Skip to main content

369 ரன்னுக்கு ஆல் அவுட் முன்னிலை பெற இந்தியா முனைப்பு!

Jan 17, 2021 241 views Posted By : YarlSri TV
Image

369 ரன்னுக்கு ஆல் அவுட் முன்னிலை பெற இந்தியா முனைப்பு! 

இந்திய அணியுடனான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், ஆஸ்திரேலியா 369 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன் எடுத்துள்ளது. கபா மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன் எடுத்திருந்தது. தொடக்க வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறிய நிலையில்... லாபுஷேன் 108, ஸ்மித் 36, மேத்யூ வேடு 45 ரன் விளாசினர். கேமரான் கிரீன் 28 ரன், கேப்டன் டிம் பெய்ன் 38 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 98 ரன் சேர்த்தது. பெய்ன் 50 ரன் (104 பந்து, 6 பவுண்டரி), கிரீன் 47 ரன் (107 பந்து, 6 பவுண்டரி), கம்மின்ஸ் 2 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 5 விக்கெட் இழப்புக்கு 311 ரன் என்ற நிலையில் இருந்து 315 ரன்னுக்கு 8 விக்கெட் என ஆஸி. அணி திடீர் சரிவை சந்தித்தது. அடுத்து வந்த நாதன் லயன் 24 ரன், ஹேசல்வுட் 11 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன் குவித்து ஆல் அவுட்டானது (115.2 ஓவர்). ஸ்டார்க் 20 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.



இந்திய பந்துவீச்சில் நடராஜன், சுந்தர், தாகூர் தலா 3, சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து ரோகித், கில் இருவரும்  இந்திய அணியின் முதல் இன்னிங்சை தொடங்கினர். கில் 7 ரன் மட்டுமே எடுத்து கம்மின்ஸ் வேகத்தில் ஸ்மித் வசம் பிடிபட்டார். அடுத்து ரோகித்துடன் செதேஷ்வர் புஜாரா இணைந்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்தது. சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ரோகித் 44 ரன் (74 பந்து, 6 பவுண்டரி) விளாசி லயன் சுழலில் ஸ்டார்க் வசம் பிடிபட்டார். அவர் தேவையில்லாமல் சிக்சர் அடிக்க முயற்சித்து விக்கெட்டை தானம் செய்தது குறிப்பிடத்தக்கது. தேநீர் இடைவேளையின்போது இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன் எடுத்திருந்தது. போதிய வெளிச்சம் இல்லததால் ஆட்டம் தடைபட்ட நிலையில், தொடர்ந்து கனமழை கொட்டியதால் அத்துடன் 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. புஜாரா 8 ரன், கேப்டன் ரகானே 2 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்தியா கை வசம் 8 விக்கெட் இருக்க, இன்னும் 307 ரன் பின் தங்கிய நிலையில் இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. முன்னிலை பெற இரு அணிகளுமே வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை