Skip to main content

யானை வேலிகளை பராமரிக்கும் தன்னார்வ படையணி தொடர்பில் பிரதமர் விடுத்துள்ள பணிப்பு!

Jul 14, 2021 180 views Posted By : YarlSri TV
Image

யானை வேலிகளை பராமரிக்கும் தன்னார்வ படையணி தொடர்பில் பிரதமர் விடுத்துள்ள பணிப்பு! 

காட்டு யானை – மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கமைய யானை வேலிகளை பராமரிப்பை சமூகத்தினரின் பங்களிப்பு மற்றும் உள்ளூர் பங்குதாரர்களின் பங்களிப்புடன் தன்னார் படையணியிடம் வழங்கும் ஆரம்ப திட்டத்தை குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலிருந்து ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.



காட்டு யானை-மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு மின்சார வேலிகளை அமைப்பது தொடர்பில் அலரி மாளிகையில் இன்று (13) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.



வனஜீவராசிகள் பாதுகாப்பு அல்லது சிவில் பாதுகாப்பு திணைக்களங்களுக்கு மாத்திரம் இதன் ஒட்டுமொத்த பொறுப்பும் சுமத்தப்படாத வகையில் பிரதேச செயலாளர் அலுவலகம், விவசாய சேவைகள் திணைக்களம், மகாவெலி அதிகாரசபை, மற்றும் கிராம சேவகர்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் கிராம சமூக அமைப்புகள் உள்ளிட்ட தன்னார்வ படையணிகள் ஊடாக இந்த யானை – மனித மோதலை கட்டுப்படுத்த முடியும் என பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.



2021 ஆம் ஆண்டில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் தேசிய வேலைத்திட்டமாக 1500 கிலோமீற்றர் மின்சார வேலி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.



இதுவரை அதற்கான மூலப்பொருள் கொள்வனவு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதுடன், 19 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் முப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், பிரதேச வனஜீவராசிகள் அலுவலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகம் என்பன யானை வேலி அமைப்பதற்கு பங்களிப்பு செய்துள்ளது.



இதுவரை அமைக்கப்பட்டுள்ள 4500 கிலோமீற்றர் வரையான யானை வேலிகளை பராமரிப்பதற்கு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 3900 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பல்நோக்கு மேம்பாட்டு திணைக்களத்தின் 1500 பேரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்தது.



குறித்த கலந்துரையாடலில் வனசீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும் அகழிகளை அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் காடுகளை மீண்டும் வளர்த்தல் மற்றும் வனவளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானி யோஷித ராஜபக்ஷ, பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன, இராஜாங்க அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) டவியு.பீ.பீ.பெர்னாண்டோ, மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) தீபால் சிறிவர்தன, மகாவலி வலயங்கள் சார்ந்த கால்வாய்கள் மற்றும் குடியிருப்புகளின் பொது உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.சி.எம்.



ஹேரத், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜுட் நிலூக்ஷன், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கோ.டி.நிஹால் சிறிவர்தன, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சித் லமாஹேவகே உள்ளிட்ட முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை