Skip to main content

ஜெனிவா தீர்மானத்தை நிராகரித்தது இலங்கை - நாடாளுமன்றில் அரசு அறிவிப்பு

Mar 26, 2021 184 views Posted By : YarlSri TV
Image

ஜெனிவா தீர்மானத்தை நிராகரித்தது இலங்கை - நாடாளுமன்றில் அரசு அறிவிப்பு 

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும் ஜக்கிய நாடுகள் அமைப்பின் சகல நிறுவனங்களுடன் தொடர்ச்சியாக இணைந்து செயற்படுவதாக அரசு நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது.



இலங்கை இறைமை கொண்ட நாடாகும். அந்த நிலையைத் தொடர்ச்சியாகப் பாதுகாப்பதே அரசின் எதிர்ப்பார்ப்பாகும் என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.



அவர் மேலும் தெரிவித்ததாவது:-



அரசு பொறுப்புக்கூறல் விடயத்தை உள்ளூர் பொறிமுறையின் ஊடாக முன்னெடுக்கும். தனி ஈழ நாட்டை இலங்கையில் கட்டியெழுப்பும் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய சிலர் தற்போது அதனை வேறு ஒரு விதத்தில் முயற்சிக்கின்றனர்.



முப்பது வருட கால போரை முடிவுக்குக் கொண்டு வந்து நாடு பிளவுபடுவதை இராணுவத்தினர் தடுத்து மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.



ஐ.நா. மனித உரிமைகள் சபை எந்தவித அடிப்படையும் இன்றி இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்காக மேற்கொள்ளும் முயற்சியை நிராகரிக்கின்றோம்.



அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை முன்னெடுத்து மக்களின் மனித உரிமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பாதுகாப்பதற்கு சமகால அரசு செயற்படுகின்றது.



ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரான இலங்கைக்கு எதிராகச் சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாகப் பிரித்து பார்க்க முடியும். விடுதலைப்புலிகள் அமைப்புடன் இடம்பெற்ற மோதலில் அந்த அமைப்பு தோல்வியடைந்த காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் உயிரிழப்புக்கள் குறித்து விசாரணை செய்வதில் உள்ள முரண்பாடுகள் மற்றும் கடந்த அரசை தோல்வியடையச் செய்து நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நிர்வாகத்தால் முடிந்துள்ளமை விசேட அம்சமாகும்.



நாடொன்றில் உலக விடயங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கருத்துத் தெரிவிக்க முடியாது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை சீர்குலைக்கும் வகையில் எதிர்க்கட்சியினர் முன்வைத்த விடயங்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைக்குப் பின்புலமாக அமைந்தது. இவர்கள் ஒன்றிணைந்த வகையில் செயற்பட்டுள்ளமை தெளிவாகின்றது.



நாட்டின் சுகாதார நிலைமையைப் பாதுகாப்பதற்காக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை அறியாமல் அது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கையிட்டுள்ளார்.



கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நாடுகள் மத்தியில் இலங்கை முன்னிலையில் காணப்படுகின்றது. இருப்பினும் அது தொடர்பாக அறியாமல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.



கடந்த அரச காலத்தில் மாகாண சபை முறைமையில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது திருத்தம் தொடர்பில் வாக்களிப்பை நடத்துவதற்கு முடியாத நிலை ஏற்பட்டது.



முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமருக்கு இடையில் இருந்து வந்த கருத்து முரண்பாடுகள் காரணமாக நாடு மேலும் சிக்கலான நிலைக்குத் தள்ளப்பட்டது. இதற்கு அமைவாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் உயர்நீதிமன்றம் வரையில் விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனைச் சரி செய்வதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்குத் தெளிவான மக்கள் ஆணை கிடைத்தது என தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை