Skip to main content

புதிய சாதனையுடன் ஆஸி மண்ணில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தொடரை வென்றது இந்தியா!

Jan 19, 2021 265 views Posted By : YarlSri TV
Image

புதிய சாதனையுடன் ஆஸி மண்ணில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தொடரை வென்றது இந்தியா! 

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இந்தியா அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.



இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, இந்தியா அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.



கடந்த முறை முதல்முறையாக ஆஸி மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா அணி, இம்முறையும் வெற்றிபெற்று சாதனைப்படைத்துள்ளது.



இதுதவிர அவுஸ்ரேலியாவின் கோட்டையான கப்பா மைதானத்தில், இந்தியா அணி முதல்முறையாக வெற்றிபெற்று 32 ஆண்டுகால சாதனையை தகர்த்தெறிந்துள்ளது.



பிரிஸ்பேன் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.



இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 369 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.



இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மார்னஸ் லபுஸ்சேகன் 108 ஓட்டங்களையும் டிம் பெய்ன் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



இந்திய அணியின் பந்துவீச்சில், நடராஜன், சர்துல் தாகூர் மற்றும் வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் சிராஜ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.



இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, 336 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.



இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சர்துல் தாகூர் 67 ஓட்டங்களையும் வொஷிங்டன் சுந்தர் 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



இதனையடுத்து 33 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலியா அணி, 294 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனால் இந்தியா அணிக்கு 328 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.



இதில் அணி சார்பில் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸ்டீவ் ஸ்மித் 55 ஓட்டங்களையும் வோர்னர் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



இந்திய அணியின் பந்துவீச்சில், சிராஜ் 5 விக்கெட்டுகளையும் தாகூர் 4 விக்கெட்டுகளையும் வொஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.



இதனைத்தொடர்ந்து 328 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.



இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சுப்மான் கில் 91 ஓட்டங்களையும், ரிஷப் பந்த் ஆட்டமிழக்காது 89 ஓட்டங்களையும் புஜாரா 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், பெட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் நாதன் லியோன் 2 விக்கெட்டுகளையும், ஜோஸ் ஹெசில்வுட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.



இப்போட்டியின் ஆட்டநாயகனாக ரிஷப்பந்த்தும், தொடரின் நாயகனாக பெட் கம்மின்ஸ்சும் தெரிவுசெய்யப்பட்டனர்.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை