். உங்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதாவை ஆட்சியில் அமர வைக்க நான் பாடுபடுவேன். நாளை முதலே கட்சி பணியை ஆற்ற தொடங்குவேன்.



அடுத்து யார் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்பது குறித்து நான் கூற மாட்டேன். இதை கட்சி மேலிடமே முடிவு செய்யும். நான் தொடர்ந்து தீவிர அரசியலில் இருப்பேன். அரசியலில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. பா.ஜனதா எனக்கு அத்தனை பதவிகளையும் வழங்கியுள்ளது. எனக்கு கிடைத்த அளவுக்கு வாய்ப்புகள் பா.ஜனதாவில் யாருக்கும் கிடைக்கவில்லை.



வாஜ்பாய் பிரதமராக இருந்தபாது மத்திய மந்திரி பதவி கிடைத்தது. நான் வேண்டாம் என்று கூறிவிட்டு கர்நாடகத்தில் கட்சி பணி ஆற்றினேன். அதனால் கவர்னராக நான் விரும்பவில்லை. கர்நாடகத்திலேயே இருந்து நான் கட்சி பணியாற்ற விரும்புகிறேன். காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்தவர்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாது. அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. புதிதாக வரும் முதல்-மந்திரி அனைவரையும் அரவணைத்து செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது. புதிய முதல்-மந்திரிக்கு அனைத்து ஒத்துழைப்பும் வழங்குவேன்.



இவ்வாறு எடியூரப்பா கூறினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை