Skip to main content

நைஜீரியாவில் கோர விபத்து - ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் ராணுவ தளபதி உள்பட 11 பேர் சாவு!

May 23, 2021 192 views Posted By : YarlSri TV
Image

நைஜீரியாவில் கோர விபத்து - ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் ராணுவ தளபதி உள்பட 11 பேர் சாவு! 

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போகோ ஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதோடு கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி பொதுமக்களையும் கொன்று குவித்து வருகின்றனர்.



இவர்களின் பயங்கரவாதத் தாக்குதல்களில் இதுவரை சுமார் 27 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். போகோ ஹரம் பயங்கரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்க முடியாமல் ராணுவம் திணறி வருகிறது.‌



இதற்கிடையே, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் ராணுவத்தின் செயல் திறனை அதிகரிக்கும் வகையில் ராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளை அரசு மாற்றி அமைத்தது.



அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் நைஜீரியாவின் புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் இப்ராஹிம் அத்தாஹிரு நியமிக்கப்பட்டார்.



இவர் பொறுப்பேற்றதற்கு பிறகு பயங்கரவாதத்துக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன‌. பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த மாகாணங்களில் கூடுதல் படைகளைக் குவித்து பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார்.



இந்நிலையில், நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கதுனா மாகாணத்தில் ராணுவ நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக ராணுவ தளபதி இப்ராஹிம் அத்தாஹிரு நேற்று முன்தினம் தலைநகர் அபுஜாவில் இருந்து ராணுவ விமானத்தில் புறப்பட்டு சென்றார். அவருடன் மூத்த ராணுவ அதிகாரிகள் 10 பேரும் அந்த விமானத்தில் பயணித்தனர்.



அந்த ராணுவ விமானம் கதுனா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது சற்றும் எதிர்பாராத வகையில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.‌



தரையில் மோதிய வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் ராணுவ தளபதி இப்ராஹிம் அத்தாஹிரு உள்பட 11 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.



மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேரிட்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக நைஜீரிய ராணுவம் தெரிவித்துள்ளது.



விமான விபத்தில் ராணுவ தளபதி உள்பட மூத்த ராணுவ அதிகாரிகள் 11 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு அந்த நாட்டின் அதிபர் முகமது புகாரி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.



ஏற்கனவே, கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி ராணுவ விமானம் ஒன்று தலைநகர் அபுஜாவில் இருந்து புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் தரையில் விழுந்து நொறுங்கியதில் ராணுவ அதிகாரிகள் 7 பேர் உயிரிழந்தது நினைவு கூரத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை