Skip to main content

வாஷிங்மிஷின் கொடுப்பதாக கூறுவது நகைச்சுவை’- கமல்ஹாசன் பேச்சு

Mar 15, 2021 181 views Posted By : YarlSri TV
Image

வாஷிங்மிஷின் கொடுப்பதாக கூறுவது நகைச்சுவை’- கமல்ஹாசன் பேச்சு 

வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் தனது 3-ம் கட்ட தேர்தல் பிரசார பயணத்தை காஞ்சீபுரத்தில் தொடங்கினார்.



அதற்கு முன்னதாக பிரசார பொது கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் மூலம் காஞ்சீபுரம் ஏனாத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த இறங்கு தளத்திற்கு வந்தடைந்தார். அதன் பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம் சந்திப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளரும், காஞ்சீபுரம் வேட்பாளருமான கோபிநாத்தை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தை தொடர்ந்தார்.



பின்னர் காஞ்சீபுரம் காந்திரோடு பெரியார் தூண் அருகே அவர் பேசுகையில் கூறியதாவது:-



எனக்கு கட்சி நடத்த பணம் வேண்டும் என்பதற்காக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்தேன். இளம் வயதில் அம்மாவை இழந்தவன் நான். இதுவரை அதை யாரும் ஈடு செய்ய முடியவில்லை. அதனால் தான் இல்லத்தரசிகளை போற்றும் வகையில் சலுகைகள் வழங்க வேண்டும் என முடிவு செய்தேன்.



சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்துவதற்கு முன் இடஒதுக்கீடு கொடுக்கிறார்கள். பல வீடுகளில் கழிப்பறையே இல்லை. அதனை சரிசெய்ய முடியவில்லை. அதற்குள் இலவசமாக வாஷிங்மிஷின் கொடுக்கின்றனர். இரு கட்சியிலும் 33 சதவீதம் கிரிமினல் ஆட்கள் இருக்கின்றனர். சென்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றாதவர்கள், இந்த தேர்தலில் மட்டும் கொடுக்கும் வாக்குறுதியை எப்படி நிறைவேற்றுவார்கள்? ‘ஐந்து வருடங்களுக்கு உங்களை குத்தகைக்கு எடுத்துவிட்டு உங்களுக்கு வாஷிங்மிஷின் கொடுக்கிறேன்’ என சொல்வது நகைச்சுவையாக உள்ளது. உங்கள் வீட்டின் விளக்காக என்னை ஏற்றி வையுங்கள், நான் சினிமா வாழ்க்கையை முடித்து கொள்கிறேன்.



கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்புகளை ஊடகங்களின் வாயிலாக பரப்பி வருகிறார்கள். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என மக்கள், அவர்களிடம் கேட்டால், ஓடி விடுவார்கள். தமிழக கஜானாவை காலி செய்து விட்ட இவர்கள், ரூ.5 லட்சம் கோடி கடனை ரூ.10 லட்சம் கோடி கடனாக மாற்றுவார்கள். நான் நிரந்தர முதல்-அமைச்சராக அமர்வதற்கு இங்கு வரவில்லை. நான் நேர்மையானவன், நான் முறையாக வருமான வரிக்கட்டியவன். எனக்கு கட்சி முக்கியமில்லை. மக்கள் தான் முக்கியம்.



இவ்வாறு அவர் தெரிவித்தார்.



கமல்ஹாசன், தேர்தல் பிரசாரம் முடிந்து அங்கிருந்து தனது காரில் புறப்பட்டார். அப்போது மர்மநபர், அவரது கார் கண்ணாடியை தனது கைகளால் தட்டினார். அவரது கையில் கல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.



உடனே கமலின் பாதுகாப்புக்கு வந்திருந்தவர்களும், அக்கட்சி தொண்டர்களும் அந்த நபரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.



உடனடியாக அங்கு வந்த போலீசார் அந்த நபரை மீட்டு மோட்டார் சைக்கிளில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். மேலும் அவரிடம் இதுபற்றி விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை