Skip to main content

மும்பையில் சரத்பவாருடன் 3 மணி நேரம் ஆலோசனை நடத்திய பிரசாந்த் கிஷோர்!

Jun 12, 2021 186 views Posted By : YarlSri TV
Image

மும்பையில் சரத்பவாருடன் 3 மணி நேரம் ஆலோசனை நடத்திய பிரசாந்த் கிஷோர்! 

பிரதமர் மோடியில் தொடங்கி பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங், ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்காக தேர்தல் வியூகங்களை வகுத்துக்கொடுத்த பிரசாந்த் கிஷோர், அவர்களை வெற்றி பெறவும் செய்தார்.



மேலும் சமீபத்தில் நடந்து முடிந்து 5 மாநில சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க.வும், மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை பிடித்தது. இந்த கட்சிகளுக்கும் தேர்தல் வியூகங்கள் அமைப்பதில் ஆலோசகராக இருந்தவர் பிரசாந்த் கிஷோர் தான்.



இந்த தேர்தல் முடிந்த நிலையில் இனிமேல் தேர்தல் ஆலோசகராக செயல்படபோவதில்லை என அறிவித்து இருந்தார்.



இந்தநிலையில் பிரசாந்த் கிஷோர் நேற்று மும்பையில் உள்ள சில்வர் ஒக் வீட்டில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 3 மணி நேரம் நடந்தது. இதில் 2 பேரும் நாட்டில் நிலவும் அரசியல் சூழல் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.



மேலும் சரத்பவார்பிரசாந்த் கிஷோருக்கு மதிய விருந்து அளித்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் சந்திப்புக்கு பிறகு பிரசாந்த் கிஷோர், சரத்பவார் என யாரும் வீட்டுக்கு வெளியே காத்திருந்த செய்தியாளர்களை சந்தித்து பேசவில்லை.



2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான அணியை அமைப்பது குறித்து சரத்பவார்  பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.



இந்தநிலையில் இந்த சந்திப்பு குறித்து மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறுகையில், ‘‘பிரசாந்த் கிஷோர் அரசியல் ஆலோசகராக செயல்படபோவதில்லை என ஏற்கனவே அறிவித்துவிட்டார்’’ என்றார்.



இது குறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், பிரசாந்த் கிஷோருடன் பல தலைவர்கள் தொடர்பில் உள்ளனர் என்றார். இதேபோல தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரான சகன்புஜ்பால், சரத்பவார்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு பற்றி அவருக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார்.



கடந்த சில நாட்களுக்கு முன் கூட்டணி கட்சி தலைவர்களுடன் டெல்லி சென்ற முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனியாக பிரதமரை சந்தித்து பேசியிருந்த நிலையில், பிரசாந்த் கிஷோரை அழைத்து சரத்பவார் பேசியிருப்பது மராட்டிய அரசியலிலும் கிலியை ஏற்படுத்தி உள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை