Skip to main content

வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு முழுவீச்சில் ஏற்பாடுகள்!

Apr 06, 2021 173 views Posted By : YarlSri TV
Image

வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு முழுவீச்சில் ஏற்பாடுகள்! 

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவாகும் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.



தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) முடிந்தவுடன், தேர்தல் அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு, அந்தந்த தொகுதி வாக்கு எண்ணும் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படும்.



சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள ராணிமேரி கல்லூரி, நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 இடங்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்கள் ஆகும்.



சென்னைக்குட்பட்ட 16 தொகுதிகளில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்), திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய 5 தொகுதிகளில் பதிவாகும் வாக்குப்பதிவு எந்திரங்கள் ராணி மேரி கல்லூரி மையத்திலும், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம்விளக்கு, அண்ணாநகர் ஆகிய 6 தொகுதிகளில் பதிவாகும் வாக்குப்பதிவு எந்திரங்கள் லயோலா கல்லூரி மையத்திலும், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய 5 தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குப்பதிவு எந்திரங்கள் கிண்டி அண்ணா பல்கலைக்கழக மையத்திலும் வைக்கப்பட உள்ளது.



இந்த 3 மையங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையின் உள்ளேயும், வெளியேயும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. அதில் பதிவாகும் காட்சிகளை நேரடியாக கண்காணிக்க எல்.இ.டி. திரை வைக்கப்பட்டுள்ளது.



வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு, அந்தந்த தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைகளில் வைத்து பூட்டுபோட்டு ‘சீல்’ வைக்கப்படும். அந்த அறைகள் முன்பு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினரும், ஆயுதப்படை போலீசாரும் ‘ஷிப்ட’ முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.



வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவுவாயிலிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட இருக்கின்றனர். சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.



வேட்பாளர்களின் முகவர்கள் அடையாள அட்டையுடன் வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். மின்னணு எந்திரங்கள் வைக்கப்படும் அறைகளின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை அவர்கள் 24 மணி நேரமும் பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.



வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 2-ந்தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை