Skip to main content

கொரோனா பரிசோதனையையும், செரோ சர்வேயையும் அதிகரிக்க வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி

Oct 16, 2020 203 views Posted By : YarlSri TV
Image

கொரோனா பரிசோதனையையும், செரோ சர்வேயையும் அதிகரிக்க வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி 

நாடு முழுவதும் பரவலாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்து வருகிறது. இந்த தருணத்தில், கொரோனா வைரசுக்கு எதிரான ஆராய்ச்சி, தடுப்பூசி உருவாக்குதல் பற்றிய உயர்மட்ட ஆய்வு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.



பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன், நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்), முதன்மை அறிவியல் ஆலோசகர், மூத்த விஞ்ஞானிகள் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது தொடர்ச்சியான, கடுமையான அறிவியல் சோதனை, பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகள் ஆகியவற்றை தொடர்ந்து மேற்கொள்ளவேண்டியதின் அவசியத்தை அடிக்கோடிட்டு காட்டினார்.



இந்த கடினமான நேரத்தில் ஆதாரங்கள் அடிப்படையாக கொண்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும், நம்பகமான தீர்வுகள் வழங்குவதற்காகவும் அவர் ஆயுஷ் அமைச்சகத்தின் முயற்சிகளை மனம் திறந்து பாராட்டினார்.



தொடர்ந்து பேசும்போது அவர், “இந்தியாவுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகுக்குமான குறைந்த செலவிலான, எளிதில் கிடைக்கக்கூடிய பரிசோதனைகளை, சிகிச்சைகளை, தடுப்பூசிகளை, விரைவாக வழங்குவதற்கான உறுதிப்பாடு வேண்டும். சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருப்பதோடு, கொரோனா பரிசோதனைகளையும், செரோ சர்வேக்களையும் அதிகரிக்க வேண்டும். பெருந்தொற்றுக்கு எதிராக அதிகளவிலான ஆயத்த நிலை அவசியம்” என வலியுறுத்தினார்.



இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உருவாக்குவோர் மற்றும் தயாரிப்போரின் முயற்சிகளை பாராட்டிய பிரதமர் மோடி, இது போன்ற அனைத்து முயற்சிகளுக்கும் அரசின் வசதிகளையும், ஆதரவையும் தொடர உறுதி அளித்தார்.



தடுப்பூசிகளுக்கான சுகாதார அமைச்சகத்தின் வினியோகம், வினியோக முறைகள், போதுமான கொள்முதல் செய்வதற்கான வழிமுறைகள், தடுப்பூசிகளை சேமித்து வைப்பதற்கான தொழில் நுட்பங்கள், வினியோகத்துக்கான குப்பிகளை நிரப்புதல், பயனுள்ள வினியோகத்தை உறுதி செய்தல் போன்றவற்றையும் அவர் ஆய்வு செய்தார்.



கொரோனா பரிசோதனையை அதிகரிப்பதின்மூலம் தொற்றுநோய் பரவலை அதிகளவில் கட்டுப்படுத்த முடியும், செரோ சர்வே மூலம் தொற்று பரவல் அளவு, தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்புச்சக்தி மக்களிடம் எந்தளவுக்கு ஏற்பட்டு இருக்கிறது என்பதை அளவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை