Skip to main content

இலவச தடுப்பூசி மற்றும் ரேஷன் பொருட்களுக்கு ரூ.1.45 லட்சம் கோடி கூடுதல் செலவு!

Jun 09, 2021 212 views Posted By : YarlSri TV
Image

இலவச தடுப்பூசி மற்றும் ரேஷன் பொருட்களுக்கு ரூ.1.45 லட்சம் கோடி கூடுதல் செலவு! 

கொரோனாவின் 2-வது அலை இந்தியாவை கடுமையாக பதம் பார்த்து வருகிறது. உலக அளவில் அதிக பாதிப்புகளை பெற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.



கண்ணுக்குத்தெரியா இந்த உயிர்க்கொல்லி வைரசிடம் இருந்து மக்களை பாதுகாக்கும் ஒரே ஆயுதமாக தடுப்பூசி மட்டுமே கைவசம் இருக்கிறது. எனவே எவ்வளவு வேகத்தில் மக்களை சென்றடைய முடியுமோ அவ்வளவு வேகத்தில் தடுப்பூசியை கொண்டு சேர்க்க மத்திய-மாநில அரசுகள் முயன்று வருகின்றன.



பல்வேறு கட்டங்களாக நடந்து வரும் தடுப்பூசி திட்டத்தில், கடந்த மாதம் 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடவும், மாநிலங்களே இந்த தடுப்பூசியை கொள்முதல் செய்யவும் மத்திய அரசு அனுமதித்தது.



ஆனால் தடுப்பூசி கொள்முதலில் மாநில அரசுகளால் எதிர்பார்த்த வேகத்தில் செல்ல முடியவில்லை. எனவே தடுப்பூசி திட்டத்தை மையப்படுத்தி மத்திய அரசே கொள்முதல் செய்து வழங்குமாறு மாநிலங்கள் வேண்டுகோள் விடுத்தன.



இதைத்தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்காக வருகிற 21-ந் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க இருப்பதாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார். தடுப்பூசிக்காக இனி மாநிலங்கள் நிதி செலவிட வேண்டாம் எனவும் அவர் கூறினார்.



இதைப்போல கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களை பாதுகாப்பதற்காக வருகிற நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் பொருட்கள் வழங்குவதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் சுமார் 80 கோடி பேர் பயன்பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.



இந்த 2 மிகப்பெரும் திட்டங்களுக்காக மத்திய அரசு மிகப்பெரும் நிதியை, அதாவது ரூ.1.45 லட்சம் கோடி அளவுக்கு கூடுதலாக செலவிட வேண்டும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.



அந்தவகையில் இலவச தடுப்பூசிக்காக ரூ.45 ஆயிரம் கோடி முதல் ரூ.50 ஆயிரம் கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இது கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையை (ரூ.35 ஆயிரம் கோடி) விட அதிகமாகும்.



இதைப்போல சுமார் 80 கோடி பேருக்கு தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் 1 கிலோ பருப்பு என நவம்பர் வரை வழங்குவதற்கு ரூ.1.1 லட்சம் கோடி முதல் ரூ.1.3 லட்சம் கோடி வரை ஆகும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது.



இதன் மூலம் இரு திட்டங்களுக்காக மத்திய அரசு கூடுதலாக ரூ.1.45 லட்சம் வரை செலவு செய்யும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. தடுப்பூசிக்காக பட்ஜெட்டில் ஏற்கனவே ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



ரிசர்வ் வங்கி தனது உபரி நிதியான ரூ.99,122 கோடியை மத்திய அரசுக்கு வழங்க சமீபத்தில் முடிவு செய்திருந்தது. இத்துடன் பெட்ரோல்-டீசல் மீதான வரி வருவாய்களையும் இந்த 2 திட்டங்களுக்கு மத்திய அரசு செலவிடலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.



18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக இலவசமாக தடுப்பூசி வழங்குவதாக பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், இந்த தடுப்பூசிகளை எங்கிருந்து அல்லது எவ்வாறு கொள்முதல் செய்யப்படும் என்ற விவரங்களை மத்திய அரசு வெளியிடவில்லை.



இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகிறது. ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் இந்த மாத மத்தியில் வர்த்தக ரீதியில் பயன்பாட்டுக்கு வருகிறது.



இதைப்போல பல்வேறு வெளிநாட்டு தடுப்பூசிகளின் இறக்குமதிக்காக மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை