Skip to main content

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள நிவாரணம் வழங்கியதில் குளறுபடி!

Dec 09, 2020 266 views Posted By : YarlSri TV
Image

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள நிவாரணம் வழங்கியதில் குளறுபடி! 

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள நிவாரணம் வழங்கியதில் குளறுபடி இடம்பெற்றுள்ளமை தொடர்பில் பிரதேச மக்கள் ஆதங்கம் வெளியிடுகின்றனர். ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இந்துபுரம் கிராம சேவையாளர் பிரிவில் குறித்த குளறுபடி இடம்பெற்றுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.



அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தின்போது  7 வீடுகளுக்குள் நீர் உட்புகுந்துள்ளது. அது தவிர்ந்து 40 வீடுகளை சுற்றி வெள்ள நீர் தங்கியதுடன் சுமார் 150க்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். குறித்த கிராமசேவையாளர் பிரிவில் உள்ள செல்வபுரம் மற்றும் இந்துபுரம் மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பாரிய நிதியில் செலவு செய்து அமைக்கப்பட்ட வீதி முறையான புனரமைப்பு இல்லாமையால் வெள்ளத்தினால் அழிவடைந்துள்ளது.



இவ்வாறான நிலையில் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களிற்காக உலர் உணவு பொதிகளை தொண்டு அமைப்புக்கள் வழங்கியிருந்தன. ஏர்நிலம் அமைப்பினால் 20 குடும்பங்களிற்கான பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், 2400 ரூபா பெறுமதியான பொதிகள் 70 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.



குறித்த பயனாளிகள் தெரிவில் குளறுபடி இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களின் பெயர் குறித்த பட்டியலில் தெரிவாகவில்லை எனவும், அத்தியவசியமாக தேவையுடன் இருந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.



குறித்த பட்டியலில், வறுமையில் உள்ளவர்கள், தற்காலிக வீடுகளில் உள்ளோர், வெள்ளத்தை எதிர்கொண்ட பலர் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை பல பகுதிகள் பார்வையிடப்படவில்லை எனவும் மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



இவ்விடயம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் அகிலனின் கவனத்திற்கு பலமுறை கொண்டு செல்லப்பட்டபோதிலும் அவர் அசண்டையீனமாக செயற்படுவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வெள்ளம், வரட்சி போன்ற காலப்பகுதியில் இவ்வாறான மோசடிகளும், குளறுபடிகளும் இடம்பெறுகின்ற சந்தர்ப்பத்திலும் பிரதேச மக்களால் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் அகிலனின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.



குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி பயனாளி தெரிவிலும் இவ்வாறு மோசடி இடம்பெற்றிருந்தது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராசாவின் கிராம மட்ட செயற்பாட்டாளராக இருந்த ஒருவர் அரச பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் 18 மாதங்களாக சமுர்த்தியும் வழங்கப்பட்டு வந்தமை தொடர்பிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. குறித்த சம்பவம் தொடர்பிலும் மக்கள் மத்தியில் இன்று பேசப்பட்டு வருகின்றது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை