Skip to main content

100 நாட்களுக்குள் மனுக்களுக்கு தீர்வு காண்போம்- மு.க.ஸ்டாலின் மீண்டும் உறுதி

Mar 15, 2021 181 views Posted By : YarlSri TV
Image

100 நாட்களுக்குள் மனுக்களுக்கு தீர்வு காண்போம்- மு.க.ஸ்டாலின் மீண்டும் உறுதி 

தமிழகத்தில் 187 தொகுதிகளில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்‘ பிரசார நிகழ்ச்சி மூலம் பெறப்பட்ட மனுக்கள் 72 பெட்டிகளில் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு கொண்டு வரப்பட்டது.



இந்த பிரசார பயண நிகழ்ச்சி எவ்வாறு இருந்தது என்பது குறித்து மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:



கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி நம்முடைய தலைவர் கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்து வாசலில் நான் ஒரு சபதம் ஏற்றேன். அதுமட்டுமல்ல, ஒரு உறுதிமொழியையும் நான் ஏற்றுக் கொண்டேன்.



தமிழக மக்களின் அடிப்படை பிரச்சினைகளை நாம் ஆட்சி பொறுப்பேற்று, அடுத்த 100 நாட்களில் தீர்த்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதற்காக ஒரு திட்டத்தை உருவாக்கி, அதற்கு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்‘ என்ற பெயரிடப்பட்டு அந்த பயணத்தை தொடங்கினேன்.



234 தொகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்றுதான் முடிவு செய்து, அந்த பயணத்தை நான் தொடங்கினேன். ஆனால் எதிர்பாராதவிதமாக தேர்தல் தேதி விரைவாக அறிவிக்கப்பட்டதால், நான் ஈடுபட்டிருந்த அந்த பயணத்தில் சுணக்கம் ஏற்பட்டது. இதற்கு என்ன காரணம் என்றால், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல், அதன்பின்னர் வேட்பாளர்கள் தேர்வு நடந்திருக்கிறது.



நேற்றைய தினம் (நேற்றுமுன்தினம்) வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியாலும், என்னால் அந்த பயணத்தை முழுமையாக முடிக்க முடியவில்லை. ஆகவே 234 தொகுதிகளில் 187 தொகுதிகளில் நான் வலம் வந்திருக்கிறேன். மீதம் இருப்பது 47 தொகுதிகள்தான். அந்த தொகுதிகளின் மனுக்களை என்னால் நேரில் சென்று பெற முடியவில்லை. ஆனால் அந்த 48 தொகுதிகளில் நான் நேரடியாக செல்லாமலேயே, மனுக்களை வாங்கும் பணி தொடங்கி இருக்கிறது.



அந்த பெட்டிகளும் விரைவில் அண்ணா அறிவாலயத்துக்கு வந்து சேர இருக்கிறது. நான் மக்களிடம் இருந்து வாங்கி இருக்கிற மனுக்கள் மக்களின் இதயங்களாக இங்கு காட்சி அளித்து கொண்டிருக்கிறது.



திருவண்ணாமலையில் ஜனவரி 29-ந்தேதி தொடங்கி சென்னையில் பிப்ரவரி 28-ந்தேதி வரையிலே பயணத்தை நடத்தி இருக்கிறோம். 32 மாவட்டங்களில் இருக்கக்கூடிய 187 தொகுதி மக்களை சந்தித்து இருக்கிறோம். 38 நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் 10 லட்சம் பேர் நேரடியாக கலந்து கொண்டிருக்கிறார்கள். 17 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் இணையதளங்கள் மூலமாகவும், நேரடியாகவும் பெறப்பட்டுள்ளது.



லட்சக்கணக்கான மக்களின் கோரிக்கைகள், வேண்டுகோள்கள், பிரச்சினைகள் அனைத்தும் இந்த பெட்டியில் வைத்து பூட்டப்பட்டுள்ளது. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, மே.2-ந்தேதி உறுதியாக, எந்தவித ஐயப்பாடு இல்லாமல், இம்மியளவு கூட சந்தேகம் இல்லாமல் தி.மு.க.தான் ஆட்சிக்கு வர போகிறது. இதில் எந்த விவாதத்துக்கும் இடமில்லை. ஆட்சி அமைந்ததற்கு அடுத்தநாள் இந்த பெட்டிகள் எல்லாம் திறக்கப்படும். திறக்கப்பட்டு தமிழக மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் 100 நாட்களில் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியை, வாக்குறுதியை தொடர்ந்து சொல்லி கொண்டிருக்கிறேன். இப்போது மீண்டும் அந்த உறுதிமொழியை அளிக்கிறேன்.



‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சிக்காக முதல்-அமைச்சரின் எடப்பாடி தொகுதிக்கும் நான் சென்றிருந்தேன். அங்குதான் அதிகமான மனுக்கள் வந்தது. ஆக அந்தளவுக்கு முதல்-அமைச்சர் தொகுதி இருக்கிறது.



‘சொன்னதை செய்வோம். செய்வதைதான் சொல்வோம்’ என்று கருணாநிதி அடிக்கடி கூறுவார். அவருடைய மகனாக இருக்க கூடிய இந்த ஸ்டாலினும், ‘சொன்னதை தான் செய்வான். செய்வதைத்தான் சொல்வான்’. ஆக அந்த வழியில் நின்று நிச்சயமாக 100 நாட்களில் மக்களுடைய இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பேன். அ.தி.மு.க.ஆட்சியில் செய்த தவறுகள் தி.மு.க. ஆட்சியில் சரி செய்யப்படும். இந்த பிரச்சினைகள் எல்லாம் முடிவடைகிற போது, தமிழ்நாட்டில் 1 கோடி குடும்பங்கள் பயன் அடையும் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்.



முதல்-அமைச்சராக நான் பதவியேற்ற 100-வது நாளில், உங்களை சந்தித்து இதுதொடர்பான செய்திகளை வெளியிடுவேன்.



கடந்த 6 மாதமாக பலமுறை இந்த தமிழ்நாட்டை குறுக்கும், நெடுக்குமாக நான் சுற்றி வந்திருக்கிறேன். அந்தளவுக்கு பிரசாரம் நடந்திருக்கிறது. 10 ஆண்டு காலம் தமிழகம் பாழ்பட்டு கிடக்கிறது. பாழ்பட்டு கிடக்கிற தமிழகத்தை மீட்டெடுக்க ஒன்று திரள்வோம். அணி திரள்வோம். வெற்றி காண்போம்.



இவ்வாறு அவர் பேசினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை