Skip to main content

மன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த 48 வயதான பெண்!

Mar 20, 2021 165 views Posted By : YarlSri TV
Image

மன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த 48 வயதான பெண்! 

தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சென்று தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான பெண் ஆசிரியர் சாதனை படைத்துள்ளார்.



தலைமன்னாரில் இருந்து நேற்று (19) அதிகாலை 4 மணி 10 நிமிடத்தில் அவரது நீச்சல் ஆரம்பமாகி நேற்று (19) மாலை 5 மணி 50 நிமிடங்களுக்கு நிறைவு செய்தார். தமிழகத்தையும், இலங்கையையும் பாக் ஜலசந்தி கடற்பகுதி பிரிக்கிறது.



ராமேஸ்வரம் தீவும், அதை தொடர்ந்துள்ள மணல் திட்டுக்களான ராமர் பாலமும் பாக்ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்து பிரிக்கிறது.



தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த, அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த கடற்பகுதி இது.



பாக் ஜலசந்தி கடற்பகுதியை இலங்கை வல்வெட்டித்துறையை சேர்ந்த நவரத்தினசாமி என்ற தமிழர் முதன் முதலாக 1954ஆம் ஆண்டு நீந்திக் கடந்தார்.



தொடர்ந்து 1966 ஆம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த மிகிர்சென் என்பவர் பாக் ஜலசந்தியை தலை மன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரை நீந்திக் கடந்தார்.



வல்வெட்டித்துறையை சேர்ந்த நீச்சல் வீரரான குமார் ஆனந்தன் 1971 ஆம் ஆண்டு தலைமன்னாரில் இருந்து தனுஸ் கோடிக்கு நீந்தி வந்து, மீண்டும் தலைமன்னாருக்கு 51 மணி நேரத்தில் நீந்திச் சென்று சாதனை படைத்தார்.



இந்நிலையில், பல்வேறு நீச்சல்போட்டிகளில் சாதனை படைத்த தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சியாமளா கோலி (வயது-48), தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான சுமார் 30 கி.மீ. தூரம் கொண்ட பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி சாதனை படைத்தார்.



தலைமன்னாரில் நேற்று (19) அதிகாலை 4 மணி 10 நிமிடத்தில் அவரது நீச்சல் ஆரம்பமானது. சியாமளா கோலி 30 கி.மீ தூரத்தை தனுஸ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு நேற்று (19) மாலை 5 மணி 50 நிமிடங்களுக்கு சுமார் 13 மணி 40 நிமிட நேரத்தில் சென்றடைந்தார்.



இதன் மூலம் பாக் ஜலசந்தியை நீந்தி கடந்த 13ஆவது நீச்சல் வீரராகவும் உலகளவில் இரண்டாவது வீராங்கனையாகவும், இந்திய அளவில் முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். கடந்த ஆண்டு பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடப்பதற்கு இந்திய-இலங்கை அரசுகளிடம் அனுமதி கிடைத்தது. ஆனால் கொரோனா பரவல் காரணத்தினால் முடியாமல் போனது.



பாக் ஜலசந்தியை பெண்ணாக நான் நீந்தி கடந்ததன் மூலம் பெண்களால் அனைத்து சாதனைகளையும், உயர்ந்த இலக்குகளை அடைவதற்கு நம்பிக்கை அளிக்கக் கூடியதாகவும் இருக்கும் என தலைமன்னார் முதல் தனுஸ்கோடி வரையிலான கடலை நீந்தி கடந்த சியாமளா கோலி தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை