Skip to main content

களக்காடு தலையணை மூடப்பட்டது- சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிப்பு!

Apr 17, 2021 188 views Posted By : YarlSri TV
Image

களக்காடு தலையணை மூடப்பட்டது- சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிப்பு! 

நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை உள்ளது.



சுற்றுச்சூழல் சுற்றுலா தலமான தலையணையில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி ஓடி வருவதாலும், அதில் குளுமை அதிகம் என்பதாலும் அங்கு குளிக்க சுற்றுலா பயணிகள் தனி ஆர்வம் காட்டி வருகின்றனர்.



உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தலையணைக்கு வந்து செல்கின்றனர். தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது.



இந்நிலையில் 2-ம் கட்ட கொரோனா தொற்று பரவி வருவதால் தலையணையில் கொரோனா தடுப்பு விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது.



சுற்றுலா பயணிகள் முக கவசம் அணிந்து வர வேண்டும், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும், சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிகள் பின்பற்றப்பட்டு வந்தது. 50 சதவீத சுற்றுலா பயணிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.



இதனிடையே 2-ம் கட்ட கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருவதை அடுத்து களக்காடு தலையணையை மூட மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு உத்தரவின் பேரில் இன்று முதல் தலையணை சுற்றுலா தலம் தற்காலிகமாக மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.



இதையொட்டி தலையணை நுழைவு கேட் மற்றும் சோதனை சாவடி மூடப்பட்டு, வனசரகர் பாலாஜி தலைமையிலான வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த தற்காலிக தடை உத்தரவு 15 நாட்களுக்கு நீடிக்கும் என்றும், அதன்பின் கொரோனா பரவல் தாக்கத்தை பொறுத்து தடையை நீடிப்பதா? அல்லது தடையை விலக்குவதா? என்று முடிவு செய்யப்படும் என்று களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.



இதுபோல திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயில் வனப்பகுதிக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை