Skip to main content

பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!

Mar 03, 2021 252 views Posted By : YarlSri TV
Image

பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு! 

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதோடு கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி பொதுமக்களையும் கொன்று குவித்து வருகின்றனர். இவர்களின் பயங்கரவாத தாக்குதல்களில் இதுவரை சுமார் 27 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.



அதுமட்டுமின்றி இவர்கள் பள்ளி மாணவ-மாணவிகளை கடத்திச்சென்று அவர்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.



அதேபோல் போகோ ஹரம் தவிர நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தும் இன்னும் பல பயங்கரவாத அமைப்புகள் மாணவ-மாணவிகளை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு அரசிடம் இருந்து பணம் மற்றும் தங்களுக்கு தேவையான காரியங்களை சாதித்துக்கொள்கின்றன. அந்த வகையில் நைஜீரியாவில் அண்மை காலமாக பள்ளிக்கூடங்களுக்குள் புகுந்து மாணவ-மாணவிகள் கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.



இந்த நிலையில்தான் நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற கிராமத்தில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளிக்குள் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் நுழைந்தனர். வகுப்பறைகளுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் மாணவிகளை சிறைபிடித்த பயங்கரவாதிகள் லாரிகளை கொண்டு வந்து அதில் மாணவிகளை ஏற்றி கடத்திச்சென்றனர்.



300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கடத்தி செல்லப்பட்டதாக பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.‌



இந்த கடத்தல் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அந்த நாட்டின் அதிபர் முகமது புகாரி, கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளை பத்திரமாக மீட்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.‌



அதன்படி மாணவிகளை கடத்தி சென்ற பயங்கரவாதிகளுடன் மாகாண அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் கடத்தப்பட்ட மாணவிகளை விடுவிப்பதற்கு பயங்கரவாதிகள் ஒப்புக்கொண்டனர்.



அதன்படி பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 279 மாணவிகளும் நேற்று விடுவிக்கப்பட்டதாக ஜம்பாரா மாகாண கவர்னர் பெல்லோ மாதவல்லே அறிவித்தார். 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கடத்தப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என்று குறிப்பிட்ட அவர் கடத்தப்பட்ட 279 பேரும் விடுவிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.



இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘கடத்தப்பட்ட மாணவிகள் விடுவிக்கப்பட்ட செய்தி என் இதயத்தை மகிழ்விக்கிறது. இதை நான் உங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது மாணவிகள் அனைவரும், அரசு நல விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆரோக்கியமான நிலையில் உள்ளனர்’’ என தெரிவித்துள்ளார்.



அதேபோல் மாணவிகள் விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்து அதிபர் முகமது புகாரி கூறுகையில் ‘‘மாணவிகள் விடுதலையான செய்தியில் நான் மகிழ்ச்சியை உணர்ந்தேன். எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் மாணவிகளின் சோதனையானது மகிழ்ச்சியான முடிவுக்கு வந்துவிட்டது என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றார்.



அதேசமயம் மாணவிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையில் பயங்கரவாதிகள் என்னென்ன கோரிக்கைகள் வைத்தனர். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதா என்பன உள்ளிட்ட தகவல்கள் வெளியாகவில்லை. அதேபோல் மாணவிகள் கடத்தலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை