Skip to main content

மக்களின் வணக்க நிகழ்வை தடுக்க முனைவது பொருத்தமற்ற மனநிலையின் வெளிப்பாடு - வேழமாலிகிதன்

Nov 21, 2020 219 views Posted By : YarlSri TV
Image

மக்களின் வணக்க நிகழ்வை தடுக்க முனைவது பொருத்தமற்ற மனநிலையின் வெளிப்பாடு - வேழமாலிகிதன் 

மக்களின் வணக்க நிகழ்வை தடுக்க முனைவது பொருத்தமற்ற மனநிலையின் வெளிப்பாடு என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்தள்ளார்.



கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை 08.30மணியளவில் கரைச்சி பிரதேச சபை தவிசாளரின் அலுவலக அறையில் இடம்பெற்றது. இதன்போது படையினரின் கெடுபிடிகள் காணப்படுவது தொடர்பில் கடந்த காலங்களில் தமிழ் தேசிய கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தனர். தற்போது காவல்துறையினரின் சிவில் நிர்வாக நடவடிக்கைகளே இடம்பெறுகின்றது. இந்த நிலையில் இங்கு சிவில் நிர்வாகம் ஒன்று இடம்பெறுவதை ஏற்றுக்கொள்கின்றீர்களா என ஊடகவியலாளர் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



கிளிநொச்சி தலைமை காவல்துறையினரால் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட தடையுத்தரவு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த தடையுத்தரவின்படி தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகளில் எந்தவொரு நிகழ்வுகளிலும் பங்கு பற்ற கூடாது எனும் வகையில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விளக்குற்றல் என்ற விடயமும் சாராம்சத்திலே உட்புகுத்தப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவ்விடயங்கள் தடை செய்யப்பட்ட விடயமாக இருக்கின்றது.



குறிப்பாக சொன்னால் நினைவுகூருதல் என்பது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் உள்ள செயன்முறையாக அந்த கட்டளையிலே பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் கொள்ளப்பட்டுள்ளார்கள் என்று சொல்லி சௌபாக்கியா அமைச்சரின் அறிக்கை தெரிவிப்பதாக காவல்துறையினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருக்கின்றார்கள். அந்த அறிக்கையின் படியும் நிகழ்வுக்கான தடையுத்தரவினை எதிர்வரும் 29.11.2020 வரை அமுலில் இருக்கும் வகையில் தடையுத்தரவு தரப்பட்டுள்ளது. 



இந்த மாவீரர் நாள் என்பது இடம்பெற்ற யுத்த காலத்தில் உயிரிழந்த தாய்மாரின் புதல்வர்கள், புதல்விகளை நினைவு கூரும் நாள். இந்த நினைவு நாளினை நடத்தக்கூடாது என அறிவித்திருப்பதன் ஊடாக அதனை பயங்கரவாத தடைச்சட்டத்துடன் இணைந்த வகையில் அரசாங்கம் வேறுபட்ட செய்தியை மக்களிற்கு சொல்வதாகவே நான் உணர்கின்றேன். கடந்த 4 ஆண்டுகள் இதே துயிலுமில்லங்களில் விளக்கேற்றி மக்கள் அழுது தமது உறவுகளை நினைவுகூர்ந்த நிகழ்வுகள் இடம்பெற்றது. அப்பொழுதும் இலங்கையின் அரசியலமைப்பு இதுவாகதான் இருந்தது. அப்பொழுதும் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் இருந்தது. அந்த காலத்தில் இருந்த அரசாங்கம் அதனை சரியான முறையிலே கையாண்டு தேசிய பாதுகாப்புக்கு எவ்வித பங்கமும் இல்லாமல் வணக்க நிழ்வுகளை நடார்த்துவதற்கு அனுமதியை வழங்கியிருந்தது.



அந்த காலப்பகுதியில் எந்தவொரு பயங்கரவாத மீள் எழுச்சி செயல்களும் இடம்பெறவில்லை. அக்காலகட்டத்தில் தமது உறவுகளை நினைத்து அழுது ஆற்றுப்படுத்தும் வகையில் நிகழ்வுகள் இடம்பெற்று வந்துள்ளது.இதே காவல்துறையினர் அனுமதிகளை வழங்கியிருக்கின்றார்கள். இதே மாவட்ட நீதிமன்றங்கள் பல அதற்கான அனுமதிகளை வழங்கியுள்ளது. அன்று நீதிமன்றம் அனுமதித்திருந்தது. இதே காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கியுள்ளனர். ஆனால் இன்று அவர்கள் தடுத்துள்ள நிலைமையை நாங்கள் பார்க்கின்றோம்.



இதனை நீதித்துறையின் தவறாக நான் காணவில்லை. ஆட்சியாளர்கள் எதை நினைக்கின்றார்களோ அதை பிரதிபலிக்கின்ற செயன்முறையாகதான் நான் பார்க்கின்றேன். ஆட்சியாளர்கள் இதை தடுக்கின்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கின்றதனாலே அதனுடைய பணிப்புகளால்தான் இந்த விடயங்கள் இடம்பெற்றுள்ளது. 2016ம் ஆண்டு 26ம் திகதி 12ம் மாதம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மாவீரர் துயிலுமில்லங்கள் அமைந்திருந்த காணிகளை பிரதேச சபைகளிடம் கையளிக்க வேண்டும் என எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவும், அதன் பின் நடைபெற்ற காணி பயன்பாட்டுக்குழுவின் அனுமதிக்கு அமையவும் பிரதேச சபைகளினுடைய தாவரவியல் பூங்காவிற்கு என்று கையளிக்கப்பட்டிருக்கின்றது.



அந்த பிரதேசத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டிருக்கின்றது. அரசின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியின் ஊடாகவும், பிராந்திய அபிவிருத்தி உட்கட்டமைப்பு நிதியின் ஊடாகவும் எல்லைப்புற சுவர்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே அரசாங்கத்தின் நிதிகள்கூட இந்த துயிலும் இல்லங்களில் செய்யப்பட்டுள்ளது. இத்தனையும் செய்யப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டும், அந்த பராமரிப்பின் ஊடாக எந்தவொரு பயங்கரவாத மீள் எழுச்சியோ அல்லது தேசிய பாதுகாப்புக்கெதிராக எந்த செயலும் இடம்பெறாத போது சாதாரண மக்களின் வணக்க நிகழ்வை தடுக்க முனைவது பொருத்தமற்ற மனநிலையின் வெளிப்பாடாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.



இதேவேளை துயிலுமில்ல வளாகங்களை துப்பரவாக்கல் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தபோது காவல்துறையினரால் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அங்கு வருகை தந்திருந்தவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்ற வகையில் சுகாதார தரப்புக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது துயிலுமில்லங்கள் அமைந்துள்ள பகுதிகளில்  காவல்துறையினர் வீதி தடைகளை அமைத்து வருகின்றனர். இதேபோன்று மே மாதம் கிளிநொச்சி டிப்போ சந்தியில் உயிரிழந்தவர்களிற்கான நினைவு தூபி ஒன்றை அமைக்க எடுத்த முயற்சிக்கு இடையூறு ஏற்படுத்தம் வகையில் வீதி தடைகள் அமைக்கப்பட்டு பசுமை பூங்கா அமைந்திருந்த பகுதியை பாதுகாப்பதாக நீண்ட காலம் செயற்பட்டார்கள். அதேபோன்று தற்போது துயிலுமில்லங்கள் அமைந்தள்ள பகுதிகளிலும் இவ்வாறு வீதி தடைகளை அமைத்து தடைகளை ஏற்படுத்துவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.



கடந்த காலங்களில் படையினர் இவ்வாறான நினைவேந்தல் நிகழ்வுகளிற்கு தடைகளை ஏற்படுத்துகின்றார்கள் என்ற குற்றச்சாட்டினை தமிழ்த் தேசிய கட்சிகள் முன்வைத்தனர். ஆனால் இன்று சிவில் கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும் காவல்துறையினர் தடை உத்தரவுகளை பெற்று வருவதாக தெரிவிக்கின்றீர்கள். தற்போது இப்பிரதேசங்களில் சிவில் நிர்வாகம் இடம்பெறுவதாக ஏற்றுக்கொள்கின்றீர்களா என ஊடவியலாளர் வினவினார். அதற்கு பதில் அளித்த வேழமாலிகிதன், சிவில் நிர்வாகத்தை காவல்துறையினர் கொண்டு நடத்துகின்றார்கள் என்பது வேறுபட்டது. ஒரு பார்வையிலே காவல்துறையினர் நடைமுறையிலே செயற்படுவது சிவில் நிர்வாகத்தை பிரதிபலிப்பதாக இருந்தாலும், இன்று இருக்கக்கூடிய ஆட்சியாளர்களின் மன நிலையை பிரதிபலிக்கின்ற திணைக்களங்களாகவே சட்டமும் ஒழுங்கும் இங்கே இருப்பதாக நாங்கள் காண்கின்றோம்.இதே காவல்துறையினர் சிவில் நிர்வாகத்திலே ஈடுபடுகின்றார்கள் என்று சொன்னால் கடந்த வாரம் கொரோனா வைத்தியசாலை கிருஸ்ணபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டபோது சிறிய அறைக்குள் 200 பேர்வரை அமர்ந்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.



கடந்த மாதம் 6ம், 8ம் திகதிகளில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சர்கள் தலைமையிலான கூட்டங்களிற்கு 250 பேர் அந்த அறைகளிலே கூடியிருந்தோம். அப்பொழுது தடுப்பதற்கு வருகை தந்த காவல்துறையினர் அந்த கூட்டங்களிலே கலந்து கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆகவே சிவில் நிர்வாகம் என்பது அரசையும், அரசோடு இயங்கும் இயந்திரங்களையும் பாதுகாக்கின்ற ஓர் செயல்முறையாக அல்லது அரசின் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற நிறுவனமாக மாற்றப்பட்டிருக்கின்றதே தவிர அது மக்களுடைய விருப்பங்களிற்கு அல்லது இருக்கக்கூடிய இயல்பு சட்டங்களை மக்களிற்கு வழிவிடுகின்ற வழிமுறைகளை அது கொண்டிருக்கவில்லை. ஆகவே இப்பொழுது காவல்துறையினர் கூட இந்த விடயங்களிலே அரசாங்கத்தினுடைய எண்ணங்களை பிரதிபலிக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இது உண்மையான சிவில் நிர்வாகத்தினுடைய வெளிப்பாடாக அமைந்திருக்கவில்லை என அவர் தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை