Skip to main content

வணிகவரி, பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார்களுக்கு தாமதமின்றி தீர்வு காண வேண்டும் - முகஸ்டாலின்

Jul 24, 2021 128 views Posted By : YarlSri TV
Image

வணிகவரி, பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார்களுக்கு தாமதமின்றி தீர்வு காண வேண்டும் - முகஸ்டாலின் 

வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார்களுக்கு தாமதமின்றி தீர்வு காண வேண்டும் என்று அரசு அதிகாரிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.



தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது,



சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-



வணிகவரி மற்றும் பதிவுத்துறை வரி வருவாய் இலக்கை முழுவதும் எய்திட முனைப்புடன் செயல்பட வேண்டும். நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. வரி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசிடமிருந்து விரைவாக பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.



வணிகவரி மற்றும் பதிவுத்துறை குறித்த புகார்களைத் தெரிவிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை மூலமாக பெறப்படும் வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் புகார்கள், எவ்வித தொய்வுமின்றி தீர்வு காணப்பட வேண்டும்.



பொதுமக்களுக்கு நல்ல பல திட்டங்களைச் செயல்படுத்த வரி வருவாய் அத்தியாவசியமானது. எனவே வரி ஏய்ப்பு நடவடிக்கையை உடனுக்குடன் கண்காணித்து அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வரியை வசூலிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



வணிகர் நல வாரியம் சீரிய முறையில் செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும். வணிகர் நல வாரியத்தில் வணிகர்கள் உறுப்பினராகி அதன் சேவைகளைப் பெறுவதற்கு துறை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். பதிவுத்துறையில் ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் உள்ள ஆவண தொகுதிகளைக் கணினியில் பதிவுசெய்து, அப்பணிகள் முடிவடைந்த பின்பு பொதுமக்கள் இணைய வழியாக ஆவணங்களின் சான்றிட்ட நகல்களைப் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும்.



எனவே பட்டா மாறுதல் செய்யும்போது தொடர்புடைய ஆவணங்களை வருவாய்த் துறையினர் இணைய வழியாக பார்வையிட முடியும். பத்திரப்பதிவு அலுவலகங்களின் சேவை, மக்களுக்கு ஏற்றவகையில் எளிதானதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் அமைய வேண்டும்.



இவ்வாறு அவர் பேசினார்.



வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும், நிதி ஒதுக்கீடு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி, வணிகவரி ஆணையர் மு.அ.சித்திக், பதிவுத்துறை தலைவர் ம.ப.சிவன் அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை